ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘வீரப்பனின் கஜானா’.
இந்தப் படத்தில் நாயகனாக யோகி பாபு நடித்திருக்கிறார். மேலும், ‘மொட்டை’ ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா ஆகிய இளைஞர் பட்டாளமும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறது.
’ராட்சசி’ படத்தின் இயக்குநரான கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து இந்தப் படத்திற்கு கதை எழுதியுள்ளனர். அறிமுக இயக்குநர் யாசின் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த ‘வீரப்பன் கஜானா’ காடுகளின் பெருமையையும், மர்மத்தையும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது.
காட்டின் பெருமையை பேன்டஸி, காமெடி, த்ரில்லர் கலந்து பொழுதுபோக்கிற்கு பஞ்சம் வைக்காமல் பேசும் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் காட்டின் காவலனாக இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் சம்பந்தமான காட்சிகளும் படத்தில் இருக்கிறது. முக்கியமானதாக இருக்கும்.
இந்த நிலையில் தற்போது படத்தில் மிகப் பெரிய மாற்றம் ஒன்று நடைபெற உள்ளது.
‘வீரப்பனின் கஜானா’ என்று இந்தப் படத்திற்குத் தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், இப்படத்தின் கதைக்கும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
முழுக்க, முழுக்க சிறுவர்களை ஈர்க்கும் வகையிலும், பெரியவர்களை சிரிக்க வைக்கும் வகையிலும் காட்டையும், அதனைச் சார்ந்த விஷயங்களையும் சுவாரஸ்யமாக சொல்லும் வகையில்தான் இப்படத்தின் திரைக்கதையும், காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், படத்தின் தலைப்பு தொடர்பாக படக் குழுவினரை தொடர்பு கொண்டு பேசிய மறைந்த வீரப்பன் குடும்பத்தார், ‘வீரப்பன்’ என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம்… என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று படக் குழுவினர் ‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர்.
எனவே, இதைவிட சுவாரஸ்யமான தலைப்பினை விரைவில் படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.