full screen background image

மனிதன் தெய்வமாகலாம் – சினிமா விமர்சனம்

மனிதன் தெய்வமாகலாம் – சினிமா விமர்சனம்

நடிகர்கள் :

ராகவனாக – செல்வராகவன்
செல்வியாக – குஷி ரவி​
குமாரசாமியாக – ஆர்.எஸ்.சதீஷ்
மரகதமாக – கௌசல்யா
இன்பராஜாக – மைம் கோபி
பார்த்திபனாக – ஒய்.ஜி.மகேந்திரா
அமுதாவாக – லிர்த்திகா
சங்கராக – சேலம் தீபக்

தொழில் நுட்ப வல்லுநர்கள் :

இயக்கம் – டென்னிஸ் மஞ்சுநாத்
தயாரிப்பு – விஜய சதீஷ்
ஒளிப்பதிவு இயக்குனர் – ரவி வர்ம்
இசை – ஏ.கே.பிரியன்
எடிட்டர் – தீபக்.எஸ்
கலை இயக்குனர் – பாக்கியராஜ் வெள்ளையன்
ஸ்டண்ட்ஸ் – மான்ஸ்டர் முகேஷ்
நிர்வாக தயாரிப்பாளர் – தேனி தமிழ்
தயாரிப்பு மேலாளர் – அசோக் நிவேதா
பாடல் வரிகள் – விக்னேஷ் ராமகிருஷ்ணா, முவி, எஸ்.வி.மலை
கோரியோகிராபி – அஜர்
காஸ்ட்யூமர் – கதிரவன்
ஒப்பனை – ஏ.பி. முகமது
புகைப்பட வெள்ளம் – சுப்ரமணி
காஸ்டிங் டைரக்டர் – ஸ்வப்னா ராஜேஸ்வரி
பத்திரிக்கை தொடர்பு – ரேகா

ஒரு பெரிய கெட்ட காரியத்தை தடுத்து நிறுத்துபவன், ஒருவரின் வாழ்க்கையை புரட்டிப் போடக் கூடிய ஒரு நிகழ்வில் நல்லது செய்பவன், தன்னை சுற்றி இருக்கும் அத்தனை பேருக்கும் நல்லது ஒன்றை மட்டுமே செய்து கொண்டிருப்பவன்… இப்படி வகை வகையாக நல்லவன் என்று பெயர் எடுப்பவனை எல்லாம் “நீ தெய்வம்டா” என்று உணர்ச்சி பொங்க அழைப்பது நமது பண்பாட்டு நிகழ்வு.

அப்படி ஒரு நிகழ்வை நடத்தும் நாயகனின் கதைதான் இந்த ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் கதை கரு.

சேலம் அருகில் இருக்கும் பொன்வயல் என்ற கிராமத்தில் அப்பா, அம்மா இல்லாத அனாதையாக வளர்ந்தவர் செல்வராகவன். அவர் இப்போது தன்னுடைய உறவினரான அண்ணன் ஒருவருடன் சாலையோரமாக நுங்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். திருமண வயதை தாண்டியும் பெண் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கும் அவருக்கு ஒரு பெண் கிடைத்துவிட்டார்.

நாயகி குஷி ரவி, செல்வராகவனை பார்த்துவிட்டு அவரை திருமணம் செய்து கொள்வதாக சொல்ல இருவருக்கும் திருமணம் நடந்தேறுகிறது. திருமணத்திற்கு பின்பு “ரோட்டோரமாக நுங்கு கடையே நடத்தி அதில் ஒரு நாளைக்கு வருகின்ற 200 ரூபாய் 150 ரூபாய் வைத்து எப்படி குடும்பம் நடத்துவது.. மேற்கொண்டு ஏதாவது பிசினஸ் செய்யலாமே?” என்று மனைவி சொல்ல, செல்வராகவன் யோசிக்கிறார்.

அவரது அண்ணனும் அவரும் இணைந்து ஒரு ஹோட்டல் நடத்தலாம் என்ற முடிவு எடுக்கிறார்கள். சாலையோரத்தில் ஒரு முக்கிய பகுதியில் “செல்வி ஹோட்டல்” என்று தன் மனைவியின் பெயரிலேயே ஒரு ஹோட்டலை ஆரம்பிக்கிறார் செல்வராகவன்.

அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மைம் கோபி. அவர் ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறார். அந்த தொழிற்சாலையில் அந்த ஊர் பெண்கள் பலரும் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் பணம் கடன் உதவி கேட்டால் மைம் கோபி கொடுப்பார். ஆனால் வட்டி வரவில்லை என்றால் வீட்டிற்கு வந்து தகராறு செய்வார். அவரது இன்னொரு கொடூர முகம் அவரிடம் பணத்தை வட்டிக்கு வாங்கிய பெண்களுக்கு மட்டும்தான் தெரியும்.

இந்த நேரத்தில் திடீரென்று ஒரு நாள் செல்வராகவனின் மனைவி தற்கொலை செய்து கொள்கிறார். ஏன்.. எதற்கு.. எப்படி.. என்பதே தெரியாமல் தன் காதல் மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் தவிக்கிறார் செல்வராகவன்.

அப்பொழுது இவருடைய அண்ணன் மனைவியான கௌசல்யா சில விஷயங்களை சொல்ல அப்போதுதான் உண்மை என்ன என்பது செல்வராகவனுக்கே தெரிகிறது.

இதற்கு பின்பு என்ன நடந்தது? செல்வராகவன் என்ன செய்தார்? மறுபடியும் ஓட்டல் தொழிலை நடத்தினார்களா.. இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

செல்வராகவனுக்குப் பொருத்தமான கேரக்டர்தான் கிடைத்துள்ளது. அவருடைய முகம், உடல் வாகு, குட்டையான அவரது உருவமும்.. இப்படி ஒரு முகத்தை வைத்துக் கொண்டு பொண்ணு எப்படி கிடைக்கும் என்றெல்லாம் நம்மை சொல்ல வைக்கும் அளவுக்கு செல்வராகவனை இந்தப் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

அவர் அமைதியாக பேசும் பொழுது இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைக்க வேண்டுமே என்று எண்ணம் வரும் அளவுக்கு நடித்திருக்கிறார், சிறு சில இடங்களில் அவரது நடிப்பு மற்ற நடிகர்களைப் போல மாறுகிறது. இந்த இடத்திலெல்லாம் இயக்குநர் செல்வாவின் நடிப்பு மீட்டரை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

ஆனாலும் மனைவி மீதான காதல், ரொமான்ஸ், அவருடைய கோபம், தாபம், ஆத்திரம் என்ற அத்தனை கலவையும் சார்ந்த தன்னுடைய நடிப்பை பல இடங்களில் காண்பித்து இருக்கிறார் செல்வராகவன்.

இவருடைய மனைவியாக நடித்திருக்கும் குஷி ரவி ரொம்பவும் அழகல்ல.. ஆனால், கேமராவுக்கு ஏற்ற முகம். கொஞ்சம் வயதானவர்போல தெரிவதுதான் படத்திற்கு கிடைத்த பிளஸ் பாயிண்ட். இவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

மைம் கோபியுடன் வாக்குவாதம் செய்யும் இடத்திலும் அதற்கு பின்னான காட்சிகளிலும் அவருடைய நடிப்பு அவருடைய கதாப்பாத்திரத்தை ரொம்பவே உயர்த்தி இருக்கிறது.

செல்வாவின் அண்ணனாக நடித்த சதீஷ், இவரது மனைவியாக நடித்த கௌசல்யாவும்கூட ஒரு சிறப்பான நடிப்பை காண்பித்திருக்கிறார்கள். அதிலும் கௌசல்யாவை இந்த வயதில் இந்தப் படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் இவரைப் பார்த்தது ஒரு இனிய அதிர்ச்சிதான்.

மைம் கோபி மிக நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் வில்லனாகி இருக்கிறார். அவருடைய அந்த ஒரு பார்வையே அவருடைய வில்லத்தனத்தை அழகாக காட்டுகிறது. இறுதியில் அந்த சண்டை காட்சியில்கூட அவருடைய வில்லத்தனத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

அதிசயமாக ஒய்.ஜி.மகேந்திரன் நல்லதொரு அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இப்படி ஒரு அரசியல்வாதியை இப்போது தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனாலும், அவருடைய கட்சித் தலைவருக்கான கெத்தும் அவருடைய நடிப்பும் அவருடைய கேரக்டரை சிறப்பு செய்திருக்கிறது.

மேலும் அந்த ஊர் மக்களாக நடித்த அனைவருக்கும் நமது பாராட்டுக்கள். இயக்குநர் மிகச் சிறப்பான தன்னுடைய இயக்கத்தினால் அனைவரையும் சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார்.

அந்த ஊர் போக்குவரத்து வசதி இல்லாத ஒரு இடம். அதையும் படத்தில் அழகாக காட்டி இருக்கிறார்கள். ஒரு கிராமத்து கதை என்பதோடு கிராமத்தில் இருக்கும் அந்த எளிமையான வீடுகளையும், இரவு நேரத்தில் ஒரு சின்ன வெளிச்சத்தை மட்டுமே வைத்து சிறந்த ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மா.

இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். உண்மையாகவே இந்த படத்தில் வரும் பாடல்கள் வரிகளை அனைவரும் உச்சரிப்பது போல செய்திருப்பது பாராட்டுக்குரியது. இப்போதைய திரைப்படங்களில் அது மாதிரியான காட்சிகள் இல்லாமல் வெறும் மாண்டேஜ் ஷாட்ஸ்களாக வைக்கிறார்கள். அப்படி இருக்க இந்தப் படத்தின் இசை ஒரு தனி அடையாளமாக வந்திருக்கிறது.

படத்தில் அடுத்தடுத்த காட்சிகளை வேகமாக நகரும்படி வைத்து இடைவேளைக்கு பின்பு பரபரப்பாக போகும் வகையில் முன் பின்னான காட்சிகளை அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் படத் தொகுப்பாளர் எஸ்.தீபக்.

ஒரு கிராமத்து வாழ்வியலை அழகாக சொல்லி இருக்கும் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அந்த மக்களின் அப்பாவித்தனத்தையும், அவர்களின் ஏழ்மையையும்… எப்படியெல்லாம் இந்த மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

பணம் என்ற ஒரு வஸ்துவை காட்டி, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து நடக்கின்றன என்பதை இந்தப் படமும் ஒரு 1001-வது படமாக சொல்லி இருக்கிறது.

ஒரு எளிய மனிதன் தன் விருப்பப்படி எளிமையாக வாழ்கிறான் என்றாலும், என்றோ ஒரு நாள் அவனுடைய பொருளாதார நிலைமை அவனது வாழ்க்கையை புரட்டி போடும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

நமக்குத் தெரிந்த நம்முடைய கதையையே இந்தப் படத்தில் அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்.

கொஞ்சம் ஓவரான சோகத்தை கொடுத்து விட்டாரோ என்று ஒரு பக்கம் நினைக்கும்பொழுது இன்னொரு பக்கம் கொஞ்சம் லாஜிக் மீறல்களையும் அனாயசமாக தாண்டி சென்று இருக்கிறார் இயக்குநர்.

ஹீரோயின் தற்கொலை என்று சொல்லிவிட்டு வெளியில் யாரிடமும் சொல்லாமல் அவர்களாகவே அவரை அடக்கம் செய்வதெல்லாம் கொஞ்சம் ஏற்க முடியாத காட்சிதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தின் வட மாவட்டத்தின் ஒரு ஊரில் ஒரு கந்து வெட்டி மைனர் தன்னிடம் கடன் கேட்ட.. வாங்கிய பல இளம் பெண்களை குடும்ப பெண்களை தன்னுடைய பண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து வட்டிக்கு பதிலாக என்னுடன் உறவு வைத்துக் கொள் என்று மிரட்டி உறவு வைத்து பலாத்காரம் செய்து வந்தான்.

அதையும் செல்போனில் படமெடுத்து வைத்துக் கொண்டு கூப்பிடும்போதெல்லாம் வர வேண்டும் என்று அவர்களை மிரட்டி வந்தான். அவனுடைய கெட்ட நேரம்.. அவனுடைய போனை சர்வீஸ் செய்ய கொடுத்த கடையில் இருந்து பல ஆபாச வீடியோக்கள் வரிசையாக வெளியாக ஒட்டு மொத்த தமிழ்நாடும் அதிர்ந்து போனது.

இந்த கந்துவெட்டி மைனர் கைது செய்யப்பட்டு இப்போது தண்டனை குற்றவாளியாக சிறையில் காலம் கழித்து வருகிறார். அந்தக் கதைகளில் இருந்து ஒரு பகுதியை அழகாக எடுத்து இந்தப் படத்தில் அதே உயிர்ப்புடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்.

கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இந்தப் படம் நிச்சயமாக இருக்கும். அதிகமாக கிராமப்புறங்களில் இந்தப் படத்தை திரையிட வேண்டிய பொறுப்பு தயாரிப்பாளருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இருக்க வேண்டும்.

செய்வார்களா என்று தெரியவில்லை; செய்தால் நன்றாக இருக்கும்.

RATING : 3.5 / 5

Our Score