full screen background image

ரயில் என்ற வடக்கன் – சினிமா விமர்சனம்

ரயில் என்ற வடக்கன் – சினிமா விமர்சனம்

பிரபல புத்தகப் பதிப்பாளரான டிஸ்கவரி புக் பேலஸ், வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில், சினிமா பேலஸ் வழங்கும் திரைப்படம் ‘ரயில்’.

இந்தப் படத்தில் கூத்துப் பட்டறை மாணவரான, தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குங்குமராஜ் கதாநாயகனாகவும், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் கண்டுபிடிப்பான வைரமாலா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் பர்வேஷ் மெஹ்ரூ, ரமேஷ் வைத்யா, செந்தில் கோச்சடை, ஷமீரா, பண்ட்டு, வந்தனா, பேபி தனிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘அழகர்சாமியின் குதிரை’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘தரமணி’, ‘பேரன்பு’, ‘கர்ணன்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ‘மாமன்னன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் முன்னணி ஒளிப்பதிவாளரான தேனி ஈஸ்வர், இந்த ‘ரயில்’ திரைப்படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கர்நாடக இசைத் துறையில் தனி இடத்தைப் பிடித்தவரும், இந்துஸ்தானி, வெஸ்டர்ன், வெஸ்டர்ன் க்ளாஸிக் முதலிய பல்வேறு இசைப் பிரிவுகளை கற்றுத் தேர்ந்தவரும், தனிப் பாடல்கள் மற்றும் இசை ஆல்பங்களை வெளியிட்டு பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றவருமான S.J.ஜனனி இந்த ‘ரயில்‘ திரைப்படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.

ரமேஷ் வைத்யா பாடல்களை எழுதியுள்ளார். கலை இயக்குநராக காத்து மற்றும் படத் தொகுப்பாளராக நாகூரான் பணியாற்றியிருக்கிறார். பத்திரிகை தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொண்டிருக்கிறார். 

‘எம்டன் மகன்’, ‘வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ உள்ளிட்ட படங்களின் வசனகர்த்தாவும், ‘அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தின் கதாசிரியருமான பாஸ்கர் சக்தி இந்த ‘ரயில்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில், பெருநகரம் துவங்கி குக்கிராமங்கள்வரை வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இன்றைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு ஒரு உணர்வுமயமான, கொஞ்சம் நகைச்சுவை கலந்த, பொழுது போக்குத் திரைப்படமாக இந்த ‘ரயில்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

வடக்கத்திய இளைஞன் ஒருவனை மையப்படுத்திய கதை என்பதால் இந்தப் படத்திற்கு முதலில் ‘வடக்கன்’ என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், சென்சார் போர்டில் இருக்கும் சில ஞானசூன்யங்களின் கடும் எதிர்ப்பினால், அந்தப் பெயர் மாற்றப்பட்டு ரயில்’ என்று வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் படத்தில் கிஞ்சித்தும் ஒரு காட்சியில்கூட ரயில் காட்டப்படவேயில்லை என்பது சோகமான விஷயமாகும்.

தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி என்னும் கிராமத்தில் வசிக்கும் எலெக்ட்ரீசியன் ‘முத்தையா’ என்ற குங்குமராஜ். முழு நேரத் தொழிலாக குடியையும், சைடு தொழிலாக எலெக்ட்ரீசியன் தொழிலையும் செய்து வருகிறார்.

இவருடைய மனைவி வைரமாலை. சதா குடியே கதி என்று இருப்பதால் மனைவி, மற்றும் மாமனாரிடம் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் முத்தையா. குழந்தையில்லாததால் அந்தக் கோபமும் மனைவிக்கு இருக்க, தம்பதிகளிடையே இப்போது இணக்கமான சூழலும் இல்லை.

அதே ஊரில் இருக்கும் ஜின்னிங் பேக்டரியில் வேலை செய்கிறார் வட நாட்டு இளைஞரான பர்வேஸ். முத்தையாவின் எதிர்வீட்டில் வசித்து வரும் பர்வேஸ் வைரமாலையுடன் சினேகிதமாகப் பழகி வருகிறார். அதே நேரம் வட இந்தியக்காரர்களால்தான் உள்ளூர்க்காரர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்கிற கோபத்தில் பர்வேஸ் மீது ஒருவித கோபத்தில் இருக்கிறார் முத்தையா.

