full screen background image

‘யு டர்ன்’ – சினிமா விமர்சனம்

‘யு டர்ன்’ – சினிமா விமர்சனம்

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் மற்றும் வி.ஒய். கம்பைன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஸ்ரீனிவாச சித்தூரி மற்றும் ராம்பாபு பண்டாரு ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் கதையின் நாயகியாக சமந்தா நடித்திருக்கிறார். மற்றும் ஆதி, நரேன், ராகுல் ரவிந்திரன், பூமிகா சாவ்லா, ஆடுகளம் நரேன் உட்பட பல பிரபலங்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – நிகேத் பொம்மிரெட்டி, இசை – பூர்ண சந்திர தேஜஸ்வி, படத் தொகுப்பு – சுரேஷ் ஆறுமுகம், கலை இயக்கம் – ஏ.எஸ்.பிரகாஷ், வசனம் – கவின் பாலா, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, தயாரிப்பு – ஸ்ரீனிவாச சித்தூரி, ராம்பாபு பண்டாரு, வெளியீடு – கோ.தனஞ்செயன். எழுத்து, இயக்கம் – பவன்குமார்.

கன்னட சினிமாவில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இயக்குநர் பவன் குமார். அவரது முதல் படமான ‘லூசியா’ இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கன்னட சினிமாவை அடுத்தத் தலைமுறையினரிடத்தில் கொண்டு போய் சேர்த்தது. இவரது அடுத்த படமான ‘யு-டர்ன்’, கன்னட சினிமாவின் மீதான ஈர்ப்பை மேலும் அதிகமாக்கியது.

தற்போது இந்த ‘யு-டர்ன்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தையும் பவன் குமாரே இயக்கியிருக்கிறார்.

சாதாரணமாக நான் தினமும் சாலைகளில் செல்லும்போது பார்க்கும் ஒரு சிறிய விஷயத்தை மையக் கருவாக வைத்து கதை, திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் பவன்குமார். அந்தத் திரைக்கதையையும் சுவாரஸ்யமாக்கி இது சஸ்பென்ஸ், திரில்லட் மட்டுமன்றி பேய்ப் படமும்கூட என்பதையே இடைவேளைக்கு பின்பு கடைசி அரை மணி நேரத்திற்கு முன்பாக சொல்லும் ஒரு டிவிஸ்ட்டில்தான் படத்தின் வெற்றியே அடங்கியிருக்கிறது.

கதை, திரைக்கதை அமைக்கத் தெரிந்த அதே அறிவுத் திறன் இயக்குநர் பவன்குமாருக்கு அவரது இயக்கத் திறமையிலும் இருக்கிறது. அதனால்தான் இத்திரைப்படம் இத்தனை டிவிஸ்ட்டுகளைத் தாங்கியிருந்தும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது.

ரட்சணா என்னும் சமந்தா டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் பயிற்சி செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். இதுவரையிலும் யாரும் தொடாத ஒரு விஷயத்தைப் பற்றி எழுத அவருக்குள் ஒரு ஆசை.

அதன்படி வேளச்சேரி பாலம் பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையை தயார் செய்து வருகிறார். இதற்காக அந்தப் பாலம் பற்றி ஆராய்ச்சியில் இறங்கும்போது அந்தப் பாலத்தில் பயணிக்கும் டூவீலர் ஓட்டுநர்கள் சிலர் பாலத்தின் நடுவில் இருக்கும் கற்களை அகற்றிவிட்டு போக்குவரத்து விதிகளுக்கு மாறாக வண்டியை வலது பக்கம் திரும்பிச் செல்வதைக் காண்கிறார்.

இந்தக் குற்றச் செயல் குறித்தும், இதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பது பற்றியும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள நினைக்கிறார். இதற்காக அந்தப் பாலத்தின் ஓரத்திலேயே தங்கியிருக்கும் வாய் பேச முடியாத ஒரு வயதானவரின் உதவியை நாடுகிறார் சமந்தா.

அந்த வயதானவர் யாராவது அப்படி கற்களை அகற்றிவிட்டு வண்டியை திருப்பிச் சென்றால் அந்த நம்பரை குறித்து சமந்தாவிடம் கொடுப்பார். சமந்தா அந்த நம்பரை வைத்து அவருடைய அட்ரஸை கண்டறிந்து வைக்கிறார். மொத்தமாக பத்து பேர் கிடைத்தவுடன் தனது பேட்டியைத் துவக்கலாம் என்று காத்திருக்கிறார்.

