full screen background image

அமலாபால் என் பொண்ணு மாதிரி..!

அமலாபால் என் பொண்ணு மாதிரி..!

‘நிமிர்ந்து நில்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சமுத்திரக்கனியின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும் என்று கோடம்பாக்கமே கேட்டு வருகிறது..

‘நிமிர்ந்து நில்’ படத்திற்காக கடின உழைப்பை செலவிட்டு.. நீண்ட நாட்கள் தவம் கிடந்து படத்தை பட்டுச் சேலையை நெய்ததுபோல செப்பனிட்டு செய்ததில் மிகவும் களைப்பில் இருக்கிறாராம் சமுத்திரக்கனி. ஆகவே அடுத்தப் படத்தை மிகக் குறைந்த பட்ஜெட்டில் காட்டுக்குள்ளேயே எடுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்.

‘நிமிர்ந்து நில்’ பிரஸ் மீட்டில் இது பற்றிப் பேசிய சமுத்திரக்கனி, “இந்தியாவில் 42 சதவிகிதம் காடுகள்தான் இருக்கு. அதுக்குள்ள வாழ்கின்ற மக்கள் தொகையும் அதிகம். ஆனா நாம அவங்களை பத்தி எந்தவித கவலையும் இல்லாமல், தெரிந்து கொள்ளவும் ஆர்வப்படாமல் குற்றவுணர்ச்சியே இல்லாமலும் வாழ்ந்துக்கிட்டிருக்கோம்..  அந்த மாதிரியான வாழ்க்கையை வாழும் மனிதர்களின் கதையைத்தான் நான் அடுத்த படமா எடுக்கப் போகிறேன்..” என்றார்.

இதில் அமலாபால் ஹீரோயினாக நடிக்கப் போகிறாராம். அதிலும் 5 விதமான வயது கொண்ட வேடங்களில்..! அமலாபால்தான் இந்தக் கதைக்கு மிகப் பொருத்தமானவர் என்று அடித்துச் சொன்னார் சமுத்திரக்கனி. அமலாபாலுக்கு ஜோடி அவரேதானாம்..!

‘அமலாபாலா..?” என்று பத்திரிகையாளர்கள் சவுண்ட் விட்டவுடன், ‘அது என் பொண்ணு மாதிரி..’ என்று நறுக்குத்தெரித்தாற்போல் பதில் சொன்னார் சமுத்திரக்கனி. படத்தின் பெயர் கிட்னா..! இதென்ன தலைப்பு என்று மீடியா திருப்பிக் கேட்க “கிருஷ்ணா என்பதைச் சுருக்கி சினிமா மொழியில் கிட்னா என்று வைச்சிருக்கோம்..” என்றார்.(ஒருவேளை கிருஷ்ணா நதிக்கரையோரம் நடைபெற்று வரும் சர்ச்சைக்குரிய அம்பானிகளின் எரிவாயு தோண்டும் ஆலை பற்றிய பிரச்சினையோ..?)

எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. படத்துக்கு படம் சமூகத்தின் அவலங்களை, சீர்கேடுகளையே சொல்ல வேண்டும் என்று நினைக்கும் இயக்குநர் சமுத்திரக்கனியின் இந்த முயற்சி வெற்றி பெறட்டும்..!

Our Score