full screen background image

தி பெட் – சினிமா விமர்சனம்

தி பெட் – சினிமா விமர்சனம்

ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ், ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் கே.கந்தசாமி, கே.கணேசன், வி.விஜயகுமார், வி.லோகேஷ்வரி விஜயகுமார் தயாரித்திருக்கும் இந்ததி பெட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.மணிபாரதி.

இதில் ஸ்ரீகாந்த் வேலு, சிருஷ்டி  டாங்கே கி​றிஸ்டி, நண்பர் கருப்பு பாண்டி பாண்டி, நண்பர் விஜே பப்பு, நண்பர் விக்ரம், அம்மா திவ்யா, இன்ஸ்பெக்டர் ஜான் விஜய், எஸ்.. – தேவி பிரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப வல்லுநர்கள்:- இசை : தாஜ்நூர், ஒளிப்பதிவு : கோகுல், பாடல் வரிகள்: யுகபாரதி, படத் தொகுப்பு: ஜெபி, கலை: பழனிவேல், ஸ்டண்ட்: அதிரடி பிரகாஷ், ஸ்டில்ஸ்: ராஜ்பிரபு, பத்திரிக்கை தொடர்பு : .ஜான்.

இப்போதைய யூத்துகளுக்கு பிடிக்கும் வகையில் படத்தை எடுத்துக் கொடுத்து தியேட்டர் வசூலை அதிகரித்து தாமும் அதில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் சராசரியான ஒரு இயக்குநராக மணி பாரதி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.

.டி. ஃபீல்டில் வேலை செய்யும் ஹீரோ ஸ்ரீகாந்த் வார விடுமுறை வருவதால் அந்த விடுமுறையை என்ஜாய் செய்ய நினைக்கிறார். தன்னுடைய நண்பர்களுடன் ஊட்டிக்கு போக பிளான் செய்தவர், யாராவது ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணையும் அழைத்துச் சென்று இன்பம் துய்க்கலாம் என்று நினைக்கிறார்.

இவர்களுடன் ஊட்டிக்கு இன்பச் சுற்றுலா வருவதற்கு ஒத்துக் கொள்கிறார் பாலியல் தொழிலாளியான சிருஷ்டி டாங்கே.

சிருஷ்டியை பார்த்தவுடன் ஸ்ரீகாந்துக்குள் காதல் உணர்வு ஏற்படுகிறது. அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்று தெரிந்தும் காதல் கண்ணை மறைக்க.. எதற்காக சிருஷ்டியை அழைத்து வந்தமோ அதை தவிர மீதி எல்லாம் செய்கிறார் ஸ்ரீகாந்த்.

தன்னுடைய நண்பர்களை சிருஷ்டியின் பக்கத்திலேயே போகவிடாமல் சதி செய்து தன்னுடைய காதலுக்காக சிருஷ்டியை காப்பாற்ற நினைக்கிறார் ஸ்ரீகாந்த்.

ஆனால் ஒரு சமயத்தில் சிருஷ்டி திடீரென்று காணாமல் போகிறார். இதற்கடுத்து இவருடன் வந்த நண்பர்களில் ஒருவனும் காணாமல் போக, போலீஸிடம் புகார் செய்கிறார்கள். தேடுதல் வேட்டை நடக்கிறது. கடைசியாக என்ன நடந்தது? சிருஷ்டியை கண்டுபிடித்தார்களா? ஸ்ரீகாந்தின் காதல் என்ன ஆனது? என்பதுதான் இந்த தி பெட் படத்தின் திரைக்கதை.

நாயகன் ஸ்ரீகாந்த் எப்போதும் போலவே அவரால் என்ன முடியுமோ அதை மட்டுமே செய்து இருக்கிறார். இன்னமும் கொஞ்சம் அழுத்தமாக இயக்கம் செய்து ஸ்ரீகாந்த் மட்டுமல்ல மற்ற அனைவரையுமே சிறப்பாக நடிக்க வைத்திருக்கலாம்.

அவருடைய நண்பர்களாக நடித்தவர்களும் காமத்தில் கட்டுண்டு கிடக்கும் இளசுகள் போல சிருஷ்டியை அடைவதற்காக ஒவ்வொருவரும் தனித்தனியாக நாடகம் போடுவதெல்லாம் சுவாரசியமானது.

