full screen background image

“வரிவிலக்கு அளிக்க 46 நாட்கள் கால தாமதமா..?” உதயநிதி ஸ்டாலின் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி..!

“வரிவிலக்கு அளிக்க 46 நாட்கள் கால தாமதமா..?” உதயநிதி ஸ்டாலின் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி..!

கேளிக்கை வரி விலக்கு பிரச்சினை தொடர்பாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 4 வாரங்களுக்குள் அரசிடம் இருந்து அறிக்கை பெற்று தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டது.

திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படம் ‘யு’ சான்றிதழ் பெற்றபோதும், அதற்கு அரசு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

கேளிக்கை வரி விலக்கு மறுக்கப்பட்டதை எதிர்த்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ‘‘தமிழில் பெயர் வைக்கப்பட்டு ‘யு’ சான்றிதழ் பெறப்படும் தமிழ் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆனால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த ‘ஏழாம் அறிவு’ படத்துக்கு தமிழக அரசு விதித்து இருக்கும் இரு தகுதிகள் இருந்தும் வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. மாறாக ‘சைக்கிள்’, ‘ரம்மி’ என்று வேற்று மொழி பெயரிட்ட படங்களுக்கு வரிவிலக்கு அளித்து உள்ளது. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மேற்கொண்ட நடவடிக்கை’’ என்று அந்த வழக்கில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வரிவிலக்கு குழுவில் உள்ளவர்கள் திரைப்படத் துறையின் பல்வேறு பிரிவில் இருந்து வருபவர்கள். அவர்கள் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்கள் என்று கூறுவதற்கு இல்லை என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் சார்பில் வக்கீல்கள் சுப்பிரமணிய பிரசாத் மற்றும் ராகேஷ் சர்மா ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல் அமரேந்திர சரண் ஆஜராகி வாதாடினார். அவர் தன்னுடைய வாதத்தின் போது, ‘‘ஒரு திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்தால், அந்த படம் வெளியான ஓரிரண்டு வாரங்களில் கிடைக்கும் வசூலில் அதன் பயன் வெளிப்படையாக பிரதிபலிக்கும். ஆனால் ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்துக்கு 46 நாட்கள் கழித்தே வரிவிலக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் தொடர்ச்சியான திரைப்படங்களுக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு வழங்குவது இல்லை. அனைத்து நிபந்தனைகளை கடைப்பிடித்தும் இந்த நிறுவனத்தின் படங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது’’ என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தமிழக அரசு வக்கீல்களிடம், ‘‘இப்படி தாமதமாக வரிவிலக்கு அறிவிக்கப்படுவதன் காரணம் என்ன?’’ என்று கேட்டனர்.

அதற்கு தமிழக அரசின் வக்கீல்கள் சுப்பிரமணிய பிரசாத் மற்றும் ராகேஷ் சர்மா ஆகியோர், “வரி விலக்கு அளிக்கும் விஷயத்தில் தமிழக அரசு எந்த விதமான பாரபட்சமும் காட்டுவது இல்லை என்றும், முறையான விதிமுறைகளை கடைப்பிடித்து முடிவெடுக்கும்போது சில நேரங்களில் தாமதமாகி விடுகின்றது…” என்றும் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நீதிபதி மிஸ்ரா, “ஏழாம் அறிவு படத்தின் கதை என்ன..?” என்று கேட்டார். இதைத் தொடர்ந்து, அந்த படத்தின் கதையை வக்கீல் ராகேஷ் சர்மா விரிவாக விவரித்தார். “திரைப்படத்தில் எவ்விதமான அரசியல் கருத்துகளும் இல்லை. அரசு இந்த காரணங்களுக்காக தாமதம் செய்யவில்லை., சில நடைமுறை விதிகளை கடைப்பிடிக்கும்போது இப்படி தாமதம் நேர்ந்து விடுகிறது..” என்றும் கூறினார்.

அதற்கு, “ஒரு படத்துக்கு வரி விலக்கு அளிக்க 46 நாட்கள் என்பது மிகவும் அதிகப்படியானது…” என்று கூறிய நீதிபதிகள், பொதுவாக திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க தேவையான குறைந்தபட்ச கால அவகாசம் பற்றியும், அதற்காக தற்போது இருக்கும் உரிய விதிமுறைகள் பற்றியும் தமிழக அரசிடம் இருந்து விரிவான அறிக்கை ஒன்றை பெற்று கோர்ட்டில் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்தப் படத்திற்கு பின்பு ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’, இன்றைக்கு வெளியாகியிருக்கும் ‘நண்பேன்டா’ ஆகிய படங்களுக்கும் வரிவிலக்கு சட்டவிரோதமாக மறுக்கப்பட்டிருக்கிறது. இதனையும் இந்த வழக்கோடு இணைத்துச் சொல்லியிருக்கிறார்களாம்..!

பார்ப்போம்.. என்னதான் நடக்கிறதென்று..?

Our Score