பத்தாவது நபர் அன்றைக்குக் கிடைக்கிறார். அவரை பேட்டி காண அவரது வீட்டுக்குச் செல்கிறார் சமந்தா. கதவு திறக்கப்படாததால் திரும்பி வந்துவிடுகிறார். ஆனால் அன்று இரவு அலுவலக நண்பரான ராகுல் ரவீந்திரனுடன் சினிமாவுக்கு போய்விட்டு வந்த சமந்தாவை போலீஸ் வந்து விசாரணைக்கு அழைக்கிறது.

இன்று மதியம் சமந்தா பார்க்கப் போன அந்த நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை போலீஸ் சொல்கிறது. சமந்தா அந்த மரணத்திற்கும் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார். பத்திரிகை தொழில் தொடர்பானது என்பதைச் சொல்லி மேலும் தான் குறித்து வைத்திருந்த நபர்களின் முகவரியையும் கொடுக்கிறார் சமந்தா.

போலீஸ் அதிகாரியான ஆதி அவர்களைப் பற்றி விசாரிக்கும்போது அந்த 9 பேருமே ஏதோ ஒரு வகையில் தற்கொலை செய்து இறந்திருப்பது தெரிய வருகிறது. அந்த இரவு நேரத்திலேயே அன்றைக்கு ஒருவன் அந்த பாலத்தின் கற்களை அகற்றி வண்டியை திருப்பிச் சென்றிருப்பது தெரிய வருகிறது.

உடனேயே ஆதியும், சமந்தாவும் அந்த நபரைப் பார்க்க ஓடுகிறார்கள். அந்த நபர் வக்கீலாகவும் இருப்பதால் தெனாவெட்டாக பேசி இவர்களை அனுப்பி வைக்கிறான். ஆனால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இவர்கள் வந்த காரின் மீதே விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான்.

போலீஸ் உயரதிகாரியான ஆடுகளம் நரேன் இந்த வழக்குகள் அனைத்துமே தற்கொலைதான் என்று சொல்லி அதற்கு மூடுவிழா நடத்துகிறார். ஆனால் ஆதிக்கும், சமந்தாவுக்கும் மட்டுமே பாலத்தில் கற்களை நகர்த்தி வைத்து யு டர்ன் எடுப்பதினால்தான் அந்த மரணங்கள் நிகழ்வதாகத் தோன்றுகிறது. இதிலிருக்கும் மர்மத்தை கண்டறிய முனைகிறார்கள். கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த மர்மக் கதையின் திரைக்கதை..!

முதல் காட்சியின் முதல் ஷாட்டிலேயே இத்திரைப்படம் ஒரு வித்தியாசமானது என்பதை உணர்த்துகிறார் இயக்குநர். ஒரு பெரிய சாலையின் நடுவில் இருக்கும் தடைக் கற்களை தலைகீழாய் காட்டியபடியே நகரும் அந்தக் கேமிராவின் கோணம் யு டர்ன் என்னும் பெயரில் ஒளிந்திருக்கும் கதைப் பற்றிய சுவாரசியத்தை பார்வையாளர்களுக்குள் துவக்கத்திலேயே புகுத்திவிட்டது.

நேர்க்கோட்டில் எழுதப்பட்ட கதையாய் படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் படம் ஒரு நூழிழை அளவுகூட விலகிச் செல்லவில்லை. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதையும், என்ன நடந்தது என்பதையும்கூட பரபரப்பான திரைக்கதை மூலமாகவும் குளுகோஸ் ஏறும் நிலையில் அந்த பாட்டிலிலேயே செலுத்தப்படும் ஊசியைப் போல அடிக்கடி தரப்படும் டிவிஸ்ட்டுகளும் படத்தினை மிகவும் ரசிக்க வைத்திருக்கிறது.

துவக்கத்தில் தனது அம்மாவுடன் ஆட்டோவில் வரும்போது நடக்கும் சம்பாஷணையிலேயே சமந்தாவின் கேரக்டர் ஸ்கெட்ச் வெளிப்படுவதும், அப்படியே வண்டியை ஏதாச்சும் கோவில்கிட்ட விடுங்க.. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்குவோம் என்று சமந்தா கோபத்துடன் சொல்லும் அதிர்ச்சி வசனமும் ஒருபுதுவித படத்தை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.

போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடைபெறும் முறை.. ஆதி மற்றும் அவருடைய துணை அதிகாரி, போலீஸாரின் பணிகள்.. என்று அனைத்தையும் டீடெயிலாக அதே சமயம் லாஜிக் எல்லை மீறாமல் கொணர்ந்திருப்பதற்கு இயக்குநருக்கு மிகப் பெரிய நன்றி.

முதலில் கொலையாக இருக்கலாமோ என்றெண்ணும்வகையில் காட்சிகளை நகர்த்தி. பின்பு அது தற்கொலையாக மாறி.. மீண்டும் கொலை சந்தேகத்தை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூலமாகத் திணித்து, மறுபடியும் ஏதோ ஒன்று நடக்கிறது என்பதாக சஸ்பென்ஸை கூட்டிக் கொண்டே போகும் திரைக்கதையை எழுதியிருக்கும் இயக்குநரின் திறமைக்கு ஒரு ஷொட்டு..!

பத்திரிகையாளராக இருந்தும் அப்போதுதான் இதுபோன்ற அனுபவங்களை முதல்முறையாக பெறுவதால் சமந்தாவின் நடுநடுங்கிய பய வெளிப்பாடு மிக இயல்பானதாக இருக்கிறது.

படத்தில் கொஞ்சம், கொஞ்சமாக பயத்தை ஊட்டி, சஸ்பென்ஸை கூட்டி, திகிலை அதிகரித்து, என்னதான் நடக்கிறது.. கொலையா.. தற்கொலையா.. யார்தான் செய்தது என்கிற மனநிலைக்கு இடைவேளையின்போது கொண்டு வந்துவிடுவது சிறப்பு.

இதன் பிறகு கடைசி அரை மணிக்கு முன்பாக அனைத்தும் நம் முன்பாக வந்த பின்பும்கூட அடுத்து நடக்கும் கொலைகளை தடுக்கப் போவது எப்படி என்று சட்டென்று நமது மனநிலையை மாற்றியிருக்கிறார் இயக்குநர். இதெல்லாம் அவருடைய சிறப்பான இயக்கத் திறமையாலேயே கிடைத்திருக்கிறது.

யு டர்ன் அடித்த இரண்டு பேரை பாதுகாப்பாக கொண்டு போலீஸ் லாக்கப் அறைக்குள் வைக்க.. அவர்கள் திடீரென்று ஒருவருயொருவர் அடித்துக் கொண்டு தங்களுடைய முடிவை தேடிக் கொள்ளும் காட்சியில் பதைபதைப்பையும், மிரட்டலையும் கூட்டியிருக்கிறார் இயக்குநர்.

படத்தில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் பங்கை மிக நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.  ஹாட்ஸ் அப் என்று சொல்லும் அளவுக்கு படம் முழுவதும் நிரம்பியிருக்கிறார் தோழர் சமந்தா.

பல குளோஸப் காட்சிகளில் அவரது பரந்து, விரிந்த அழகே அந்தக் காட்சியை மேலும் அழகாக்குகிறது. முதல்முறை போலீஸ் விசாரணையில் அவர் பயந்து போய் இருப்பதும், போகப் போக.. இதில் இருக்கும் விளையாட்டைக் கண்டறிய நினைக்கும் அந்த பத்திரிகையாளர் உணர்வை தன் கண்களாலும், வார்த்தைகளாலும் காட்டும்விதமும் பார்வையாளர்களுக்கு தங்கள் ஆள்தான் இந்த ரட்சனா என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது. ராகுலுடனான தனது காதலை சொல்லாமல் தவித்தபடியே இருப்பவர், அதைச் சொல்வதற்காக அவர் செய்யும் சிற்சில கலாய்ப்புகள் ரசிக்கத்தக்கவை.

