‘பாக்கணும் போல இருக்கு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வழக்கம்போல நட்சத்திரங்களின் அணிவகுப்பு.. படத்தில் நடித்தவர்களையும் தாண்டி, தயாரிப்பாளரின் இன்னொரு படமான கேபிள் சங்கரின் ‘தொட்டால் தொடரும்’ படத்தில் நடித்தவர்களும் மேடையேறி வாழ்த்திவிட்டுப் போனார்கள்..!
அபிராமி திரையரங்கு உரிமையாளர் ராமநாதன் பேசும்போது “எங்களை வாழ வைப்பது சின்ன பட்ஜெட் படங்கள்தான். பெரிய பட்ஜெட் படங்கள் வருஷத்துக்கு 18 படங்கள்தான் வருது. அதுல சிலது மட்டுமே 2, 3 வாரத்துக்கு மேல ஓடுது.. மிச்ச வாரத்துக்கு நாங்க எங்கங்க போவோம்..? அப்போ, சின்ன பட்ஜெட் படங்கள்தான் எங்களை காப்பாத்துது..” என்றார்.
அபிராமி தியேட்டரில் எத்தனை புதிய, சின்ன பட்ஜெட் படங்களை திரையிட்டார்கள் என்பதை இனிமேல்தான் கண்டு பிடிக்கணும். தமிழகத்தில் இருக்கும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்காரர்கள், சின்ன பட்ஜெட் படங்களை சீந்துவதேயில்லை.. பெரிய பட்ஜெட், மீடியம் பட்ஜெட் படங்களை மட்டுமே அவர்கள் திரையிட அனுமதிப்பார்கள்.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் விலை 120 ரூபாய் என்பதாலும், முகம் தெரியாதவர்களின் படங்களுக்கு இத்தனை ரூபாய் கொடுத்து யாரும் பார்க்க ரசிகர்கள் வர மாட்டார்கள் என்கிற உண்மையும் நமக்குத் தெரிந்ததுதான்.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில்கூட சின்ன பட்ஜெட் படங்களைத் திரையிட்டு, டிக்கெட் விலையையும் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நிச்சயமாக சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு கூட்டத்தைக் கூட்ட பெரிதும் உதவியாக இருக்கும். அதைச் செய்யாமல் இப்படியே வாயாலேயே முழம் அள்ளினால் எப்படி..? ஆனால் மல்டிபிளக்ஸ் தவிர மற்ற ஏ, பி. சி கிரேடு தியேட்டர்களை காப்பாற்றுவது சின்ன பட்ஜெட் படங்கள்தான். இந்தப் படங்கள் மட்டும் வரவில்லையெனில் தியேட்டர்களை மூடுவதைத் தவிர வேற வழியிருக்காது..
இவர் அடுத்து பேசியது இன்னுமொரு காமெடி.. “போன டிசம்பர் மாசம் 31 நாள்ல மட்டும் 18 படங்கள் ரிலீஸாகியிருக்கு. இப்படி ஒட்டு மொத்தமா படத்தை ரிலீஸ் செஞ்சா எப்படி..? தயாரிப்பாளர் சங்கம் இதை கொஞ்சம் கவனிச்சு கட்டுப்பாடு கொண்டு வரணும்..” என்றார்.
தமிழக அரசு வழங்கும் சின்ன பட்ஜெட் படங்களுக்கான மானியம் தற்போது வழங்கப்படாமல் இருந்தாலும், கூடிய சீக்கிரமே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு உண்டு. அதனால்தான் அந்த வருடத்திற்குள்ளாகவே படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அரசின் அழைப்புக்காக காத்திருக்கலாம் என்று முடிவு செய்து படத்தை சட்டென்று கடைசி நிமிடத்தில் ரிலீஸ் செய்துவிட்டார்கள். இதிலென்ன தவறு..? நல்ல படமா இருந்தா மக்கள் பார்க்கப் போறாங்க..? இல்லாட்டி போயிக்கிட்டே இருக்கப் போறாங்க.. படத்தை நல்லவிதமா எடுக்காததன் தவறை தயாரிப்பாளரும், இயக்குநரும்தான் அனுபவிக்கணும். இதற்கு மக்கள் எப்படி பொறுப்பாக முடியும்..? வந்த 18 படங்களில் சிறந்த படங்களை மீடியாக்கள் முன்னிறுத்தி.. மவுத் டாக் பரவி.. அதன் பிறகு மக்கள் தியேட்டர்களுக்கு ஓடி வந்து பார்ப்பதற்குள், தியேட்டர்காரர்களே படத்தை தூக்கிவிடுகிறார்களே.. அது யார் தப்பு..?
சினிமாவுலகத்தில் ஒவ்வொரு துறையினரும், அவரவர் தவறுகளை மறைத்துவிட்டு மற்றவர்களையே குறை சொல்லி பொழைப்பை ஓட்டி வருகிறார்கள்..! பூனைக்கு யார்தான் மணி கட்டுவது..?