full screen background image

பணம், சாதி அடிப்படையில் நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்த சதி – சரத்குமார் குற்றச்சாட்டு

பணம், சாதி அடிப்படையில் நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்த சதி – சரத்குமார் குற்றச்சாட்டு

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி, தற்போதைய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர்-நடிகைகள் நேற்று முன்தினம் மதுரை வந்தனர். 

அவர்கள் மதுரை நாடக நடிகர் சங்கத்தினரை தனியார் ஓட்டலில் சந்தித்து பிரசாரம் செய்தனர். இதில் நடிகர்கள் ராதாரவி, ராம்கி, எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், நடிகைகள் ராதிகா, பசி சத்யா, பாத்திமா பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பின்பு, நடிகர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, “எங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்த் தரப்பினர் கூறி வருகிறார்கள். எங்களை வேறு எந்த பலத்தையும் வைத்து ஜெயிக்க முடியாது. ஆகவே பணம், சாதி அடிப்படையில் நடிகர் சங்கத்தில் பிளவு ஏற்படுத்த சதி திட்டம் தீட்டுகிறார்கள். நாங்கள் பணம் கொடுப்பதாக கூறியும் வருகிறார்கள். 

இந்த சங்கத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 139 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.  நாங்கள் எப்போதும் நடிகர் சங்கத்திற்குள் அரசியலை புகுத்தியது கிடையாது. நடிகர் விஜயகாந்த், நான் என பலரும் பல்வேறு கட்சிகளில் இருந்தாலும் நடிகர் சங்கத்திற்குள் வரும்போது எவ்வித அரசியலும் பேச மாட்டோம். எங்களுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா..? 

நாங்கள் 176 கோடி ரூபாயை மோசடி செய்ததாக கூறியதால்தான், நடிகர்கள் விஷால், எஸ்.வி.சேகர் ஆகியோர் மீது தலா 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளேன்.  எங்கள் அணியில் யார், யார் என்னென்ன பொறுப்பில் போட்டியிடுகிறார்கள் என்பதை வருகிற 30-ம் தேதிக்குள் அறிவித்து விடுவோம்..” என்றார்.

நடிகர் ராதாரவி பேசும்போது, “இந்தத் தேர்தலில் பணம், சாதி தலையீடு வந்து விட்டது. மதுரை நாடக நடிகர் சங்கத்தில் 155 ஓட்டுகள் உள்ளன. எங்கள் அணியில் இளைய தலைமுறையினர் இல்லை என்றார்கள். எனவேதான் எஸ்.எஸ்.ஆர்.மகன் கண்ணன் பொருளாளர் பதவிக்கும், நடிகர் சிம்பு துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். நாங்கள் கண்டிப்பாக தேர்தலில் ஜெயிப்போம். ஆனால் அவர்கள் ஒரு வேளை ஜெயித்துவிட்டால் 6 மாதத்தில் நாடக நடிகர்களை எல்லாம் தூக்கி எறிந்து விடுவார்கள். தேர்தலில் அவர்கள் தோற்றுவிட்டால் ஒரு மாதத்தில் புதிய சங்கத்தினை ஆரம்பிப்பார்கள்…” என்றார். 

Our Score