full screen background image

பிளாக் மெயில் – சினிமா விமர்சனம்

பிளாக் மெயில் – சினிமா விமர்சனம்

JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் தயாரிப்பாளர் ஜெயக்கொடி அமல்ராஜ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், தேஜூ அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரமேஷ் திலக், லிங்கா, ரெடின் கிங்ஸ்லி, ஷாஜி, ஹரிப்பிரியா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – மு.மாறன், இசை – சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு – கோகுல் பினாய், படத்தொகுப்பு – சான் லோகேஷ், கலை இயக்கம் – எஸ்.ஜே.ராம், சண்டை இயக்குநர் – ராஜசேகர், உடை வடிவமைப்பு – ஆர்.திலக்பிரியா சண்முகம், வினோத் சுந்தர், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா.

படத்தின் தலைப்பிலேயே படத்தின் கதை இருக்கிறது. ஆளாளுக்கு பிளாக் மெயில் செய்து கொண்டு நாடகமாடும் ஒரு வித்தியாசமான சஸ்பென்ஸ், திரில்லர், படம்தான் இந்த பிளாக் மெயில் என்ற திரைப்படம்.

முழுக்க முழுக்க கோயம்புத்தூரிலேயே இந்த படத்தைப் படமாக்கி இருந்தாலும் ஒரு இடத்தில்கூட கோயம்புத்தூர் பாசையே பேசப்படவில்லை என்பது லாஜிக்கான கேள்வி.

ஒரு கூரியர் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வரும் ஜி.வி.பிரகாஷ் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் ஹீரோயின் தேஜு அஸ்வினியை காதலித்து வருகிறார். அந்தக் காதல் கொஞ்சம் அத்து மீறியதால் தேஜஸ்வினி இப்போது கர்ப்பிணியாக இருக்கிறார். இதற்காக அவர்கள் மருத்துவமனைக்கு சென்றபொழுது ஜி.வி.பிரகாஷின் வேனை வந்த வேலை யாரோ ஒரு திருடன் அடித்துக் கொண்டு போய் விடுகிறான்.

அன்றைக்கு பார்த்து கூரியர் கம்பெனி முதலாளி கொடுத்த ஸ்பெஷலான ஒரு பார்சல் அந்த வேனில் இருந்தது என்பதால் கூரியர் நிறுவனத்தின் முதலாளியான வேட்டை முத்துக்குமார் அலறுகிறார். அந்த பார்சலின் மதிப்பு 50 லட்சம் என்பதாலும் அந்த பணத்தை நீதான் கொடுக்க வேண்டும் என்று சொல்லி ஜி.வி.யை மிரட்டுகிறார். இதற்கு பிணையாக காதலி தேஜு அஸ்வினியை கடத்திக் கொண்டு போகிறார் முத்துக்குமார்.

இந்த நேரத்தில் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி மற்றும் இவர்களது மகள் மூவரும் ஊட்டிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். வழியில் ஏற்பட்ட ஒரு சின்ன தடங்கலின்போது அவர்களின் மகள் கடத்தப்பட்டு இருக்கிறது தெரிய வருகிறது.

தன்னுடைய மகளை யார் கடத்தினார்கள் என்று தெரியாமல் அல்லாடும் ஸ்ரீகாந்த் தன் நண்பரான ஒரு போலீஸ் டெபுடி கமிஷனரிடம் இந்த வழக்கை விசாரிக்க சொல்கிறார். அவரும் விசாரிக்கிறார்.

பிந்து மாதவியின் முன்னாள் காதலன் லிங்கேஷ் தனக்கு 50 லட்ச ரூபாய் தராவிட்டால் பிந்து மாதவியின் நிர்வாண வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவேன் என்று பிந்து மாதவியை மிரட்டுகிறான்.

இப்போது அந்த குழந்தை ஒவ்வொருவரின் கையாக மாறி மாறி போய்க் கொண்டே இருக்கிறது. யார், யாரை பிளாக் மெயில் செய்கிறார்கள் என்பதே ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை மாறிக்கொண்டே போக கதையையும், திரைக்கதையையும் செம டிவிஸ்ட்டாக பரபரக்க வைத்திருக்கிறது இத்திரைப்படம்.

நாயகன் ஜி.வி.பிரகாஷ் இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் தனக்கென்று ஒரு பாணி இருக்கிறது என்று சொல்வதே இல்லை. அதேபோல் அப்படி ஒரு சிக்கலிலும் அவர் மாட்டிக் கொள்ளவில்லை என்பதால் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் அவரால் நடிக்க முடிந்திருக்கிறது. தொடர்ந்தும் நடிக்கிறார். இந்தப் படமும் அது போன்ற ஒரு திரைப்படம்தான்.