இவ்வளவு அழகான பெண் பாலியல் தொழிலில் இருக்கிறாரா.. என்று ஸ்ரீகாந்தும், அவருடைய நண்பர்களும் திகைத்துப் போகிறார்கள். அந்த அளவுக்கு சிருஷ்டியின் அழகை ஒலிப்பதிவாளரின் உதவியுடன் சொக்க வைப்பதுபோல காட்டி இருக்கிறார்கள். இதனாலேயே சிருஷ்டி இருக்கின்ற காட்சிகள் எல்லாம் அவரை மட்டுமே பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

ஸ்ரீகாந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் விக்ரம், வி.ஜே.பப்பு, பிளாக் பாண்டி மூவரும் ஸ்ரீகாந்தைவிடவும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எல்லா படங்களிலுமே ஒரே மாதிரி கோணங்கித்தனமான சேட்டைகளையும், உடல் மொழியையும், டயலாக் டெலிவரியையும் செய்து வரும் ஜான் விஜய் இதில் இன்ஸ்பெக்டராக வந்து அவரும் சிருஷ்டிக்கு பிராக்கெட் போடுகிறார்.

சிருஷ்டிதான் கொள்ளை அழகு என்றால் சிருஷ்டியின் அம்மாவாக நடித்திருக்கும் திவ்யாவும் அவரைவிட அழகு. மகளைக் காணாமல் ஊட்டிக்கு வந்து காவல் துறையில் புகார் செய்து மகளுக்காக ஏங்கும் ஒரு கதாபாத்திரம். ஆனால் மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கும் அம்மா என்பதால் நமக்கு அவர் மீது எந்த ஒரு பரிதாபமும் வரவில்லை. இன்னொரு பக்கம் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் தேவிபிரியாவும் முகம் காட்டியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கோகுல் ஊட்டியை இன்னும் அழகாக காட்டி இருக்கலாம். ஆனால் ஊட்டியின் மெயின் பகுதியை எல்லாம் விட்டுவிட்டு இதுவரையில் படமாக்கப்படாத சில இடங்களில் படத்தைப் படமாக்கி இருப்பதால் ஒளிப்பதிவு இதில் கொஞ்சம் சுமார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தாஜ் நூரின் இசையில் ஒரு பாடல் நிச்சயமாக ரசிக்கக் கூடியதாகவே இருக்கிறது. அதே சமயம் பின்னணி இசை சிரிக்க வைக்க முடியவில்லை என்றாலும் லேசாக புன்னகைக்க வைக்கும் அளவுக்கு ஒரு தூண்டுதல் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

படமே உணவுப் பூர்வமாக இல்லாமல் கொஞ்சம் காமெடி கலந்து இருப்பதால் இயக்குநர் கொண்டு வந்து கொடுத்த காட்சிகளை ஓரளவுக்கு தொகுத்து படமாக்கி நமக்கு கையில் கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர்.

இன்றைய இளைய சமுதாயத்தினரை நல்வழிப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கில்கூட சிந்திக்காமல் நான்கு ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை செக்ஸுக்காக அழைத்துச் செல்கிறார்கள்.. அதில் தவறில்லை  என்பதுபோல படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் மணி பாரதிக்கு நமது வன்மையான கண்டனங்கள்.

இந்தப் படத்தை பார்க்கும் இளைஞர்கள் நிச்சயமாக பாலியல் தொழிலை தவறு என்று நினைக்கவே மாட்டார்கள். ஏற்கனவே சினிமாதான் தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தினரை கேளிக்கைகளில் மட்டுமே மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. அந்த கேளிக்கைகளின் உச்சமாக பாலியல் வேட்கையில் நம்முடைய இளைஞர்களு,ம் இளைஞிகளும் இப்போது தறிக்கெட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதை தட்டிக் கேட்க வேண்டிய நிலையில் இருக்கும் சினிமா அதற்கு மாறாக அவைகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதற்கு இந்த ஒரே ஒரு படமே சாட்சி.

ஒரு பாலியல் தொழிலாளி மீதான காதல்.. அந்த காதல் ஜெயிக்குமா.. ஜெயிக்காதா.. என்பது ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் தன்னுடைய காதலி காணாமல் போக அதை எப்படி தேடி கண்டுபிடிக்கிறார் என்பதையும் கொஞ்சம் சஸ்பென்ஸூம் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

வசனத்தில் மட்டுமே டபுள் மீனிங்குகளை வைத்துவிட்டு காட்சிகளில் எந்தவிதமான ஆபாசத்தையும் காட்டாமல் படத்தை முடித்து இருப்பதுதான் இயக்குநர் செய்த நல்ல காரியம் என்று சொல்லலாம்.

RATING : 2.5 / 5

Our Score