முகிலன் சினிமாஸும், தங்கத் துளசி புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘சாலை,’
‘நஞ்சுபுரம்’, ‘அழகு குட்டிச் செல்லம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சார்லஸ் இந்த ‘சாலை’ படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.
‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகனான விஸ்வா இதில் ஹீரோவாக நடிக்கிறார். கிரிஷா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன்பு ‘அழகு குட்டிச் செல்லம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும், ’ஆடுகளம்’ நரேன், ஸ்ருதி, அஜித் மணியன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் ‘ஆடுகளம்’ நரேன் தவிர பலரும் புதுமுகங்கள்.
ஒளிப்பதிவு – ஜி.பாலமுருகன். இசை – வேத்சங்கர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தன்னுடைய முகிலன் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார் சார்லஸ். தயாரிப்பில் தங்க துளசி புரோடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.
இப்போதுள்ள அசாதாரணத் சூழலில் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தவே பலரும் அஞ்சுகிறார்கள்; தயங்குகிறார்கள். இந்த நேரத்தில் காஷ்மீர் பகுதியில் இந்தப் படத்திற்காக 45 நாட்கள் படப்பிடிப்பினை நடத்தி முடித்துவிட்டு வந்திருக்கிறது ‘சாலை’ படக் குழு.
காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் பற்றி இயக்குநர் சார்லஸ் பேசும்போது, “முதலில் நான் ‘அழகு குட்டி செல்லம்’ படத்துக்கு ஒரு நல்ல இடத்தைக் கொடுத்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சரிவர திரையரங்குகள் அமையாத போதிலும், படம் எல்லோர் மத்தியிலும் ‘நல்ல படம்பா’ என பேசப்பட்டதற்கு காரணம், பத்திரிகையாளர்கள்தான். அதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..!
இந்த ‘சாலை’ படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து காஷ்மீர் சென்ற ஒருவனை பற்றிய திகில் கதைதான் இந்தப் படத்தின் கரு.
காஷ்மீருக்கு இந்தப் படத்தில் மிக முக்கியமான பங்கு இருக்கிறது. இந்த படத்தை காஷ்மீரில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி நிச்சயம் வரும். இந்த ‘சாலை’ திரைப்படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். இதை ஒரு ‘ரோடு மூவி’ என்றும் கூறலாம். ஒரு பயணம் என்று இதைச் சொன்னாலும், படம் ஒரு தத்துவார்த்தமான முடிவைக் கொண்டது. எந்தவிதமான பயணத்தை ஒருவன் தன் வாழ்வில் அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் படம் சொல்லும்.
இந்தத் திகில் படத்துக்கு பனி படர்ந்த நிலப்பகுதி முக்கிய பின்னணியாக மட்டுமல்ல ஒரு பாத்திரம் போலவே அமையவேண்டும். அதற்காகவே நாங்கள் காஷ்மீர் போவது என்று முடிவு செய்தோம்.
ஒரு சில இயக்குநர்களுக்கு அவர்களது படங்களை மீடியம் பட்ஜெட்டில் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதைத் தாண்டி எடுக்கும் வசதியில்லாதபோது படத்தில் தரம் எப்படியும் குறைந்துவிடும்.
ஆனால் என்னுடைய இந்த ‘சாலை’ திரைப்படம் மீடியம் பட்ஜெட்டில் தயாரானாலும் படத்தின் தரம் சிறிதும் குறைந்துவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இது ஒரு விஷூவல் ட்ரீட்டாக இருக்க வேண்டும். சின்ன பட்ஜெட் படம் என்ற தோற்றமே வரக் கூடாது. பெரிய பட்ஜெட் படமாக தெரிய வேண்டும் என்று நினைத்து செயல்பட்டேன். ஆனால் அதற்காக பல சிரமங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது.
படத்தின் கதையைப் போலவே படப்பிடிப்பு நடத்திய கதையும் திகிலானதுதான். காஷ்மீரில் தற்போது நிலவும் அசாதாரணமான பதற்றமான சூழலில், அங்கு படப்பிடிப்புக்கு செல்ல யாருமே நினைக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது நாங்கள் அங்கு சென்று படப்பிடிப்பினை நடத்தி முடித்துவிட்டு வந்திருக்கிறோம்.
காஷ்மீருக்கென்று தனி விமான தளம் கிடையாது. ராணுவத்தின் விமான தளம்தான் காஷ்மீரில் உள்ள ஒரேயொரு விமான தளம். லடாக், ஜம்மு, காஷ்மீர் என மூன்று மாவட்டங்கள் அடங்கிய பகுதிகள் சேர்ந்ததுதான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்று அழைக்கப்படுகிறது. இதில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மிகவும் பதற்றமான பகுதியாகும்.
நாங்கள் அந்த மாநில அரசிடம் முறையான அனுமதி பெற்றுத்தான் படப்பிடிப்பு நடத்தினோம். என்றாலும், கத்தியின் மேல் நடப்பதுபோல்தான் ஒவ்வொரு நாளும் பயமாகவும், பதற்றமாகவும் இருந்தது.
அனுமதி கிடைத்து விட்டதே என்று சந்தோஷத்துடன் போய் இறங்கினால், அங்கே ஊர் முழுக்க ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்கள்… அதுவும் பத்தடிக்கு ஒருவர்வீதம் கைகளில் துப்பாக்கிகளுடன் சுற்றிலும் நிற்கிறார்கள். இப்படி ஆரம்பமே எங்களுக்கு பீதியைக் கிளப்பியது.
