full screen background image

‘சீமராஜா’ – சினிமா விமர்சனம்

‘சீமராஜா’ – சினிமா விமர்சனம்

24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாகவும், சமந்தா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ரஞ்சனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியெம், படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன், இசை – டி.இமான், கலை இயக்கம் – முத்துராஜ், மக்கள் தொடர்பு, சுரேஷ் சந்திரா, ரேகா, எழுத்து, இயக்கம் – பொன்ராம்.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கும் 11-வது படம் இது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ படங்களுக்குப் பிறகு பொன்ராம் இயக்கும் 3-வது திரைப்படமும் இதுவே.

முந்தைய சிவகார்த்திகேயனின் படங்களைவிடவும் இந்தப் படத்தில் அதீதமான ஹீரோயிஸமும், சிவகார்த்திகேயனை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி, ‘உலக நாயகன்’ கமல்ஹாசன், ‘தளபதி’ விஜய், ‘தல’ அஜீத் ரேன்ச்சுக்கு உயர்த்தும்வகையிலான காட்சியமைப்புகள் அதிகம் இருப்பது எதிர்பார்க்காத விஷயம்.

சிங்கம்பட்டி ஜமீனின் தற்போதைய இளைய வாரிசு சீமராஜா என்னும் சிவகார்த்திகேயன். பெரிய ராஜாவான ‘அரியராஜா’ என்னும் நெப்போலியன் மற்றும் தன் அம்மாவான ரஞ்சனியுடன் அரண்மனையில் வசித்து வருகிறார்.

தற்போதைக்கு தன்னைத் தேடி வரும் நல்லது, கெட்டதுகளில் கலந்து கொண்டும், கட்டப் பஞ்சாயத்துக்களில் சிங்கம்பட்டி மக்களுக்கு நல்லது கிடைக்கும்படியாக நடந்து கொள்வதுதான் இந்த சீமராஜாவின் அன்றாட வேலை.

இவருக்கு ஒரு அல்லக்கை. சூரி. ‘சமஸ்தானத்தின் கணக்குப் பிள்ளை’ என்று பெயர். இவருக்கு மூன்று மனைவிகள். அனைவருமே ஒரே வயதுதான். சீமராஜாவை யாராவது வாழ்த்திப் பேசினால் அவர்களுக்கு பணம் தந்து நன்றி சொல்ல வேண்டியது இவருக்கான வேலை.

தான் வளர்த்து வரும் புறாவைக் காணவில்லை என்றும், அதனைக் கண்டுபிடிக்க தங்களது பரம்பரை எதிரி ஊரான புளியம்பட்டிக்குள் மாறு வேடத்தில் நுழைகிறார்கள் சீமராஜாவும், கணக்குப் பிள்ளையும். ஆனால் புறாவுடன் அங்கே மயிலாக உலாத்திக் கொண்டிருக்கும் ‘சுதந்திரச் செல்வி’ என்னும் சமந்தாவையும் பார்த்துவிடுகிறார்கள்.

சீமராஜாவுக்கு சமந்தாவை பார்த்தவுடன் தற்போதைய டிரெண்ட்படி லவ்வாகிவிடுகிறது. சமந்தாவோ பள்ளிக்கூடத்தில் பி.டி. ஆசிரியர். சிலம்பத்தை குறையில்லாமல் சுழற்றும் வீராங்கனையும்கூட..!

தன்னையே சுற்றிச் சுற்றி வரும் ‘சீமராஜா’வை திராட்டிலில் விடுகிறார் சமந்தா. காதலா… இல்லையா என்பதைக்கூட சொல்லாமல் இருக்கிறார். ஆனாலும் அதற்குள் 2 டூயட்டுகள் பாடிவிடுகிறார்கள்.

இரண்டு ஊர்களுக்கும் பொதுவான சந்தை கோர்ட் தீர்ப்பால் மூடப்பட்டிருக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் அதனை உடைக்கிறார் சீமராஜா. பஞ்சாயத்து கூடுகிறது. “மல்யுத்தப் போட்டி வைப்போம். அதில் ஜெயித்தால் சிங்கம்பட்டிக்காரர்களே அந்தச் சந்தையை வைத்துக் கொள்ளலாம்…” என்கிறார் ‘கறிக்கடை கண்ணன்’ என்னும் லால்.

இவர் புளியம்பட்டியின் பெருந்தலை. இவரது இரண்டாவது மனைவியான ‘காளீஸ்வரி’ என்னும் சிம்ரன் அடாவடி பார்ட்டி. காற்றாலை வைக்க வந்த தொழிலதிபர்களிடத்தில் நிலம் வாங்கிக் கொடுத்தே பெரும் கோடீஸ்வரனாகிவிட்டார் லால். இப்போது இவர்தான் சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தின் ஜென்மப் பகையாளர்.

