பட அதிபர் ஞானவேல் ராஜா தயாரித்து, முத்தையா டைரக்டு செய்து, நடிகர் கார்த்தி நடித்த ‘கொம்பன்’ திரைப்படம் நேரடியாக இரு குறிப்பிட்ட சாதிகளை இழிவுபடுத்தி இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, ‘புதிய தமிழகம்’ கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின்படி, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் கே.ரவிராஜ பாண்டியன், ஏ.சி. ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் ஆகியோர் உள்பட 10 பேர் கொண்ட குழு ‘கொம்பன்’ படத்தை பார்த்து உடனடியாக, அது தொடர்பான அறிக்கையை ‘தொலைநகல்’(பேக்ஸ்) மூலம் மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு அனுப்பும்படி, நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் கூறி இருந்தனர்.
இதன்படி நேற்று காலை 8 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘போர் பிரேம்’ தியேட்டரில் ‘கொம்பன்’ படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீதிபதிகள் கே.ரவிராஜபாண்டியன், ஏ.சி.ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் இருவரும் காலை 7.50 மணிக்கே அந்த தியேட்டருக்கு வந்து காத்திருந்தனர்.
காலை 8.40 மணிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட மற்றவர்கள் வந்தனர். ‘கொம்பன்’ படத்தின் ‘ஸ்கிரிப்ட்’ உள்பட தகவல்களை டாக்டர் கிருஷ்ணசாமியும், மற்றவர்களும் கேட்டனர். அப்போது அவர்களுக்கும், ‘கொம்பன்’ பட குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
இந்தநிலையில் நீதிபதிகள் கே.ரவிராஜ பாண்டியன், ஏ.சி.ஆறுமுக பெருமாள் ஆதித்தன் பொறுமையுடன் காத்திருந்தனர். காலை 9.30 மணிக்கு ஒரு வழியாக ‘கொம்பன்’ படம் திரையிடப்பட தொடங்கியது.
படம் திரையிடப்பட்டு 3 நிமிடங்களுக்குள் நீதிபதிகள் 2 பேரும் தொடர்ந்து படத்தை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் தியேட்டரில் இருந்து வெளியேறி சென்றனர். நேரடியாக சென்னை ஐகோர்ட்டுக்கு அவர்கள் சென்று அங்கிருந்தபடி அறிக்கை தயாரித்து மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு ‘பேக்ஸ்’ மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கொம்பன் படம் ஒரு நாள் முன்பாக இன்று (1-ந்தேதி) திரைக்கு வரும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிவித்தார். இதையடுத்து இன்று காலை தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். காலை காட்சி, பகல் காட்சிகள் பார்க்க டிக்கெட்டுக்கு முண்டியடித்தார்கள். ஆனால் படம் வெளியாகவில்லை.
‘கொம்பன்’ படத்துக்கு எதிரான மனு, நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
அந்தத் தீர்ப்பில், “கொம்பன் படத்தில் குறிப்பிட்ட ஒரு சாதி குறித்து ஆட்சேபகரமான வசனங்கள், காட்சிகள் இருப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு படத்தைப் பார்க்க உத்தரவிடப்பட்டது. அந்தக் குழுவால் படத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை.
கொம்பன் படத்தை யாருமே முழுமையாகப் பார்க்கவில்லை. படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள், வசனங்கள் இருப்பதற்கு போதுமான ஆதாரங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. எனவே படத்திற்குத் தடை விதிக்க முடியாது. படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
சாதி மோதலை ஏற்படுத்தும்வகையிலும், பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலும் எடுக்கப்படும் படங்களை வெளியிடக்கூடாது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், சாதிப் பிரச்சினையை ஏற்படுத்தும்வகையிலும் எந்த ஒரு மதத்தையோ, சாதியையோ குறை கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
இது போன்ற சாதி பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் படம் எடுப்பவர்களால், அப்பாவி மக்களின் அமைதியான வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படுவதால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
படத்தைப் பார்த்த பிறகு படத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான காட்சிகள், வசனங்கள் இருந்தால் மனுதாரர் இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். இதற்காக, இந்த வழக்கு வருகிற 6-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது..” என்று தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் ‘கொம்பன்’ திரைப்படம் மாலை காட்சி முதல் ஓடத் துவங்கியது.