நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!

நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!

நடிகை சுஹாசினியின் தந்தையும், நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும், தேசிய விருது பெற்ற நடிகருமான சாருஹாசனுக்கு வரும் டிசம்பர் 12-ம் தேதி துவங்கவுள்ள 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்படவுள்ளது.

இயக்குநர் விஜயஸ்ரீஜியின் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான ‘தாதா 87’ படத்தில் தனது 87-வது வயதில், ஒரு அதிரடியான தாதா வேடத்தில் நடித்த சாருஹாசன், இன்றும் தனது 90-வது வயதிலும், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

பழம்பெரும் ஹாலிவுட் நடிகரான கிளின்ட் ஈஸ்ட்வுட்டைவிட சாருஹாசன் சில மாதங்களே வயதில் பெரியவர் என்றாலும், உலகிலேயே இன்றும் நடித்து வரும் அதிக வயதுடைய ஒரே கலைஞன் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Charuhasan-5

1930-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பிறந்த சாருஹாசன், அவரது தம்பியான நடிகர் கமல்ஹாசனைவிடவும் 24 வயது மூத்தவராவார். சிறு வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தினால் பள்ளிக்கூடம் போக முடியாமல் சில வருடங்கள் வீட்டில் இருந்த சாருஹாசனுக்கு வீட்டிலேயே வாத்தியார்களை வைத்து கல்வி கற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டது.

1939-ம் வருடம் தன்னுடைய 9-வது வயதில் நேரடியாக அப்போதைய பாடத் திட்டத்தின்படி பள்ளியில் 5-ம் கிரேடில் நேரடியாக சேர்க்கப்பட்டார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் 1951-ம் ஆண்டு பெல்காமில் இருந்த ராஜா லக்மகெளடா சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞரானார் சாருஹாசன்.

1951-ம் ஆண்டு பரமக்குடி திரும்பி தனது வழக்கறிஞர் அப்பாவான சீனிவாசனிடம் வழக்கறிஞர் தொழிலைக் கற்றுக் கொண்டு மேலும் தனியாகவும் தொழில் செய்யத் துவங்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே சாருஹாசன் தனது வழக்கறிஞர் தொழிலில் மிகப் பெரிய வல்லுநரானார்.

Charuhasan-9

தமிழகத்தையே உலுக்கிய பரமக்குடி இமானுவேல் சேகரன் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்காக நீதிமன்றத்தில் வாதாடியவர் சாருஹாசன்தான். அன்றிலிருந்து 1981-ம் ஆண்டுவரையிலும் வழக்கறிஞர் தொழிலில் மிகவும் பிஸியாகவே இருந்து வந்தார் சாருஹாசன்.

இடையில் தனது தம்பியான கமல்ஹாசன் வளர்ந்து வரும் நடிகராக உருமாறிய நிலையில் அவரது கால்ஷீட்டுகளை பார்க்கும் வேலையையும் செய்து வந்திருக்கிறார். திரைப்பட துறையில் இது மட்டுமே தொடர்பாக இருந்து வந்த நிலையில் இயக்குநர் மகேந்திரன்தான் சாருஹாசனை முதன்முதலில் நடிகராக்கினார்.

1979-ம் ஆண்டு வெளிவந்த ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் சாருஹாசனை நடிக்க வைத்தார் மகேந்திரன். இதையடுத்து ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘நிழல்கள்’, ‘மூன்று முகம்’, ‘ராணி தேனீ’, ‘அக்னி சாட்சி’, ‘விக்ரம்’, ‘ராஜமரியாதை’, ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘வேதம் புதிது’, ‘பாசப் பறவைகள்’, ‘தளபதி’, ‘அன்புச் சங்கிலி’, ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’, ‘வீரா’, ‘தென்றல் வரும் தெரு’, ‘ஜெய் ஹிந்த்’, ‘ராஜாவின் பார்வையிலே’, ‘காதலே நிம்மதி’, ‘வேலை’, ‘தில்’, ‘கற்க கசடற’, ‘தமிழன்’, ‘யுகா’, ‘உத்தமபுத்திரன்’, ’சில்லுன்னு ஒரு சந்திப்பு’, ‘சைத்தான்’, ‘ஓடு ராஜா ஓடு’, ‘தாதா 87’, ‘பொன் மேகலை’ ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளையும் சேர்த்து 120 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சாருஹாசன்.

Charuhasan-7

1986-ம் ஆண்டு இவர் நடிப்பில் கன்னடத்தில் வெளியான ‘தபாரன கதே’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை சாருஹாசன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே படத்திற்காக கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் சாருஹாசனே பெற்றிருக்கிறார்.

1992-ம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான ‘Kubi Matthu Iyala’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக பிலிம்பேர் விருதையும் சாருஹாசன் பெற்றிருக்கிறார்.

இது மட்டுமில்லாமல் ‘சித்தி’, ‘ஆனந்தம்’ ‘மர்ம தேசம்’ ஆகிய பிரபலமான தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

இவருடைய தம்பியான நடிகர் கமல்ஹாசனும் தேசிய விருது பெற்ற நடிகர். இவருடைய மகளான சுஹாசினியும் தேசிய விருது பெற்ற நடிகையாவார். இவரது மருமகனான மணிரத்னமும் தேசிய விருது பெற்ற இயக்குநராவார். இப்படி இந்த ஹாசன் குடும்பத்திலேயே தேசிய விருது பெற்ற நான்கு பேர் இருப்பது இந்தியாவிலேயே ஏன்… உலகத்திலேயே இவர்களின் குடும்பமாகத்தான் இருக்கும்.

charuhasan-kamal-1

சாருஹாசனின் இன்னொரு தம்பியான சந்திரஹாசனும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நடிகர்தான். சந்திரஹாசனின் மகளான அனுஹாசனும் தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகையாக இருக்கிறார். கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் இருவரும் நடிகைகள்தான்.

சாருஹாசனின் மனைவியின் பெயர் கோமளம். இவர்களுக்கு நந்தினி, சுபாஷிணி, சுஹாசினி என்று மூன்று மகள்கள். இவர்கள் மூவரின் மூலமாக பேரன், பேத்திகளும் சாருஹாசனுக்கு இருக்கிறார்கள்.

இப்படி புகழ் பெற்ற ஒரு நடிப்பு குடும்பத்தில் தலைமகனாக இருக்கும் சாருஹாசனுக்கு தற்போது 90 வயதாகிறது.

இவரது திரையுலக சாதனைகளைப் பாராட்டி அவரை கெளரவப்படுத்துகிறது Indo Cine Appreciation Foundation என்னும் சினிமா ரசிகர்கள் அமைப்பு.

இந்த நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை, தமிழக அரசின் ஒத்துழைப்பினால் நடத்தி வருகிறது.

இந்தாண்டு 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 12-ம் தேதி முதல் 19-ம் தேதிவரையிலும் நடைபெறவுள்ளது.

இந்தத் திரைப்பட விழாவின் துவக்க நாளான டிசம்பர் 12-ம் தேதி நடிகர் சாருஹாசனுக்கு அவரது கலையுலகப் பங்களிப்பினை பாராட்டி அவரைக் கெளரவப்படுத்தும்விதமாக அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்படவுள்ளது.

சாதனை விருதினைப் பெறும் சாதனையாளர் சாருஹாசனுக்கு தமிழ் சினி டாக் இணையத்தளம் தனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

Our Score