‘மைனா’ என்ற மிகப் பெரிய வெற்றிப் படத்தில் நடித்த விதார்த், தொடர்ந்து நடித்த பல படங்களில் நடித்தாலும் வெற்றி என்னவோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் நிஜமான வெற்றி கிடைத்த சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் விதார்த்.
அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘ஆள்’ திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் அமோக வரவேற்புடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். ‘ஆள்’ படத்துக்கு மக்கள் மத்தியில் கிடைத்த மகத்தான வரவேற்பு விதார்த்தை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது.
”இந்த வெற்றியை கொடுத்த ரசிகர்களுக்கும், மீடியாக்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்” – என்று உணர்ச்சிவசப்படும் விதார்த், தற்போது இன்னொரு வித்தியாசமான படத்தில் நடித்து வருகிறார்.
சக்கரவர்த்தி ஃபிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் நந்து தயாரிப்பில், ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘காடு’ என்ற படம்தான் அது. காடு படத்தில் கதாநாயகியாக சமஸ்கிருதி என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர் கேரள வரவு. கேகே இசையமைக்கிறாராம்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகில் உள்ள மலை கிராமம் ஒன்றில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற்றிருக்கிறது. அந்த மலை கிராமத்தில் உள்ள வீடுகளுடன், மேலும் சில வீடுகளை செட் போட்டு படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். அது இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கத்தின் சொந்த ஊராகும்.
காடு பற்றி விதார்த் என்ன சொல்கிறார்?
”இந்தப் படம் என் லைஃபில் திருப்புமுனையைத் தரப் போகிற படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘மைனா’, தற்போது ‘ஆள்’ படங்களுக்கு ஆதரவு தந்த ரசிகர்கள், ‘காடு’ படத்துக்கும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்கிறார்.