full screen background image

“இளையராஜா வேண்டாம்’ என்று சொன்ன ரஜினி” – R.K.செல்வமணி சொல்லும் ரகசியம்..!

“இளையராஜா வேண்டாம்’ என்று சொன்ன ரஜினி” – R.K.செல்வமணி சொல்லும் ரகசியம்..!

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் ரஜினியை இயக்கவே இல்லையே என்ற கேள்விக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தபோது அது ஒரு சில காரணங்களினால் முடியாமல் போனதாகச் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இது பற்றி அவர் சொல்லும்போது, “1993-ல் செம்பருத்தி’ முடிந்து வெளியான பின்பு ரஜினியை சந்தித்தேன். “நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாமா..?” என்றார் ரஜினி. “பண்ணலாம் ஸார்…” என்றேன். “நான் ஒரு கதை சொல்றேன். கேளுங்க…” என்று சொல்லி ஹிந்தியில் வெளிவந்த ‘ஹம்’, ‘அக்னிபத்’ ஆகிய படங்களின் கதையை சேர்த்துச் சொன்னார். எனக்கும் பிடித்திருந்தது. “செய்யலாம் ஸார்” என்றேன்.

சில நாட்கள் கழித்து மீண்டும் என்னை அழைத்தார். சென்றேன். “இந்த வருஷம் என்னுடைய சில்வர் ஜூப்ளி வருஷம். இந்தப் படம் ரொம்ப பிரம்மாண்டமா வரணும். இந்தப் படத்தை ஒத்துக்கிட்டீங்கன்னா இந்தப் படத்தை முடிக்காமல் நீங்க வேற படம் செய்யக் கூடாது…” என்றார். “ஓகே ஸார்…” என்றேன்.

அடுத்து “ஏ.ஆர்.ரஹ்மானை புக் பண்ணலாமா…?” என்றார். எனக்கு லேசான அதிர்ச்சியானது. “இல்ல ஸார்.. எனக்குத் தொடர்ந்து இளையராஜாதான் மியூஸிக் போட்டுக்கிட்டிருக்காரு. இப்ப நான் மாத்தினால் நல்லாயிருக்காது. அதோட அவருக்கும் தனி மார்க்கெட் இருக்கே..?” என்றேன்.

உடனே வீட்டில் இருந்த அவரது மகள் ஐஸ்வர்யாவை அழைத்தார். “அம்மா.. ‘ஆர்.கே.செல்வமணி, ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி..’, ‘ஆர்.கே.செல்வமணி, இளையராஜா, ரஜினி…’ இந்த இரண்டுல உனக்கு எது பிடிச்சிருக்கு…?” என்று கேட்டார். அந்தப் பொண்ணு “ரஹ்மான் கூட்டணிதான்”னு சொல்லுச்சு.

உடனே என் பக்கம் திரும்பி, “பார்த்தீங்களா.. இப்போ இருக்குற யூத்துக இதைத்தான் விரும்புறாங்க. அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி செஞ்சிருவோமே..?” என்றார். எனக்குத் தயக்கம். மறுபடியும் நான் இளையராஜாவையே சொன்னேன். அதை அத்தோட விட்டுட்டாரு.

சில மாதங்கள் கழிச்சுக் கூப்பிட்டாரு. இப்போ ‘படையப்பா’ கதையைச் சொன்னாரு. அது எனக்குப் பிடிக்கலை. “ஸார்.. நீங்க சூப்பர் ஸ்டார். நீங்க போயி ஒரு பொண்ணுகிட்ட மோதுற மாதிரி வைச்சா ரசிகர்களுக்குப் பிடிக்காது ஸார்.. எனக்கு முன்னாடி சொன்னீங்கள்லே ஹம்-அக்னிபத் கூட்டணி.. அந்தக் கதையே பண்ணலாம் ஸார்…” என்றேன்.

அதுக்கப்புறம் திரும்பவும் கூப்பிட்டாரு. “நான் இப்போ இமயமலைக்குப் போறேன். போயிட்டு வர்றதுக்குள்ள அந்தக் கதையை ரெடி பண்ணி வைச்சிருங்க…” என்றார். “ஓகே ஸார்.. செஞ்சிரலாம்…” என்றேன். “இந்தப் படத்தை பிரம்மாண்டமா வேண்டாம்.. சின்னதாவே செஞ்சிரலாம்…” என்றார் குழப்பத்துடன்.

“ஸார்.. பிரம்மாண்டமோ.. சின்னதோ.. படத்தைத் துவக்கி என் கைல கொடுத்தீட்டீங்கன்னா அதுக்கப்புறம் அதுல நீங்க தலையிடக் கூடாது”ன்னு சொன்னேன். இது அவரை காயப்படுத்திருக்கும்ன்னு நினைக்கிறேன். ஆனால், அவர் ஒண்ணும் சொல்லலை.. “ஓகே.. ஓகே”ன்னுட்டாரு.

இதுக்கு இடைல திடீர்ன்னு என்னைக் கேட்காமலேயே தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், விஜயகாந்தை வைத்து நான் ‘மாஸ்டர் நேதாஜி’ன்னு ஒரு படம் இயக்கப் போறதா சொல்லி பேப்பர்ல விளம்பரம் கொடுத்திட்டாரு. நானே இதை பேப்பர்ல பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

உடனேயே ரஜினி ஸார்கிட்டேயிருந்து அழைப்பு வந்திருச்சு. அவரும் “என்னங்க..?” என்றார். “ஸார்.. இது எனக்கே தெரியாமல் நடந்திருச்சு…” என்றேன். “இப்போ நம்ம படம் பண்ணத் துவங்கும்போது அவங்க கூப்பிட்டாங்கன்னா நீங்க யார் படத்தை டைரக்ட் செய்வீங்க..?” என்று கேட்டார். “இல்ல ஸார்.. அது ச்சும்மா விளம்பரம் கொடுத்திருக்காங்க…” என்றேன். “இல்ல.. இல்ல.. கூப்பிட்டால் நீங்க என்ன செய்வீங்க..?” என்றார் திரும்பவும். “அங்கதான் ஸார் போவேன். ஏன்னா அவங்கதான் என்னை உருவாக்கினவங்க..” என்றேன்.

இந்த இரண்டு விஷயங்களும்தான் ரஜினி ஸாருக்கு என் மேல தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தியிருக்கும்ன்னு நினைக்கிறேன்.

அப்புறம் ஒரு மாசம் கழிச்சு ஒரு நாள் லதா ரஜினி போன்ல என்னைக்  கூப்பிட்டு “ஸார் உங்ககிட்ட பேசணும்ன்னு சொல்றாரு”ன்னு சொன்னாங்க. ரஜினி போன்ல வந்து “ஸாரி செல்வமணி.. நாம வேற படம் பண்ணுவோம்…” என்றார். “ஓகே ஸார்…”ன்னு சொல்லிட்டேன். அதோட அந்த சேப்டரும் முடிஞ்சு போச்சு..!” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.

Our Score