இந்த நேரத்தில் ஒரு நாள் முத்தையாவிடம் சண்டையிட்டுக் கோபித்துக் கொண்டு தனது அப்பா வீட்டுக்குப் போகிறார் வைரமாலை. அந்த நாளில் பர்வேஸ் ஒரு பையை கொண்டு வந்து வைரமாலையிடம் கொடுத்துப் பத்திரமாக வைத்திருக்கும்படி சொல்லியிருக்கிறான்.

மறுநாள் எதிர்பாராமல் திடீரென்று நடந்த ஒரு சாலை விபத்தில் பர்வேஸ் இறந்துவிடுகிறான். அவனது பெற்றோர் வட இந்தியாவில் இருந்து வருவதற்கு 2 நாட்களாகும் என்பதால் அதுவரையிலும் இங்கேயே இருக்கட்டும் என்று சொல்லி பர்வேஸின் உடலை அந்த வீட்டுக்குள் கொண்டு வந்து வைக்கிறது போலீஸ். பிரேத்த்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி முத்தையாவிடம் சொல்லிவிட்டுப் போகிறார்கள் போலீஸ்காரர்கள்.

அடுத்து என்ன நடக்கிறது..? பர்வேஸின் உறவினர்கள் வந்தார்களா..? இல்லையா..? வைரமாலை திரும்பி வந்தாரா..? இல்லையா..? பர்வேஸ் கொடுத்தப் பையில் என்ன இருந்த்து..? என்பதுதான் இந்த ரயில் படத்தின் சுவையான திரைக்கதை.

ஒரு ரவுடிக்கான, குடிகாரனுக்கான தோற்றத்தில் அச்சு அசலாக அதற்காகவே நெய்யப்பட்ட உடைபோல கச்சிதமாக இருக்கிறார் முத்தையா என்ற குங்குமராஜ்.

வீட்டில் மனைவி மதிப்பதில்லை. மாமனாரும் கண்டு கொள்வதில்லை என்று பலரிடமும் புலம்பித் தள்ளியபடியே குவார்ட்டர், குவார்ட்டராக உள்ளே தள்ளும் சராசரி குடிகாரன் கதாப்பாத்திரத்தை ரசிக்கும்படியும், நம்பும்படியும் செய்திருக்கிறார் குங்குமராஜ்.

உள்ளூரில் ஒருவர்கூட தன்னை நம்பாலும், மதிக்காமலும் இருக்கும்போது எங்கிருந்தோ வந்த வட இந்தியக் குடும்பத்தினர் தன்னை மதித்து, நம்பி, மனுஷனாகப் பாவிப்பதைப் பார்த்து முத்தையா மனம் மாறி திருந்துவது, பழைய காலத்து சினிமாக்களின் கிளிஷே காட்சிகளின் நீட்சிதான் என்றாலும் பாராட்டுக்குரியது. ஏற்புடையதுதான்.

திருந்திவிடலாம் என்று நினைத்தாலும், அந்த எண்ணத்தையே அருகில் வர விடாத அளவுக்கு அனைத்து குடிகாரர்களின் கூடவே சில சகுனிகளும் இருப்பார்கள். அப்படியொரு சகுனியாக நடித்திருக்கிறார் கவிஞரும், எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ரமேஷ் வைத்யா.

முதல் படம் போலவே தெரியாத வண்ணம் நிஜமான குடிகாரனின் தெனாவெட்டுப் பேச்சுக்களையும், எசகுபிசகு டயலாக்குகளையும் பேசி சில இடங்களில் நம்மை சிரிக்கவும் வைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அவர், மென்மேலும் படங்களில் வலம் வர வாழ்த்துகிறோம்.

அழகியில்லை. ஆனால் கேமிராவுக்கு ஏற்ற முகமாக சிக்கியிருக்கிறார் வைரமாலை. உருப்படாத கணவனை வைத்துக் கொண்டு அல்லல்படும் அப்பாவி மனைவியாக தனது அத்தனை நடிப்பையும் கொட்டித் தீர்த்திருக்கிறார். பர்வேஸின் உடலைப் பார்த்து “தம்பி மாதிரி நினைச்சிருந்தனேடா…” என்று கதறியழும்போது நம்மையும் கொஞ்சம் உச்சுக் கொட்ட வைத்திருக்கிறார்.