விரட்டி விரட்டி காதலிக்கும் ஒரு ரொமான்ஸ் லவ்வராக இல்லை. காதல் காட்சிகளின் நெருக்கமாக நடிக்கும் ஒரு காதலனாகவும் இல்லை. டூயட் பாடல்களில் கட்டிப் பிடித்து கொஞ்சும் வகையிலான காட்சிகளும் இல்லை. இப்படி ஒரு கோணத்தில் படத்தின் துவக்கத்திலேயே கதையை சொல்ல ஆரம்பித்துவிட்டதால், இந்தக் கதைக்குள் கதையை நகர்த்தும் ஒரு சாதாரண கதை மாந்தராக படத்தில் தோன்றி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

காதலி கர்ப்பமாக இருக்கிறாள் என்பதையே உணர முடியாத அளவுக்கு மூளை உள்ள ஜி.வி.பிரகாஷ் அதற்குப் பிறகு தன்னிடம் இருக்கின்ற சின்ன மூளையை பயன்படுத்தியே பிரச்சனை எங்கெங்கே நடக்கிறது யார் யார் பிளாக்மெயில் செய்கிறார்கள் என்பதே தெரியாதவண்ணம் தன்னுடைய நடிப்பை காண்பித்து இருக்கிறார். சில வசனங்களிலும் அறிவுரை சொல்வதாக இல்லாமல் உலக வழக்கத்தை சொல்வது போல பல வசனங்களை பேசி இருக்கிறார். அதுனாலேயே படத்தில் அவருடைய கதாப்பாத்திரத்தை ஆழ்த்து ரசிக்க முடிந்திருக்கிறது.

வேட்டை முத்துக்குமாரிடம் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று அவர் பேசும் வசனம் படம் முடிந்த பின்பும் நம் நினைவில் அப்படியே இருக்கிறது. பாராட்டுக்கள் ஜீவி.

நாயகி தேஜூ அஸ்வினி மிக அழகானவர். சிரித்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற ஒரு குழந்தைத்தனமான முகம் கொண்டவர். ஆனால், இந்தப் படத்தில் முதலிலிருந்து கடைசிவரையிலும் அவரை அழுக வைத்திருக்கிறார் இயக்குநர். அடுத்தப் படத்திலாவது தேஜு அஸ்வினி தமிழ் ரசிகர்களின் இதயத்தில் அமரும் அளவுக்கு ஒரு நல்ல காதல் படத்தில் நடித்து தேரட்டும் என்று வாழ்த்துகிறோம்.

இன்னொரு பக்கம் தேஜி அஸ்வினிக்கு இணையாகவே அழுது கண்ணீர் விட்டு கதறி இருக்கிறார் பிந்து மாதவி. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் முகம் காட்டி இருக்கும் பிந்துவுக்கு ஏன் தமிழில் பெரிய இடம் கிடைக்கவில்லை என்பதே நமக்கு புரியவில்லை. அந்த அளவுக்கு தன்னுடைய சிறப்பான நடிப்பால் நம்மை கவர்ந்து இழுக்கிறார் பிந்து மாதவி.

ஹீரோ ஸ்ரீகாந்த் இந்தப் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை மீதான பாசம், மனைவி மீதான அன்பு.. அனைத்தும் உடைத்து போகும்போது அவர் படும் அவஸ்தையும், ஆத்திரமும், கோபமும் ஒரு உண்மையான ஹஸ்பண்ட் எப்படி இத்தனை பிரச்சனைகளை தாங்கிக் கொண்டு இருக்கிறான் என்று படம் பார்ப்பவர்களை வருத்தப்பட வைத்து ஸ்ரீகாந்த் மீது ஒரு கவன ஈர்ப்பை கொடுத்து இருக்கிறது.

ஜி.வி.பிரகாஷின் நண்பராக வரும் ரமேஷ் திலக், வில்லனாக நடித்திருக்கும் லிங்கா, வேட்டை முத்துக்குமார் ஆகிய மூவரும் கதையை நகர்த்தி, முடிச்சுகளை அவிழ்க்கும் இடத்தில் ஒவ்வொருவரும் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை வந்து கொண்டே இருப்பதால் நம் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இதில் ரெட் கிங்ஸ்லி இரண்டு மூன்று இடங்களில் கைதட்டலோடு கூடிய சிரிப்பை வரவழைக்கும்விதமாக நடித்திருக்கிறார்.