சொன்னது போலவே மல்யுத்தப் போட்டியில் ஜெயிக்கிறார் சீமராஜா. ஆனால் அதே சந்தையில் பாதிக்குப் பாதி இடங்களை புளியம்பட்டிக்காரர்களுக்கும் விட்டுக் கொடுத்து நல்ல பெயரை எடுக்கிறார் சீமராஜா.

தான் தோல்வியடைந்த கோபத்தில் கொந்தளிப்பில் இருந்த லால் சமந்தாவை ‘தன்னுடைய மகள்’ என்று சொல்லி இழுத்துப் போகிறார் லால். இப்போதுதான் சீமராஜாவுக்கே சமந்தாவின் கதை தெரிகிறது. சீமராஜாவுக்கு தன் மகளை கட்டித் தர மாட்டேன் என்கிறார். வீட்டுக்குள் சமந்தாவை சிறை வைக்கிறார் லால்.

சீமராஜா என்ன செய்தார்..? அவருடைய காதல் ஜெயித்ததா..? என்பதுதான் படத்தின் மீதமுள்ள திரைக்கதை.

இந்தப் படம் மூன்று கதைகளை தன்னகத்தே அடக்கியிருக்கிறது. முதலாவதாக சீமராஜாவுக்கும், சமந்தாவுக்குமான காதல். இரண்டாவது விளைநிலங்களை விற்பனை செய்யும் அப்பாவி விவசாயிகளின் கதை.. மூன்றாவது 14-வது நூற்றாண்டில் தமிழகத்துக்குள் படையெடுத்து வந்த டெல்லி பாதுஷா அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதியான மாலிக்காபூரின் படைகளை எதிர்த்து களமாடிய சிங்கம்பட்டி ஜமீன்தாரின் கதை.. இப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத இந்த மூன்று கதைகளையும் ஒன்றாக சேர்த்து ஒரே திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.

சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்குப் பிடித்தது போன்ற காட்சிகள், நடனங்கள், பாடல்கள், பன்ச் வசனங்கள், ஹீரோயிஸ முனைப்பெடுப்பு காட்சிகள், ஹீரோயினை மட்டும்தட்டும் வசனங்கள், சூரியின் பக்கவாத ஜால்ரா வசனங்கள்.. தமிழ் மொழி, மற்றும் தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய நினைக்கும் ஹீரோவின் ஆசை அபிலாஷைகள், விவசாயிகளின் பாதுகாவலனாக காட்டிக் கொள்ளும் காட்சிகள் என்று அளவுக்கதிகமான ஹீரோயிஸம் இத்திரைப்படத்தில் கொடி கட்டிப் பறக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற வேடம்தான் என்றாலும் வழக்கம்போல நாயகியைப் பார்த்தவுடன் தேடிச் சென்று சைட் அடித்து, காதலிக்க முயன்று, வலுக்கட்டாயமாக காதலிக்க வைத்து திருமணம் செய்ய எத்தனிப்பது போன்று எத்தனை படங்களில்தான் நடக்குமோ தெரியவில்லை. அடுத்தப் படத்திலாவது கதையை மாற்றி சிவாவை யாராவது காதலிக்க துரத்துவது போல வைத்தால் அவருக்கும் நல்லது. அவருடைய ரசிகர்களுக்கும் நல்லது.

முதல் பாதியில் கவுண்ட்டர் அட்டாக் பாணியிலேயே சூரிக்கும் அவருக்குமாக நடிக்கும்  பல வசன உச்சரிப்புகள் ரசிக்க வைத்திருக்கின்றன. வாய் விட்டுச் சிரிக்க வைத்தவை கொஞ்சமே கொஞ்சம்தான் என்பது வருத்தத்திற்குரியது. நகைச்சுவை படம் என்று சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரிக்க வைக்கவில்லையென்பது யாருடைய தவறு..? இயக்குநர் பொன்ராம் கொஞ்சம் யோசிக்கட்டும்..!

இடைவேளைக்கு பின்பு வரும் ராஜா காலத்துக் கதை உண்மையிலேயே வித்தியாசமானது. எதிர்பாராதது. அந்த எபிசோடை செலவுக் கணக்கைக்கூட பார்க்காமல் உருவாக்கியிருக்கிறார் தயாரிப்பாளர். அதற்காக அவருக்கு நமது நன்றி. இப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் சிங்கம்பட்டி ஜமீனுக்கும் இப்படியொரு கதை உண்டுதான்.