சமந்தாவுக்கு அடுத்து ஸ்கோர் செய்திருப்பது ஆடுகளம் நரேன்தான். அந்த சிடுசிடு உயரதிகாரி கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். மேலதிகாரிகளுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர் என்பதால் அனைவரையும் அரவணைத்துச் செல்ல நினைத்து அவர் செய்யும் செயல்களும், “கேஸை மூடிரு” என்று சொல்லி தனது அனுபவத்தின் வாயிலாக அவர் சொல்லும் அட்வைஸும் அப்படியே கண்கூடான நிகழ்வு. இப்போதும் இந்தியாவில் பல போலீஸ் ஸ்டேஷன்களில் ஆடுகளம் நரேன் போன்ற காவலர்கள் பலவித பதவிகளிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

சமந்தாவுக்கு உதவும் ஆதி இன்னொரு பக்கம் தனது அதிக அலட்டல் இல்லாத போலீஸ் அதிகாரி வேலையைச் செய்திருக்கிறார். பாடி லாங்குவேஜிலேயே தனது கோபத்தையும், பாசத்தையும், அன்பையும் காட்டுகிறார். கிளைமாக்ஸில் சமந்தாவுக்கு உதவும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் ஒரு பாஸிட்டிவ்வான சமூகத்திற்கு தேவையான ஒரு அதிகாரியை காட்டியிருக்கிறது.

மாயா என்னும் இறந்து போன அம்மா கேரக்டரில் பூமிகா சாவ்லாவும், அவரது குட்டிப் பெண்ணும் அத்தனை அனுதாபங்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ராகுல் ரவீந்திரன் இன்னொரு பக்கம் எதுவுமே தெரியாமல் இந்தப் பிரச்சினையோடே வந்து கொண்டிருப்பது சுவாரஸ்யம். கடைசி டிவிஸ்ட்டில் சிக்கும் நரேனின் நிலைமையை பார்க்கும்போது அப்பாடா.. இதோட முடிஞ்சதே விஷயம் என்று நம்மையும் திகைக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

படத்திற்கு மிகப் பெரிய பலம் கொடுத்திருக்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் நிக்கேத் பொம்மிரெட்டியும், படத் தொகுப்பாளர் சுரேஷ் ஆறுமுகமும்தான். பக்க வாத்தியமாக இசையை குறைவாக ஒலிக்கவிட்டும், பின்னணி இசையில் கவனிக்கவும் வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் பூர்ண சந்திர தேஜஸ்வி.

பரந்து விரிந்த மேம்பாலத்தை லாங் ஷாட்டில் காட்டும் கேமராவின் வித்தை சாதாரண ஒரு போலீஸ் ஸ்டேஷனைக்கூட ஹைடெக்காக காட்டியிருக்கிறது. சமந்தாவின் வீடு, அலுவலகத்தின் உட்புறம், போலீஸ் ஸ்டேஷன் என்று பல இடங்களிலும் கலை இயக்குநரின் சமர்த்தான கை வண்ணத்தில் வண்ணமயமாக இருக்கிறது. இதையும் படம் பிடித்ததில் ஒளிப்பதிவாளரும் கூடுதல்  மதிப்பெண்களைப் பெறுகிறார். போலீஸ் லாக்கெப்பில் நடக்கும் படுகொலைகளை அத்தனை பரபரப்பாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இந்தக் காட்சியில் படத்தொகுப்பாளரின் பணியும் சிறப்பானது.

ஒரு கிரைம், திரில்லர் படத்திற்கு என்ன வேண்டும்.. அடுத்து என்ன என்ற உணர்வை கடைசிவரையிலும் பார்வையாளனின் மனதில் திணித்து வைக்க வேண்டும். கடைசி நொடியில்தான் அது அவனது மனதில் இருந்து இறங்க வேண்டும் என்பதுதான். அந்த உணர்வை இத்திரைப்படம் 100 சதவிகிதம் முழுமையாகக் கொடுத்திருக்கிறது.

ஒரு நகைச்சுவை காட்சி இல்லை. குத்துப் பாடல்கள் இல்லை.. பாடல் காட்சிகளும் இல்லை. ஆனாலும் படம் விறுவிறுப்பு குறையாமல் தொடர்ந்து பார்க்க வைக்கிறது. இதுதான் இயக்குநரின் இயக்கத் திறமைக்குச் சான்று..!

மொத்தத்தில் ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் நாவல் படிக்கும் உணர்வை இத்திரைப்படம் தருகிறது.

அவசியம் பாருங்கள்..!

Our Score