full screen background image

“இனியும் சரத்-ராதாரவியிடம் நாடக நடிகர்கள் ஏமாற மாட்டார்கள்…” – நடிகர் பூச்சி முருகன் அறிக்கை..!

“இனியும் சரத்-ராதாரவியிடம் நாடக நடிகர்கள் ஏமாற மாட்டார்கள்…” – நடிகர் பூச்சி முருகன் அறிக்கை..!

திரும்பவும் நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் சூடு பிடித்திருக்கிறது. இந்த முறை சரத்குமார் டீம் ஊர் சுற்றும் புராணத்தைத் துவக்கியிருக்கிறது.

நேற்று முன்தினம் மதுரையில் நாடக நடிகர்களை சந்தித்து பேசிய சரத்குமார், 176 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்ததாக நடிகர்கள் விஷாலும், எஸ்.வி.சேகரும் புகார் கூறியிருப்பதைக் குறிப்பிட்டு பேசி, இந்த அபாண்டமான புகாருக்காக அவர்கள் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்திருப்பதாக கூறினார்.

இதையடுத்து விஷால் அணியில் இருக்கும் நடிகர் பூச்சி முருகன் இதற்கு பதிலளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், “சரத்குமார் ராதாரவி அணியில் தேர்தலில் செயற்குழுவில் நிற்கக்கூட ஆளில்லாததால், தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஊர் ஊராகச் சென்று பொய் பிரச்சாரம் செய்து நாடக நடிகர்களை ஏமாற்ற நினைக்கிறார். 

ஆனால் நாடக நடிகர்கள், தென்னிந்திய  நடிகர் சங்க இடத்தை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்த சரத்குமார், ராதாரவியிடம் இனி ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்.

நடிகர்கள் எஸ்.வி.சேகர் மற்றும் விஷாலின் மீது தலா 10 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நீதிமன்றம் செல்லும் சரத்குமாருக்கு நீதிமன்றத்தில் முன் பணம் கட்ட வேண்டும் என்று தெரியுமா..? முன் பணம் பல லட்ச ரூபாய்க்கு யாரிடம் ஆட்டையை போடப் போகிறார்..? 

நடிகர்களுக்கு நாடு, இனம், ஜாதி, மொழி மற்றும் மதம் கிடையாது. அதனால்தான் நமது முன்னோர் நமது சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர்  சங்கம் என்று பெயரிட்டுள்ளனர். சரத்குமார் எப்போதுமே சாதி அரசியல் பண்ணியே பழக்கப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கல்விக் கண் திறந்த கர்ம வீரர் காமராஜருக்கு மணி மண்டபம் கட்ட வசூலித்த பணத்திற்கு கணக்கு காட்டாத சரத்குமார், இனி நடிகர் சங்க இடத்தில் ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க முடியாது.

மேலும் பல தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி திருப்பித் தர மறுத்த சரத்குமார் அந்த வழக்குகளில் தன்னை கைது செய்யாமல் இருக்க நீதிமன்றம் சென்று எத்தனை முன் ஜாமீன் பெற்றுள்ளார் என்ற கேள்விக்கான  பதிலை அவருடைய மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்..” என்று அந்த அறிக்கையில் கேள்வி கேட்டுள்ளார் நடிகர் பூச்சி முருகன்.

Our Score