தமிழ் சினிமாவில் பொழுதுபோக்குடன் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு.
அந்த வரிசையில் மருத்துவ உலகின் மறுபக்கத்தை மனிதநேய பார்வையில் பதிவு செய்து மருத்துவ விழிப்புணர்வு, குடும்ப உறவுகள் மற்றும் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் புதிய திரைப்படமாக உருவாகியுள்ளது ‘செய்; செய்யாதே’.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான H. ராஜா இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது திரைப்படத்திற்கு தனித்துவமான கவனத்தை ஈர்த்துள்ளது.
கதையின் முக்கியமான கட்டத்தில் இடம் பெறும் அவரது கதாபாத்திரம் படத்தின் கருத்தை மேலும் வலுப்படுத்தும்விதமாக அமைந்துள்ளதாக படக் குழு தெரிவித்துள்ளது.
ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் (HARINI SUBBU CINE CREATIONS ) தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பி.எஸ்.சி. நர்சிங் பட்டதாரி சுப்புலட்சுமி ஜெயராம் (SUBBULAKSHMI JEYARAM ) தயாரித்துள்ளார்.
சமூகத்திற்கு பயனுள்ள கருத்துகளை வணிக அம்சங்களுடன் இணைத்து தரமான திரைப்படமாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இவர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை மருத்துவரும் திரைப்பட இயக்குநருமான டாக்டர். எஸ். ராஜா (Dr. S. RAJA) கவனித்துள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவில் மருத்துவத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை திரைப்பட மொழியுடன் இணைத்து மருத்துவத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சிந்திக்க வைக்கும் படைப்பாக இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
கதாநாயகனாக குரு விஜய் மருத்துவ விழிப்புணர்வு, மனிதநேயம் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதையின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
உணர்வுகளும், பொறுப்புணர்வும் கலந்த அவரது கதாபாத்திரம் திரைப்படத்தின் மையக் கருத்தை இயல்பாக முன்னெடுத்துச் செல்கிறது.
இன்றைய சமூகத்தில் உடல்நலப் பிரச்சினைகளை அலட்சியமாக எடுத்துக் கொள்வது, சுயமாக மருந்துகளை பயன்படுத்துவது, இணையத் தகவல்களை மட்டுமே நம்பி மருத்துவ முடிவுகளை எடுப்பது, போதைப் பொருள் மற்றும் மயக்க மருந்துகளின் தவறான பயன்பாடு போன்ற பல்வேறு சவால்கள் அதிகரித்து வருகின்றன.
இவற்றை வெறும் அறிவுரைகளாக அல்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் சிந்திக்க வைக்கும் முயற்சியாக இந்த ‘செய்; செய்யாதே’ படம் உருவாகியுள்ளது.
இந்தப் படம் மருத்துவர்களைப் பற்றிய கதை மட்டுமல்ல; ஒரு நோயாளியின் வாழ்க்கையைச் சுற்றி இயங்கும் முழு மருத்துவ அமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமூகப் படைப்பாகவும் அமைகிறது.
நோயாளி, மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அரசு சுகாதார அமைப்பு என ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஒரு உயிரைக் காப்பாற்றுவதில் எவ்வளவு முக்கியமானது என்பதை படம் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்கிறது.
மருத்துவம் என்பது சிகிச்சை மட்டுமல்ல. அது மனித நேயம், நம்பிக்கை, பொறுப்பு, கருணை மற்றும் குழு ஒருங்கிணைப்பின் வெளிப்பாடு என்பதையும் திரைப்படம் வலியுறுத்துகிறது.
படத்தின் காட்சிகள் அனைத்தும் மிகவும் பிரம்மாண்டமாகவும் இயல்பாகவும் படமாக்கப்பட்டுள்ளன.
இத்திரைப்படம் திருநெல்வேலி, கொடைக்கானல், மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இயற்கை எழில் கொஞ்சும் வட்டாரங்களில் முழுவீச்சில் படமாக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.
மேலும் இத்திரைப்படம் ₹4 கோடி பட்ஜெட்டில் மிகத் தரமான தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்போடு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தில் குரு விஜய்யின் தந்தையாக டாக்டர். எஸ். ராஜா தோன்றுகிறார். அவருக்கு தாயாராக தர்ஷினி ரெட்டி நடித்துள்ள நிலையில் கதாநாயகிகளாக டபிதா குணரத்தினே மற்றும் மோனிகா ப்ரீத்தி வி ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் குரு விஜய்யின் தங்கையாக குழந்தை நட்சத்திரம் பிரதீக்ஷா மனோ பிரஷாந்த் நடித்துள்ளார்.
திரைப்படத்தின் காட்சியமைப்புக்கு ஒளிப்பதிவாளர் ராம்நாடு. வாசு பி தனது ஒளிப்பதிவின் மூலம் தனித்துவமான காட்சியழகை வழங்கியுள்ளார்.
‘பருத்தி வீரன்’ திரைப்படத்திற்காக தேசிய திரைப்பட விருது பெற்ற முன்னணி படத் தொகுப்பாளர் ராஜா முகமது படத் தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
இத்திரைப்படம் பற்றி இயக்குநர் டாக்டர். எஸ். ராஜா பேசும்போது,
“ஒரு மருத்துவராக நான் மருத்துவமனையில் பல வாழ்க்கைகளையும், பல உணர்வுகளையும் நேரில் பார்த்திருக்கிறேன்.
அந்த அனுபவங்களை வெறும் மருத்துவத் தகவல்களாக அல்லாமல் மக்கள் மனதில் எளிதாகப் பதியும் வகையில் சினிமா மூலம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம்தான் இந்த ‘செய்; செய்யாதே’ படத்தை உருவாக்கத் தூண்டியது.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொரு பார்வையாளரும் ஆரோக்கியம், மனித நேயம் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து சிந்தித்தால் அதுவே இந்தப் படைப்பின் மிகப் பெரிய வெற்றி.
தயாரிப்பு – ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் (சுப்புலட்சுமி ஜெயராம்).
கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் : டாக்டர். எஸ். ராஜா.
நடிப்பு:
டாக்டர். எஸ். ராஜா, H. ராஜா (சிறப்புத் தோற்றம்), குரு விஜய், தர்ஷினி ரெட்டி, டபிதா குணரத்தினே, மோனிகா ப்ரீத்தி வி, பிரதீக்ஷா மனோ பிரஷாந்த் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – ராம்நாடு. வாசு பி, படத் தொகுப்பு – ராஜா முகமது (தேசிய விருது பெற்றவர்).
பத்திரிக்கை தொடர்பு – சிவக்குமார்.