அந்தப் போர்க்களக் காட்சிகளை உண்மையாகவே மிக அழகாக கிராபிக்ஸில் வடிவமைத்திருக்கிறார்கள். கடம்பவேல் ராஜாவாக சிவகார்த்திகேயன் கச்சிதமாகப் பொருந்துகிறார். மண்ணைப் பாதுகாக்கவே போர் புரிவதாகச் சொல்லும் கடம்பவேல் ராஜாவை தன் கழுத்தில் கத்தியை வைத்தான் என்பதற்காகவே கொலை செய்துவிட்டுச் செல்லும் மாலிக்காபூர், கொடுத்த வாக்கினை போலவே ஜமீனுக்குள் நுழையாமலேயே வெளியேறுகிறான்.. இதுவும் ஒரு சிறந்த கதைதான்..!

அக்காலக்கட்டத்தில் ‘வளரி’ என்னும் கொலைக் கருவியை வடிவமைத்திருந்த தமிழர்களின் போர் அறிவு பற்றிய விவரங்களையும் இத்திரைப்படத்தில் விளக்கியிருக்கிறார்கள். இதனுடைய நவீன வடிவம்தான் ‘பூமராங்’ என்னும் நவீன ஆயுதம் என்பது மறுக்க முடியாதது. அப்போதைய ராஜாக்கள் காலமானால் இறுதிச் சடங்குகள் எப்படி நடக்கும் என்பதையும் இந்தப் படத்தில் சொல்லிக் காட்டியிருக்கிறார்கள். பெருமைமிக்க தகவல்கள்..!

பார்க்கப் பார்க்கத்தான் ஒருவரை ரொம்பவே பிடிக்கும் என்பார்கள். அது சிவாவுக்கு மட்டுமே பொருந்துகிறது. காட்சிக்குக் காட்சி அழகாகவும் இருக்கிறார். தெரிகிறார். மிக இயல்பாகவும் நடித்திருக்கிறார். கதையின் போக்கில் எங்கெங்கோ இழுத்துக் கொண்டு போகப்படுவதுகூட தெரியாதவகையில் நடித்திருக்கிறார்.

இவருக்கு ஈடு கொடுத்து அலப்பறை செய்ய நினைத்து அதில் பாதியைத்தான் செய்திருக்கிறார் சூரி. இவருடைய மூன்று மனைவிகள் கேரக்டர் திரைக்கதைக்கு எந்தவிதத்தில் உதவி செய்திருக்கிறது என்று தெரியவில்லை. அதே சமயம் இது போன்ற ராஜாக்கள் கதையில் அந்தப்புரம், ‘கணக்குப் பிள்ளையே மூணு பொண்டாட்டி வைச்சிருந்தா ராஜா எவ்ளோ வைச்சிருந்திருப்பாரு..?’ என்று கணக்குப் பார்க்கும் வேலையெல்லாம் தேவைதானா..? இதனால் நமக்கென்ன பெருமையா கிடைக்கப் போகிறது..?

தோழர் சமந்தா.. வழக்கம்போல சமர்த்தாக அழகாகக் காட்சியளிக்கிறார். நடித்தும் இருக்கிறார். மல்யுத்தப் போட்டிக்கு முன்பாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும்விதமாக பேசிவிட்டுப் போய் கடைசியாக ஜெயித்தவுடன் “இப்போதுதான் எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு…” என்று இன்னும் கூடுதலாகக் குழப்புகிறார். அந்தக் குழப்புதலே தெரியாதவகையில் இருக்கிறது அவரது நடிப்பு.

டிரெஸ்ஸிங் சென்ஸில் தோழியை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. காட்சிக்குக் காட்சி கலர் கலராக டிரெஸ்ஸுகளை தோழிக்கு வாரி வழங்கி தியேட்டருக்கு வரும் வாலிப வயோதிகர்களுக்கு வைத்தியம் செய்து அனுப்பியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். அது சரி.. யார் அந்த சமந்தாவின் தோழியாக நடித்தவர்..? கவனிக்க வைத்திருக்கிறார். உடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதிக்கு இதற்காகவே ஒரு ஜே போடுவோம்..!

சிம்ரனை இந்தக் கோலத்தில் காண மனம் வலிக்கிறது. அதிலும் சில குளோஸப் காட்சிகளில் கண்களை மூடிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அத்தனை கோரமாக இருக்கிறது முகம். ஆனால் நடிப்பு.. ‘வாலி’யில் பார்த்த அதே ஆக்ரோஷம் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் செட்டப் ஸ்பீக்குதான் சரிவர ஒட்டவில்லை.