அது மட்டுமல்ல, அந்தப் பகுதியில் எப்போது தீவிரவாதிகள் சார்ந்த பிரச்சினை வெடிக்கும் என்று தெரியாது என்றும் சொன்னார்கள். இதைக் கேட்டு அப்படியே திகிலில் உறைந்து விட்டோம். இருந்தாலும், படப்பிடிப்புக்கு புறப்பட்டுவிட்டோம்.
அங்குள்ள மக்களின் உதவி இல்லாமல் அங்கே எதுவும் செய்யமுடியாது. பனித் துகள்களைப் போல் அங்கு வறுமையும் பரவிக் கிடக்கிறது. நாங்கள் அந்தப் பகுதி மக்கள் உதவியுடன்தான் களத்தில் இறங்கினோம். அவர்கள் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தார்கள் என்று சொல்வதைவிட, நாங்கள் உயிருடன் திரும்பி வர அவர்கள்தான் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நாங்கள் போனது பனியும், குளிரும் உச்சத்தில் இருக்கும் காலம். காஷ்மீரில் நிலப் பகுதியைப் பனி ஒரு போர்வை போல மூடி இருக்கும் காலம். அங்கே குளிர் மைனஸ் 15 டிகிரியிலிருந்து 20 டிகிரிவரை இருக்கும். குளிர் பகலிலேயே எலும்பை ஊடுருவிப் பார்க்கும். இரவில் உயிரை உறைய வைக்கும்படி இருக்கும்.
சாலைகளில் பனி பொழிந்து வழுக்கும் நிலையில் இருக்கும். அப்போது பயணம் பெரும் சவாலாக இருக்கும். ஒருபுறம் அதளபாதாள பள்ளத்தாக்கு இருக்கும். கரணம் தப்பினால் மரணம்தான். சாலை முழுக்க பனி உறைந்து வழி மறித்திருக்கும். அரசு வாகனம் ஒன்று பனியை அகற்றி போக்குவரத்துக்கு வழி செய்யும்.
சில இடங்களில் நாமே வாகனங்களைத் தள்ள வேண்டும். காஷ்மீரிகளுக்கு இந்தி பேசத் தெரியாது. காஷ்மீரி மொழி மட்டுமே பேசுவார்கள். நாங்கள் வண்டிகளை ‘தள்ளு தள்ளு’ என்று உயிர் பயத்தில் கத்திக் கொண்டே தள்ளியதைப் பார்த்த உதவிக்கு வந்த உள்ளூர் காஷ்மீரிகள், தமிழில் ‘தள்ளு.. தள்ளு வேகமா!’ என்று சேர்ந்து எங்களுடன் சேர்ந்து கத்திக் கொண்டே தள்ளியது அந்த பதற்றத்திலும் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. அது மட்டுமல்ல, நாங்கள் காஷ்மீர் மலைப்பாதையில் சிரமப்பட்டு நிறைய காட்சிகள் எடுத்தோம்.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள் சுழலும் பனிப் புயலில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்டோம். இரவு தொடங்குவதற்குள் ஹோட்டலுக்கு திரும்பி கம்பளிக்குள் புகுந்துவிடவேண்டும். ஆனால் சாலைகளில் உள்ள பனிப்பொழிவால் ஒரு நாள் நடு இரவுதான் வர முடிந்தது. உயிர் போய் உயிர் வந்த நாள் அது.
அங்குள்ள மக்களுக்கு இந்த சூழலை அணுகும்விதம் நன்றாகவே தெரிந்திருப்பதால் லாவகமாக நடந்து கொள்கிறார்கள். மாலை ஐந்து மணிக்கெல்லாம் சாலைகளில் ஆள் நடமாட்டம் குறைந்துவிடுகிறது.
நான்கைந்து வாகனங்கள் முழுக்க படக் குழுவினர் நாங்கள் 50 பேர்தான் இருந்தோம். சற்றே வேகம் காட்டினால்கூட, பாதை சறுக்கும். விழுந்தால் பாதாளம்தான். இப்படி மாலை 3.30 மணிக்கு புறப்பட்ட நாங்கள், இரவு 12.30-க்குத்தான் தங்கியிருந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.
இரண்டரை மணி நேரத்தில் செல்ல வேண்டிய தூரத்தை ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகுதான் அடைய முடிந்தது. அவ்வளவு பயந்து போனோம். ஒரு கட்டத்தில் ஊர்ப் போய்ச் சேருவோமா அல்லது இங்கேயே சாகப் போகிறோமா என்றுகூட நினைத்தோம்.
இப்படியெல்லாம் சிரமப்பட்டுத்தான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் குல்மார்க், சோனா மார்க், பெஹல்காம் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படி காஷ்மீரில் இதுவரை யாரும் பார்க்காத இடங்களில் எடுத்திருக்கிறோம். படமே ஒரு காட்சி அனுபவமாக இருக்கும்.
இவ்வளவு போராட்டங்களுடன் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறோம். படத்தின் கதையில் 90 சதவிகித காட்சிகள் காஷ்மீரில்தான் நடக்கும். மீதி 15 நாட்கள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
எடுத்ததைப் பார்த்தவர்கள் வியந்து பாராட்டும்போது படப்பிடிப்பு அனுபவம் நம்ப முடியாத கனவு போல இருக்கிறது. நிச்சயம் ‘சாலை’ நான் எதிர்பார்த்த மாதிரியே பிரம்மாண்டமான படமாக வந்திருக்கிறது. ஒரு விஷுவல் விருந்தாக இருக்கும்” என்கிறார் இயக்குநர் நம்பிக்கையுடன்.
இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, தொழில் நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.