“ரஜினி சொன்ன அட்வைஸ்” – சசிகுமார் சொன்ன ரகசியம்

“ரஜினி சொன்ன அட்வைஸ்” – சசிகுமார் சொன்ன ரகசியம்

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டி.டி.ராஜா தயாரித்துள்ள படம் ராஜ வம்சம்’.

இந்தப் படத்தில் கதாநாயகனாக இயக்குநர் / நடிகர் சசிகுமார் நடிக்க  இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும், பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

ராதாரவி, தம்பி ராமைய்யா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், ராஜ்கபூர், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணிமேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என 49  கலைஞர்கள்  நடித்துள்ளனர் .

சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சி.எஸ்.  இசை அமைத்துள்ளார். கலை இயக்கம் சுரேஷ் மற்றும் படத் தொகுப்பினை சபு  ஜோசப் மேற்கொண்டுள்ளார். அறிமுக இயக்குநரான கதிர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குநர் 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறை .

வரும் நவம்பர் 26-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார் பேசும்போது, “இந்த கூட்டுக் குடும்பம் சம்பந்தப்பட்ட படத்தை கதிர் என்னிடம் கூறினார். மிகவும் பிடித்திருந்தது. நானும் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து இருக்கிறேன். வாழ்ந்து கொண்டும் இருக்கிறேன்.

இப்படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த் அனைவரையும் அழகாக கேமராவில் காட்டியுள்ளார். எடிட்டர் சாபு ஜோசப் இப்படத்தில் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. சாம்.சி.எஸ். பின்னணி இசை மிகப் பெரிய பலம். இப்படத்திற்கு இன்னொரு மிகப் பெரிய பலம் தயாரிப்பாளர் டி டி ராஜா சார்.

ரஜினி சார் ‘பேட்ட’ படத்தில் நடிக்கும்போது எனக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தார். “படத் தயாரிப்பில் மட்டும் ஈடுபட வேண்டாம்” என்றார். எதற்கு சொல்கிறேன் என்றால் அதில் அவ்வளவு சிரமமும் பொறுமையும் திறமை வேண்டும். தயாரிப்பாளர் டி.டி.ராஜா சாருக்கு நன்றி. முதல்முறையாக நடிகர் சதீஷ் உடன் இணைந்து படத்தில் நடிப்பது மகிழ்ச்சி…” என்றார்.

 
Our Score