செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.கார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘சத்தம் இன்றி முத்தம் தா’.
இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ளார். ஹரிஷ் பேராடி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜுபின் இசைக்கு பிரபல பாடலாசிரியர் விவேகா பாடல்களை எழுதியுள்ளார். ஒளிப்பதிவு – யுவராஜ்.M., படத் தொகுப்பு – மதன்.G., நடன இயக்கம் – தினேஷ், சண்டை பயிற்சி இயக்கம் – ‘மிராக்கிள்’ மைக்கேல், பாடகர்கள் – ஆண்ட்ரியா, M.M.மானசி, ஜித்தின் ராஜ், ரவி.G., பத்திரிக்கை தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு மேற்பார்வை – A.J.P.ஆனந்த், தயாரிப்பு – கார்த்திகேயன்.S. எழுத்து, இயக்கம் – ராஜ்தேவ்.
இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பத்து விருதுகளுக்கு மேல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஆனந்த விகடன் மற்றும் சாவி இதழ்களில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
மேலும் அவர் அமெரிக்காவில் நடைபெற்ற திரைக்கதை போட்டியில் அனைத்து நாடுகளும் கலந்து கொண்ட நிலையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கதைகளான ‘KISS DEATH மற்றும் A STRANGER IS WALKING BY’ ஆகியவற்றை எழுதியவராவார்.
அவை இரண்டும் அமெரிக்காவில் அச்சிடப்பட்டு வெளியானதோடு இணையத்தின் KINDLE-லும் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் படம் பற்றி இயக்குனர் ராஜ்தேவ் பேசும்போது, “இது காதலும், சஸ்பென்ஸூம் கூடிய ஒரு திரில்லர் படமாகும். எதிர்பாராத திருப்பு முனைகளுடன் பார்வையாளர்களை ஈர்க்கும்விதமாக இதன் கதை புனையப்பட்டுள்ளது. கதாநாயகன் ஸ்ரீகாந்த் இதுவரை ஏற்றிராத புதுவிதமான கதாபாத்திரத்தில் ஒரு வித்தியாசமான அணுகு முறையில் நடித்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த் மற்றும் ஹீரோயின் பிரியங்கா திம்மேஷ் இருவரும் நடிக்கும் காட்சிகளில் பார்வையாளர்கள் முழுவதுமாக ஈர்க்கப்படுவார்கள். நடிகர் ஹரிஷ் பேராடி அவர்கள் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். சரிகமா ஆடியோவில் வெளியாகிய இத்திரைப்படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.” என்றார்.









