‘மூன்று முகம்’ படத்துக்குப் பிறகு ‘தர்பாரி’ல்தான் பவர்புல் கேரக்டர்” – நடிகர் ரஜினி பேச்சு..!

‘மூன்று முகம்’ படத்துக்குப் பிறகு ‘தர்பாரி’ல்தான் பவர்புல் கேரக்டர்” – நடிகர் ரஜினி பேச்சு..!

‘லைகா புரொடெக்சன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று மாலை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் ‘லைகா’ நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை நிவேதா தாமஸ், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், கவிஞர் விவேக், இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் விவேக், யோகிபாபு மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “இந்தத் ‘தர்பார்’ படம் என் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்கள் எல்லோருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்.

darbar-audio-function-stills-46

‘ரமணா’, ‘கஜினி’ என்று முருகதாஸ் இயக்கிய படங்களைப் பார்த்துவிட்டு அவருடன் படம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அவரிடம் பேசினேன். அப்போது அது ஒத்து வரவில்லை.

நான் ‘சிவாஜி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அவர் ஹிந்தியில் ‘கஜினி’யில் பிஸியாக இருந்தார். நான் ‘லிங்கா’ படத்தில் நடித்த பிறகு இனிமேல் படங்களில் இளமையான தோற்றத்தில் நடிக்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதன் பிறகும் நானும், முருகதாஸூம் இணைந்து படம் செய்வது தள்ளி போய்க் கொண்டே இருந்தது.

இடையில என் வயதுக்கேற்றாற்போல ‘காலா’, ‘கபாலி’ என படங்கள் பண்ணிக் கொண்டிருந்தேன். அப்போ 1990-களில் இருந்தது போல் என்னை பார்க்க வேண்டும் என்று சொல்லி கார்த்திக் சுப்புராஜ் `பேட்ட’ எடுத்தார். அவர் என்னை இளமையாக காண்பிக்க நினைத்து வேலை பார்த்தார்.

அதைப் பார்த்து முடிக்கும் முன் ஒரு வாரத்தில் அதேபோன்ற ஒரு ஸ்கிரிப்ட் உடன் முருகதாஸ் வந்திருந்தார். இப்படித்தான் இந்தப் படம் துவங்கியது. இப்போது ‘தர்பார்’ என்ற இந்த அருமையான ஒரு படத்தை முருகதாஸ் கொடுத்து இருக்கார்.

darbar-audio-function-stills-31

இந்தத் ‘தர்பார்’ படமும் மும்பையில் நடப்பது போன்ற கதைதான். ‘மூன்று முகம்’ படத்துக்கு அப்புறம் இந்த படத்துலதான் ஒரு பவர் புல்லான கேரக்டர்ல நடித்திருக்கிறேன். நான் 150 படங்களில் நடித்திருந்தாலும் த்ரில்லர், சஸ்பென்ஸில் இது ஒரு திருவிழா மாதிரியான திரைப்படம். அவ்வளவு சிறப்பாக செய்துள்ளார் முருகதாஸ்.

‘தளபதி’ படத்திற்குப் பின் இந்தப் படத்தில்தான் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுடன் இணந்துள்ளேன். என்னுடைய ஒவ்வொருப் படத்தின்போதும் ‘சந்தோஷ் சிவன் இதுல இருக்காரா.. இருக்காரா..?’ என்று கேட்பேன். 29 வருடங்களுக்கு பிறகு அவருடன் இந்தப் படத்தில் இணந்துள்ளதில் எனக்கு மகிழ்ச்சி.

‘சந்திரமுகி’க்கு பிறகு நயன்தாராவுக்கு இந்தப் படத்தில் ஒரு அருமையான கேரக்டர் கிடைத்திருக்கிறது. அனிருத் நம்ம வீட்டு குழந்தை. அவரது வளர்ச்சி படத்துக்கு படம் உயர்வதைப் பார்த்ததில் எனக்கு சந்தோஷம். இளையராஜாவுக்கு ஸ்டோரி சென்ஸ் இருப்பதுபோல எந்த இசையமைப்பாளருக்கும் இல்லை. அந்த க்வாலிட்டி அனிருத்துக்கு இப்போதே வந்துள்ளது. ‘பேட்ட’ ஆலபத்தைவிட ‘தர்பார்’ இன்னும் சிறப்பாக இருக்கும்.

darbar-audio-function-stills-30

வருகிற 12-ம் தேதி எனது பிறந்த நாள். இது எனக்கு முக்கியமான பிறந்த நாளாகும். 69-வது வயதில் இருந்து 70-வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். நான் 12-ம் தேதி ஊரில் இருக்க மாட்டேன். ரசிகர்கள் எனது பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். அதற்குப் பதிலாக ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்யுங்கள்.

இந்த விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கம் தமிழக அரசுக்குச் சொந்தமானது. இந்த அரசின் மீது பல விமர்சனங்களை வைத்துள்ளேன். அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் இந்த அரங்கத்தில் விழா நடத்த அனுமதி அளித்ததற்காக தமிழக அரசுக்கு எனது நன்றிகள்.

எவ்வளவுதான் உழைத்தாலும், திறமை இருந்தாலும், நேரமும், காலமும் மிக முக்கியம். நல்ல மனிதர்கள் அமைவதும் முக்கியம். இந்தத் ‘தர்பார்’ படத்தில் அவை எல்லாமும் அமைந்துள்ளது. இந்தப் படம் நிச்சயமாக வெற்றியைப் பெறும்..

இப்போது சமூக வலைத்தளங்களில் நிறைய நெகட்டிவிட்டி செய்திகள்தான் பரவி வருகிறது. பிறரை புண்படுத்துவது இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது. நீங்கள் அப்படியிருக்காதீர்கள்.. சினிமா, அரசியம் என எல்லாவற்றிலும். அன்பு செய்யுங்கள்…” என்று தனது ரசிகர்களையும் கேட்டுக் கொண்டார்.

Our Score