திரைப்படப் பாடல்களை எழுத கவிஞர்களுக்கு அந்த அனுபவம் தேவையில்லாமல், கேள்வி ஞானம் இருந்தாலே போதும் என்பார்கள். அனுபவமும் கிடைத்துவிட்டால் அந்தப் பாடல் உணர்வுப்பூர்வமானதாக இருக்குமென்பார்கள்.
‘நளனும் நந்தினியும்’ படத்தில் ‘வாடகை கூடு’ என்று துவங்கும் பாடலை எழுதியிருக்கிறார் மதன் கார்க்கி. படத்தின் கதைப்படி நாயகனும், நாயகியும் தத்தமது வீட்டாரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு புதிய வீட்டிற்கு குடி வருகிறார்கள். புதிய உறவுகள்.. புது சூழல்.. புது இடம்.. குறைவான வசதிகள்.. எதிர்பார்ப்பில்லாத தன்மை.. இது எல்லாமும் இந்தப் பாடலில் இருக்கவேண்டும் என்று மதன் கார்க்கியிடம் கேட்டுக் கொண்டாராம் இயக்குநர் வெங்கடேசன்..!
அப்போது மதன் கார்க்கியின் மனதில் அவரது தாய் தந்தையின் ஆரம்ப கால வாழ்க்கைதான் நினைவுக்கு வந்ததாம்..
கவிப்பேரரசு வைரமுத்துவும், அவரது மனைவி பொன்மணியும் காதலித்து திருமணம் செய்தவர்கள். திருமணத்திற்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்க.. தனிக்குடித்தனம் வந்தபோது ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டார்களாம்.. முதல் ஒரு மாதத்திற்கு அந்த வீட்டில் பேன் வசதியே கிடையாதாம்.. வைரமுத்து தான் வாங்கிய முதல் மாதச் சம்பளத்தில்தான் பேன் வாங்கி போட்டாராம்..
“இன்றைக்கும் இந்தச் சம்பவத்தை எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே மறக்காம இருக்காங்க.. அப்பப்போ எங்ககிட்டேயும் சொல்வாங்க.. அதையெல்லாம் மனசுல வைச்சுக்கிட்டுத்தான் இந்தப் பாடலை எழுதியிருக்கேன். நிச்சயமா இந்தப் பாடல் பேசப்படும்” என்றார் மதன் கார்க்கி.
இவர் சொன்னதுபோலவே இன்று நடந்த இப்படத்தி்ன் பாடல் வெளியீட்டு விழாவில் படத்தினை வாழ்த்திப் பேச வந்த இயக்குநர் பார்த்திபன், இந்தப் பாடல் வரிகளும், காட்சிகளை படமாக்கிய விதமும் அற்புதமாக இருக்கிறது என்று பாராட்டிவிட்டுப் போனார்.