full screen background image

கோல்டன் குளோப் விருது போட்டிக்குத் தேர்வான ‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ திரைப்படங்கள்..!

கோல்டன் குளோப் விருது போட்டிக்குத் தேர்வான ‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ திரைப்படங்கள்..!

உலக அளவில் திரைப்படத் துறையில் வழங்கப்படும் விருதுகளில் ‘ஆஸ்கார் விருது’க்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விருதாக ‘கோல்டன் குளோப் விருது’கள் கருதப்படுகின்றன.

வருடந்தோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த திரைக் கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதினைப் பெறும் படங்கள் மற்றும் நடிகர்களுக்கு ‘ஆஸ்கார் விருதும்’ அதே ஆண்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பல வருடங்களாக உள்ளது.

இந்த வருடத்திய 78-வது ‘கோல்டன் குளோப் விருது’ வழங்கும் விழா கொரோனா லாக் டவுனால் நடத்தப்படவில்லை. அதனால், இந்த வருடத்திற்கான விருதுகள் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களும் போட்டியில் பங்கேற்க தகுதி உள்ளவை என்று அறிவிக்கப்பட்டு இருந்தன.

இந்தப் போட்டிக்கு வெளிநாட்டு படங்கள் பிரிவில் திரையிட உலக அளவில் பல்வேறு மொழிகளில் இருந்து 127 படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 50 படங்கள் திரையிட தேர்வாகி உள்ளன.

தேர்வான படங்கள் பட்டியலில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று’, வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ மற்றும் மலையாள படமான ‘ஜல்லிக்கட்டு’ ஆகிய படங்களும் இடம் பெற்றுள்ளன. இது தமிழ்த் திரையுலகத்திற்கும், அந்த படக் குழுவினருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. ‘அசுரன்’ படம் தியேட்டர்களில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது நினைவிருக்கலாம். அதோடு, கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் அசுரன் திரைப்படம் ஏற்கனவே தேர்வாகி உள்ளது.

ஜல்லிக்கட்டு’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்காக இந்தியா சார்பில் போட்டியிட அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score