“ஸ்பை சினிமாஸ் நிறுவனத்துடன் நாங்கள் செய்த ஒப்பந்தம் நடிகர் சங்கத்துக்கு பயனளிக்க்க் கூடியது…” என்று நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சரத்குமார் கூறிய கருத்துக்கு, சங்கத் தேர்தலில் அவரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசர் இன்று பதில் சொல்லியுள்ளார்.
நாசர் தன் பதிலில், “நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் தனியார் நிறுவனம் கட்டிடம் கட்டுவது குறித்து 3 ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறார்கள். பல பக்கங்கள் கொண்ட இந்த ஒப்பந்தத்தை முழுவதுமாக படித்துப் பார்த்தால்தான் உண்மை நிலை தெரியும்.
8 மாதங்களுக்கு முன்பே அந்த ஒப்பந்தம் பற்றிய விவரங்களை நாங்கள் கேட்டோம். ஆனால் தரவில்லை. இப்போது பத்திரிகையாளர்களிடம் கோர்ட்டு மூலம் வாங்கிய ஒரு ஒப்பந்தத்தை பொதுவாக சரத்குமார் காட்டி இருக்கிறார். நாங்கள் கேட்டபோதே ஒப்பந்தத்தை எங்களிடம் காட்டியிருந்தால் அது சரியான ஒப்பந்தமாகவும் இருந்திருந்தால் இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடும் நிலையே வந்திருக்காது.
இந்த ஒப்பந்தத்தின்படி நடிகர் சங்க நிலம் முழுவதும் தனியார் நிறுவனம் கட்டிடம் கட்டிக் கொள்ளும், நடிகர் சங்கத்துக்கு ஏதோ ஒரு சிறிய அலுவலகம் கிடைக்கும். இதனால் நடிகர் சங்கத்தின் அடையாளமே காணாமல் போய்விடும். வருமானம் மட்டும் பெரிதல்ல. மூத்த கலைஞர்கள் மிகவும் சிரமப்பட்டு வாங்கிய அந்த இடத்தை அடையாளம் இல்லாமல் செய்வதும் தவறுதான். இதைத்தான் நாங்கள் கேட்கிறோம்..” என்றார் நாசர்.
இதுதான் பிரச்சினை. தங்களை மதிக்காததால் நாங்கள் தேர்தலில் போட்டியிட்டு எங்களை யார் என்று காட்டுகிறோம் என்று களத்தில் குதித்திருக்கிறார்கள் நாசர் தலைமையிலான அணியினர்.
இதனை எதிரணியினர் முன்பே புரிந்து கொண்டிருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது..