full screen background image

வீரப்பனை பற்றி ராம்கோபால் வர்மா கிளப்பிவிடும் புதிய கதை..!

வீரப்பனை பற்றி ராம்கோபால் வர்மா கிளப்பிவிடும் புதிய கதை..!

இணையத்தளங்களில் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டும், மிக முக்கியமான சம்பவங்களை வைத்துமே படங்களை இயக்கி வரும் இயக்குநருமான ராம்கோபால் வர்மா இந்த முறை சந்தனக் கடத்தல் வீரப்பன் கதையைக் கையில் எடுத்துள்ளார்.

veerappan-1

ஏற்கெனவே ஆந்திராவில் புகழ் பெற்ற பரிதலா ரவியின் வாழ்க்கைக் கதையை ‘ரத்தச் சரித்திரம்’ என்கிற பெயரில் எடுத்து பரபரப்பாக்கினார் வர்மா. இப்போது ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்கிற பெயரில் இவர் எடுத்திருக்கும் இந்தப் புதிய படம் பல வழக்கம்போல பல சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.

‘இந்தப் படத்தை எடுக்க தன்னிடம் அனுமதி பெறவில்லை’ என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து கொள்வதாக இரு தரப்பினும் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால் இப்போது படத்தை எடுத்து முடித்து ரிலீஸாக தயாராகியிருக்கும் சூழலில் மீண்டும் முத்துலட்சுமி கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். ‘இந்தப் படத்தில் என் கணவர் வீரப்பனை கெட்டவனாகவும், சமூக விரோதியாகவும் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இந்தப் படத்தை நான் பார்வையிட்ட பிறகு, என் அனுமதி பெற்றுத்தான் வெளியிட வேண்டும்’ என்று கோரியிருக்கிறார். இந்த வழக்கு இப்போது நிலுவையில் உள்ளதாம்.

killing-veerappan

இந்த நிலையில் இந்த ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ படத்தை வரும் ஜூன் 3-ம் தேதி ரீலிஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸாகிறது.

இதனால் தமிழ்ப் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பிற்காக நேற்றைக்கு பிரசாத் லேப் தியேட்டருக்கு தனது படை, பரிவாரங்களுடன் வந்தார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

Villathi Villain Veerapan Press Meet Stills (3)

“வீரப்பன் ஒரு கொலையாளி.. கெட்டவன். பல போலீஸ்காரர்களை கொலை செய்தவன். பொது மக்களை கொலை செய்தவன்.. சந்தனக் கடத்தல் தொழிலை நடத்தியவன்.. மொத்த்த்தில் அவன் ஒரு சமூக விரோதி…” என்கிற பார்வையிலேயே படத்தை உருவாக்கியிருப்பது படத்தின் டிரெயிலரிலேயே தெரிந்தது.

இதன் உச்சக்கட்டமாக, ‘வீரப்பன் தன் மகளையே கொலை செய்திருக்கிறான்’ என்றும் டிரெயிலரில் சொல்லியிருக்கிறார் ராம்கோபால் வர்மா.

Villathi Villain Veerapan Press Meet Stills (12)

படம் பற்றி ராம்கோபால் வர்மா பேசும்போது, “எனக்குக் கிடைத்த தகவல்களை வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். வீரப்பன் வாழ்ந்த பகுதிகளில் இருந்த மக்கள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று பல தரப்பட்டவர்களிடம் வீரப்பன் குறித்து நான் பேசி தகவல்களைச் சேகரித்தேன். அதன்படிதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்..” என்றார்.

“வீரப்பன் வேட்டை என்கிற பெயரில் மலைவாழ் மக்கள் மீது தமிழக, கர்நாடக போலீஸ் நடத்திய மிருகவதை சித்ரவதைகள் பற்றி படத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா..?” என்ற கேள்விக்கு.. “நான் எல்லாவித கோணங்களிலும்தான் படத்தை அணுகியிருக்கிறேன். யாரையும் கூட்டியோ, குறைத்தோ படத்தில் காட்டவில்லை. ஆனால் வீரப்பன் ஒரு கொலையாளி என்கிற பார்வையில்தான் படம் நகர்கிறது.. இதை மறுப்பதற்கில்லை..” என்றார்.

அவர் மேலும்பேசும்போது, “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் மாறுபட்ட கோணங்கள் இருக்கும். இது என்னுடைய கோணத்தில் வீரப்பன் பற்றிய கதை. அவ்வளவுதான்..” என்றார் சிம்பிளாக.

“வீரப்பன் தன் மகளை கொலை செய்தான் என்பதற்கு என்ன ஆதாரம்..?” என்று கேட்டதற்கு, “இதுவும் எனக்குக் கிடைத்த தகவல்கள்தான்..” என்றார். “தகவல்களின் உண்மைத்தரம் அறிய வேண்டாமா..? யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் சொல்ல முடியுமா..?” என்று கேட்டதற்கு, “ஒரு திரைப்படத்தின் இயக்குநருக்கு அதற்கான சுதந்திரம் உண்டு. அந்த்த் தகவலை உண்மை என்று நான் நினைக்கிறேன். அதனால் படமாக்கியிருக்கிறேன்.” என்றார் அலட்சியமாக.

படத்தின் கதைப்படி ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கடைசி முயற்சியாக வீரப்பனை வீழ்த்த விஜயகுமார் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவருக்கு உதவியாக அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டார். இந்த இருவரின் கூட்டு முயற்சியால்தான் வீரப்பனின் கதை முடிந்தது.

ஆனாலும் இன்னமும் வீரப்பன் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பதற்கான உண்மை வெளிப்படவில்லை. ஒரு சிலர் அவர் போலீஸில் சிக்காமல்.. துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்கிறார்கள். இன்னும் சிலர் கண் பரிசோதனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று நெருங்கிய உறவினர்களால் காட்டில் இருந்து வெளியில் வரவழைக்கப்பட்டு போலீஸில் பிடிபட்டு கொல்லப்பட்டார் என்கிறார்கள்.

இதில் எது உண்மை என்று இப்போதுவரையிலும் தெரியவில்லை. இந்தப் படத்தில் எப்படி இந்த உண்மை வெளிப்படுகிறது என்பதை படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

படத்தின் கதைப்படி அதிகாரி செந்தாமரைக் கண்ணன் பிரியா என்ற ஒரு பெண்ணை வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியிடம் நெருங்கிப் பழகும்படி அனுப்பி வைக்கிறார். அப்படி அனுப்பி வைக்கப்பட்ட பிரியா முத்துலட்சுமிக்கு மிக நெருங்கியவராக ஆகி.. இவர் மூலமாகவே வீரப்பனை பிடித்து கொல்கிறதாம் போலீஸ்.

வீரப்பன் கொலை பற்றிய இந்தக் கதையும் பரபரப்பாகத்தான் இருக்கும் போலத்தான் தெரிகிறது. ஆனால் இதில் எத்தனை சதவிகிதம் உண்மை  இருக்கும் என்பதுதான் தெரியவில்லை..

Our Score