நேற்று நடிகர் சங்கத் தேர்தல் பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சரத்குமார் அளித்த பேட்டியில் இருந்து சில பகுதிகள் இங்கே :
கேள்வி:– நடிகர் சங்க தேர்தலில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்:– எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. உண்மையான உழைப்புக்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கேள்வி:– விஷால் அணியினர் உங்களை எதிர்ப்பதன் உண்மையான நோக்கம் என்ன?
பதில்:– அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு தெரியவில்லை.
கேள்வி:– தேர்தலில் போட்டி என்று வந்த பிறகு உங்கள் பக்கம் இருந்து சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பேசப்படுகிறதே?
பதில்:– சமாதான முயற்சி எதுவும் நடைபெறவில்லை. ஒரே குடும்பமாக இருந்த நடிகர்–நடிகைகள் நடிகர் சங்க தேர்தலையொட்டி, 2 அணிகளாக மோதுவது ஏன் என்ற கருத்தைத்தான் என் மனைவி ராதிகா சரத்குமாரும், நடிகர் சிம்புவும் பதிவு செய்தார்கள்.
கேள்வி:– ‘கமல்ஹாசன் நன்றி இல்லாதவர்’ என்று நீங்கள் சொன்ன பிறகுதான் இந்த பிரச்சினை பெரிதானது என்று சொல்லப்படுகிறதே?
பதில்:– ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’ ஆகிய 2 படங்களின் பிரச்சினைகளின் போதும், நான் தொடர்ந்து 36 மணி நேரம் தூங்காமல் விழித்திருந்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர உதவினேன். அப்போது கமல்ஹாசனை நான் நேரில்கூட பார்க்கவில்லை. அலைப்பேசியில்தான் அவருடன் பேசினேன்.
சுருதிஹாசனுக்கு ஆந்திராவில் ஒரு பிரச்சினை ஏற்பட்டபோது, அவர் மீதான புகாரை வாபஸ் வாங்குவதற்கு, பேச்சுவார்த்தை நடத்தி முடித்து வைத்தேன். அதற்கு ஒரு நன்றிகூட அவர் சொல்லவில்லையே என்றுதான் ஆதங்கப்பட்டேன். கமல்ஹாசன் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த கோபமும் இல்லை.
கேள்வி:– நடிகர் சங்கத்துக்கு ரூ.4 கோடியே 25 லட்சம் கடன் இருந்தது என்று சொன்னீர்களே அவ்வளவு பெரிய கடன் ஏற்பட்டது எப்படி?
பதில்:– தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் 1977–ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அதற்காக வங்கியில் ரூ.18 லட்சம் கடன் வாங்கப்பட்டது. அந்தக்கடன் வட்டிக்கு மேல் வட்டியாகி ரூ.4 கோடியே 25 லட்சமாக வளர்ந்துவிட்டது.
கேள்வி:– நாங்கள் வெற்றி பெற்றால், நடிகர் சங்க கட்டிடத்துக்கு எதிரான வழக்கை, பூச்சி முருகன் வாபஸ் வாங்கிவிடுவார் என்று விஷால் அணியினர் கூறுகிறார்களே?
பதில்:– அவர் வழக்கை வாபஸ் வாங்கவேண்டும் என்றுதானே நாங்களும் கேட்கிறோம். வழக்கை வாபஸ் வாங்கினால்தான் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டமுடியும்.
கேள்வி:– கடந்த 5 வருடங்களாக நடிகர் சங்கத்துக்கு வருமான வரி கட்டவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே?
பதில்:– சங்க விதிகளுக்கு உட்பட்டுதான் நாங்கள் செயல்பட்டிருக்கிறோம். அதற்காக ‘ஆடிட்டர்’ வழங்கிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.
கேள்வி:– மனோரமா இறந்தபோது அஞ்சலி செலுத்த வந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, உங்களுடன் பேசவில்லை என்று விமர்சிக்கப்படுகிறதே..?
பதில்:– அஞ்சலி செலுத்த வந்த முதல்–அமைச்சருக்கு நான் வணக்கம் தெரிவித்தேன். அதை அவரும் ஏற்றுக்கொண்டார். துக்க வீட்டுக்கு வந்த இடத்தில், யாரும் நலம் விசாரிக்க மாட்டார்கள்.
இவ்வாறு சரத்குமார் பதிலளித்தார்.