கோவையையும் அதை சுற்றி இருக்கின்ற பகுதிகளையும் தன்னுடைய கேமராவில் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ஊட்டி பகுதியை கொஞ்சம் ரம்மியமாக காட்டி இருக்கிறார்.

சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை ஒரு திரில்லர் படத்துக்கு எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே தவறாமல் இருந்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் யார் ஹீரோ.. யார் ஹீரோயின்.. என்று கேட்டால் இருவருமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையான ஹீரோவும், ஹீரோயினும் படத்தின் திரைக்கதைதான்.

அதிலும் இடைவேளைக்கு பின் பான காட்சிகளில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை டிவிஸ்ட்டாக வந்து கொண்டே இருக்க ஏதாவது ஒரு டிவிஸ்ட்டை நாம் பார்க்க மறுத்தால் நிச்சயம் படம் நமக்கு புரியாத ஒரு நிலைமைக்கு போய்விடும் அந்த அளவுக்கு திரைக்கதையை நுனிக்கி நுனிக்கி எழுதியிருக்கிறார் இயக்குநர்.

ஒத்துக்கிறியா ஒத்துக்குரியா..” என்ற வரிகளை துவக்கமாக வைத்து ஒரு குத்து பாடலும், படத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறது. அது தேவையில்லாத பாடல் காட்சி. இந்தப் படத்தின் தன்மையை கிடைக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், திருநங்கைகளை கொஞ்சம் பெருமைப்படுத்தும்விதமாக காட்சிகளை வைத்திருப்பதால் இந்த தேவையில்லாத பாடலையும் நாம் மன்னித்து விட்டுவிடலாம்.

படத் தொகுப்பாளர் மிக மிக கச்சிதமாக இந்த படத்தை நறுக்கி கொடுத்திருக்கிறார் அதுலயும் மிகச் சரியாக 2 மணி நேரத்தில் படம் முடிவதைப் போல கொடுத்திருப்பதால் வேகவேகமான திரைக்கதையில் படத்தை வரிசைப்படுத்தி கொடுத்திருக்கிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

படத்தில் ஒரு பெரிய குறையாக இருப்பது அந்த குழந்தை சம்பந்தப்பட்ட காட்சிகளில்தான். பொதுவாக அது மாதிரியான வயதுள்ள குழந்தைகள் அம்மா அப்பாவிடம் போக வேண்டும் என்று தேடுவார்கள். சூழ்நிலையை பொறுத்து, இடங்களை பொறுத்து அழுவார்கள். ஆனால் இதில் அப்படி எந்த ஒரு காட்சியையும் குழந்தைக்கு கொடுக்காமல், குழந்தை ஹாயாக சுற்றுலாவுக்கு வந்ததைப் போல அந்த குழந்தையை அனைவரின் கை மாறிக் கொண்டே போவது கொஞ்சம் பிசிறாக தெரிகிறது.

இன்றைய நவீன நாகரீக யுகத்தில் மனித உணர்வுகள், மனித பண்புகள், பந்தம், பாசம் எல்லாமே அடிபட்டு போய் பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. அதனால்தான் பணம் தேடி அலைபவர்கள் அனைத்து அத்துமீறல்களையும் செய்கிறார்கள். அதைத்தான் இந்தப் படத்திலும் இயக்குநர் வரிசையாக படம் போட்டுக் காட்டி இருக்கிறார்.

ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு நேர்மையான தீர்வு இருக்கும். அந்த தீர்வை தாமதம் இல்லாமல் சொல்லி அதில் பயணித்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது. பணத் தேவையால் தடம் புரண்டு சென்றால் வருகின்ற ஒவ்வொரு பிரச்சனைகளையும் நாம்தான் சந்திக்க வேண்டும் அந்த சந்திப்பு நிச்சயமாக நமக்கு பெருமையாக அமைந்துவிடாது. அதைத்தான் இந்த படத்திலும் இயக்குநர் கடைசிவரையிலும் சொல்லியிருக்கிறார். அந்த ஒரு விஷயத்திற்காகவே இந்த இயக்குநரை  பாராட்டுகிறோம்.

அதோடு இரண்டு மணி நேரத்தில் ஒரு பரபர திரைக்கதையில் கடைசிவரையில் தியேட்டர் ஸ்கிரீனைவிட்டு கண்களை அகல விடாமல் பார்த்துக் கொண்ட இயக்குநரின் இயக்குதல் திறமைக்கு நமது பாராட்டுக்கள்.

அவசியம் பார்க்க வேண்டிய படம் இது. நிச்சயமாக உங்களது நேரத்தை திருடாது என்பதில் சந்தேகம் இல்லை.

RATING : 3.5 / 5

Our Score