பொதுவாக சினிமாவுலகத்தில் ரிட்டையர்ட்மெண்ட் என்ற வார்த்தைக்கே இடமில்லை.. சாகும்வரையிலும் நடிப்பார்கள்.. இயக்குவார்கள்.. ஏதாவது வேலை செய்வார்கள்.. ஆனால் சினிமாவில் உச்சாணிக் கொம்பில் இருக்கும் நிலையிலேயே, ஒருவர் தனது வேலையில் இருந்து ரிட்டையர்டாகிறேன் என்று சொல்வது ஆச்சரியமாக இல்லையா..?
தெலுங்கு சினிமா இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிதான் இந்த ஓய்வு அறிக்கையை வெளியிட்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்டு 200 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் கீரவாணியின் இசைக்கென்றே தெலுங்குலகில் தனி மார்க்கெட் உள்ளது.. ‘அன்னமய்யா’ என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார். 8 முறை ஆந்திர அரசின் நந்தி விருதைப் பெற்றிருக்கிறார். 4 முறை பிலிம்பேர் விருதைப் பெற்றிருக்கிறார்.
‘அழகன்’ தமிழ்ப் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருதினையும் பெற்றிருக்கிறார் கீரவாணி. தமிழில் ‘அழகன்’, ‘நீ பாதி நான் பாதி’, ‘சேவகன்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதி மல்லி’, ‘பிரதாப்’, ‘தேவராகம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்..
ஓய்வு முடிவு பற்றி கூறியிருக்கும் கீரவாணி, “1989-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதியன்று சென்னை பிரசாத் ஸ்டூடியோவில்தான் நான் முதன் முதலாக இசையமைக்கத் தொடங்கினேன். அப்போதே நான் ரிட்டையர்டாகும் தேதியையும் முடிவு செய்திருந்தேன். அதன்படியே இப்போது அறிவிக்கிறேன். வரும் 2016-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி நான் நிச்சயமாக இசையமைப்புப் பணியில் இருந்து ஓய்வு பெறுவேன்.. எனது ரசிகர்களுக்கும், என்னை நேசித்த, வாய்ப்பளித்த கலைஞர்களுக்கும் எனது நன்றி..” என்று தெரிவித்திருக்கிறார்.
தெலுங்குலகின் தற்போதைய ஹாட்டான இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலியின் உறவினரான கீரவாணி, ராஜமெளலியின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். ராஜமெளலியின் இயக்கத்திலும் ‘மரியாதை ராமண்ணா’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘யமகொண்டா’, ‘சிம்ஹாத்ரி’, ‘மகாதீரா’, ‘நான் ஈ’ என்று இவரது இசையமைப்பிலும் வெளியான படங்கள் அனைத்தும் மிகவும் பேசப்பட்டவை. இப்போது தயாரிப்பில் இருக்கும் ராஜமெளலியின் ‘பாகுபாலி’க்கும் இவர்தான் இசையமைத்திருக்கிறார்.
தமிழில் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு அவரது படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்திருக்கும் பெருமை பெற்றவர்.. ஓய்வு என்பது அவராகவே தேடிக் கொண்டது என்றாலும், இந்திய அளவில் இந்த ஓய்வு அறிவிப்பு துவே முதல் முறை என்பதால் கீரவாணி பெரிதும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
இவருடைய இசையில் ‘அழகன்’ படத்தின் அற்புதமான பாடல் இதோ :