full screen background image

தேசிய திரைப்பட விருதுகளில் இந்திரா காந்தி, நர்கீஸ் தத் பெயர்கள் நீக்கம்..!

தேசிய திரைப்பட விருதுகளில் இந்திரா காந்தி, நர்கீஸ் தத் பெயர்கள் நீக்கம்..!

தேசிய திரைப்பட விருதுகளில் இந்திரா காந்தி, நர்கீஸ் த்த் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது போன்ற பல மாற்றங்கள் இப்போது தேசிய திரைப்பட விருதுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் ‘தேசிய திரைப்பட விருதுகள்’ வழங்கப்படுகின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும்விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா ஊரடங்கு காரணமாக 2021-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் 2023-ம் ஆண்டு வழங்கப்பட்ட நிலையில், 2022-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளுக்கு தகுதியான திரைப்படங்களை சமர்ப்பிக்கும் பணிகள் கடந்த ஜனவரி 30-ந்தேதி நிறைவடைந்தன.

இதனிடையே தேசிய விருது பட்டியலில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் விருதுகள், பரிசுத் தொகைகள் ஆகியவற்றை சீரமைக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக கூடுதல் செயலாளர் நீரஜா சேகர் தலைமையிலான அந்தக் குழுவில் பிரபல இயக்குநர்கள் பிரியதர்ஷன், விபுல் ஷா, சென்சார் போர்டு தலைவர் பிரசூன் ஜோஷி, ஒளிப்பதிவாளர் எஸ்.நல்லமுத்து உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழு கடந்த டிசம்பர் மாதம் தனது பரிந்துரைகளை அரசிடம் அளித்தது. இந்தக் கமிட்டியின் பரிந்துரைப்படி, ’70-வது தேசிய திரைப்பட விருதுகள் 2022′-ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் வழங்கப்பட்டு வரும் ‘சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது’ என்பது ‘சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கான பரிசுத் தொகை முன்பு தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் பிரித்து வழங்கப்பட்ட நிலையில், இனிமேல் முழுமையாக இயக்குநருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், பழம்பெரும் நடிகை நர்கீஸ் தத் பெயரில் வழங்கப்பட்டு வரும் ‘தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது’ என்பது ‘தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் தாதாசாகேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் சிறந்த படம், சிறந்த அறிமுகப் படம், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் திரைப்படத்திற்கு வழங்கப்படும் ‘ஸ்வர்ன் கமல்’ விருதுக்கான பரிசுத் தொகை 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் மற்றும் அனைத்து நடிப்பு பிரிவுகள், சிறந்த திரைக்கதை, இசை மற்றும் பிற பிரிவுகளின் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் ‘ரஜத் கமல்’ விருதுக்கான பரிசுத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறந்த அனிமேஷன் படம்‘ மற்றும் ‘சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ்’ ஆகிய 2 வகையான விருதுகளும், சிறந்த ‘ஏ.வி.ஜி.சி.’ திரைப்படம் (அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ்) என்ற பிரிவின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

மூன்று துணைப் பிரிவுகளைக் கொண்டிருந்த ‘சிறந்த ஒலிப்பதிவு’ பிரிவு, இனி ‘சிறந்த ஒலி வடிவமைப்பு’ என்ற ஒரே பிரிவின் கீழ் அறியப்படும்.

இந்த விருதுக்கான பரிசுத் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த பரிசுத் தொகை ஒலி வடிவமைப்பாளருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசை இயக்கத்துக்கான விருது, சிறந்த பின்னணி இசை விருதாக மாற்றப்பட்டுள்ளது.

சிறப்பு ஜூரி விருது நீக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் அல்லாத பிரிவில் சில பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. வேறு பிரிவுகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

குடும்ப அம்சங்கள் நிறைந்த சிறந்த படம் என்ற விருது நீக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைக்கதை என்ற புதிய விருது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Our Score