லாலும், நெப்போலியனும் அவரவர் கதாபாத்திரங்களுக்கேற்ப இயல்பாக நடித்திருக்கிறார்கள். நெப்போலியன் தன் மகனைக் கலாய்ப்பதே தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். சில வசனங்களுக்குப் பின்புதான் அதுவே நமக்குத் தெரிகிறது. ராஜா காலத்தில் சீமராஜாவின் பாட்டியாக சில வசனங்களுடன் மென்மையாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். பாராட்டுக்கள்..!

படம் நெடுகிலும் மிகப் பெரிய பட்ஜெட் படம் என்று சொல்லும் அளவுக்கு காட்சிக்குக் காட்சி மக்கள் கூட்டம். ரிச்னெஸ்.. என்று பலதையும் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குநர் பாலசுப்ரமணியெம்.

பாடல் காட்சிகளில் நீ அழகா.. நான் அழகா என்று சீமராஜவும், சமந்தாவும் ஒருவருக்கொருவர் போட்டிக் கொண்டு அழகாக இருக்க பிரயத்தனப்பட்டிருக்கிறார்கள். சமர்த்து சமந்தா கொஞ்சம் கூடுதல் அழகில் தெளிகிறார். உபயம் – ஒளிப்பதிவாளர்தான். ‘வரும் ஆனால் வராது’ பாடல் காட்சியை படமாக்கியிருக்கும்விதம் அழகோ அழகு..!

சின்னப் பிள்ளைகளுக்கும் பிடிக்கும்வகையில் சண்டை காட்சிகளை அதிக ரத்தம் சிந்தாமல், தலைவலி வராமல் படமாக்கியிருக்கிறார்கள். இதற்காக அனல் அரசுவுக்கு நமது பாராட்டுக்கள்..! ராஜா காலத்து போர் உத்தியும், போர்க்களமும், காட்சிகளும் வெகு ஜோர்..!

காற்றாலை ஏரியாவின் பரபரப்பை ஏரியல் வியூவில் காண்பித்து எத்தனை ஏக்கர் விளைநிலங்கள் இப்போது வீணாய்ப் போய் இருக்கின்றன என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.

விளைநிலங்களை விற்பனை செய்யும் விவசாயிகளின் பிரச்சினையையும் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இப்படியே பாராமுகமாக இருந்தால் விவசாயிகள் நிலத்தை விற்கத்தான் செய்வார்கள் என்பதையும் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

“கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலத்தை விற்காமல் வாடகைக்கு விடலாமே.. அதில் வாடகையை வைத்துக்கூட விவசாயிகள் பிழைத்துக் கொள்ளலாமே..?” என்று புதுவித திட்டத்தை இந்தப் படத்தின் மூலமாகச் சொல்லியியிருக்கிறார்கள் சிவகார்த்திகேயனும், பொன்ராமும்..!

ஆனால் அனைவரின் கவனமும் சீமராஜா-சமந்தா கல்யாணத்திலேயே இருப்பதால் இது பார்வையாளர்களின் மனதை பெரிதும் பாதிக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.

திரைக்கதையின் விறுவிறுப்பான ஓட்டத்தைத் தேக்கும்வகையில் இருக்கும் சில காட்சிகளை படத் தொகுப்பாளர் நீக்கியிருந்தால் படம் இன்னமும் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

டைகர் நாயை ‘சிறுத்தை’ என்று சொல்லி ஏமாற்றுவதெல்லாம் பழங்காலத்து கதை இயக்குநரே. ‘சிங்கம்’ படத்தில்கூட சூர்யா இதை வைத்து காமெடி செய்திருக்கிறார். அதில் இருந்த காமெடிகூட இதில் வரவில்லை. எதற்கு இந்த திரைக்கதை..? காதலியை மீட்பதற்கான திரைக்கதையை வேறு மாதிரி யோசித்திருக்கலாம்..!

இப்படி நிறைய ‘லாம்’கள் இருந்தும், படம் ஒட்டு மொத்தமாய் அடுத்த சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களை கடைசிவரையிலும் பார்க்க வைக்கும் அளவுக்கு இருப்பதால், இத்திரைப்படமும் சிவகார்த்திகேயனின் வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறுகிறது.

மற்றவர்களுக்காக நடிப்பது வேறு.. தனது ரசிகர்களுக்காக நடிப்பது என்பது வேறு. இப்போது சிவகார்த்திகேயன் இரண்டாவதை தேர்வு செய்திருக்கிறார். இனிமேல் அவரது ரசிகர்களே அவரது நடிப்பு கேரியரை பார்த்துக் கொள்வார்கள்..! நமக்கெதற்கு வம்பு..?

இந்த ‘சீமராஜா’வும் கம்பீரமாகத்தான் இருக்கிறார்..!

Our Score