மகளின் வாழ்க்கையை எண்ணி வருத்தப்படும் பாசமிக்க அப்பாவான செந்தில் கோச்சடை.. காது கேட்காத வீட்டு ஓனரான கிழவி, ஜின்னிங் பேக்டரி ஓனர்.. காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என்று அத்தனை பேருமே அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதால் மண்ணின் மனம் மாறாமல் நடித்திருக்கிறார்கள்.

பர்வேஸின் மனைவி, அப்பா, அம்மா, குழந்தை என்ற வட இந்திய முகங்களும் மொழி தெரியாமல் நடிக்கும் நடிப்பையே அழகாகக் காண்பித்திருக்கிறார்கள்.

பல திரைப்படங்களில் கிராமத்து வாழ்க்கையை கலை நயமாகக் காட்டியே புகழ் பெற்றிருக்கும் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் தனது கேமிராவில் வெளிப்புற அழகைவிடவும் அந்த வீட்டை மட்டும் விதவிதமான கோணங்களில் காண்பித்துக் காட்சிக்குக் காட்சி சலிப்பு ஏற்படுத்தாமல் திரையைக் காண வைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.

அறிமுக இசையமைப்பாளரான ஜனனி தனது இசையில் பாடல்களைக் கேட்க வைத்திருக்கிறார். பின்னணி இசையில் அந்தக் காட்சிக்கான ஜீவனை பல இடங்களில் நம்மை உணர வைத்திருக்கிறார் பாராட்டுக்கள். குறிப்பாக கிழவி மறுநாள் காலை வீட்டுக் கதவைத் திறந்து வெளியில் பர்வேஸின் உடல் இருக்கும் சவப்பெட்டியைப் பார்த்து நொடியில் உண்மை தெரிந்து பதைபதைப்புடன் சவப்பெட்டி அருகே ஓடி வரும் காட்சியில் பின்னணி இசையால் நம்மையும் உடன் ஓட வைத்திருக்கிறார்.

கிராமத்து வாழ்வியலைக் காண்பிக்கும்போது கலை இயக்குநர் அதிகம் மெனக்கெட வேண்டும். இதிலும் அந்த வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார் கலை இயக்குநர். அந்த வீட்டின் பழமை மாறாமல் உள்ளது உள்ளபடியே கிராமத்து வீட்டை காண்பித்தமைக்கு பாராட்டுக்கள்.

ஸ்பாட் ரெக்கார்டிங் என்றாலும் அதிலும் கொஞ்சமும் பிசிறு தட்டாத அளவுக்குப் பதிவாக்கியிருக்கும் பொறியாளருக்கும் நமது பாராட்டுக்கள்.

ஒரு குடிகாரன் கடைசியில் திருந்துகிறான் என்ற நல்ல மெஸேஜை சொல்ல வந்திருக்கும் இயக்குநர் அதில் வட இந்தியன், தென் இந்தியன் என்று பிரித்திருப்பதுதான் சர்ச்சை ஆகியிருக்கிறது. ஏன்..? அதே கிராமத்தில் குடிக்காத, ஒழுக்கமான இளைஞர்கள் இருந்திருக்க மாட்டார்களா..? அவர்கள் மூலமாக இதைச் செய்திருக்கக் கூடாதா..? என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது.

ஆனால் ‘வடக்கன்’ என்ற தலைப்பு வைத்து, வட இந்தியர்களால் நமது தமிழகத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறி போய்க் கொண்டிருக்கிறது.. என்று அனைவரும் கதறிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதே வட இந்திய இளைஞன் ஒருவனால் நமது தமிழ் இளைஞன் வாழ்க்கையைப் பெறுகிறான் என்ற மனிதத்தைப் போற்றும் சினிமாவுக்கேற்ற கதையை, கதாசிரியரான பாஸ்கர் சக்தி நினைத்திருப்பதில் தவறில்லை. இது அவருடைய படைப்பாக்க உரிமை என்ற ரீதியில் மட்டுமே நாம் இதை அணுகுவோம்.

அதே நேரம் அந்தக் குடியைத் திறந்துவிட்டிருக்கும் மாநில அரசைப் பற்றி ஒரு வரி விமர்சனம்கூட படத்தில் இல்லாததும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதேபோல் “உன்னுடைய குடியால்தான் எது சரி.. எது தப்பு என்பதைக்கூட உணர முடியாம இருக்குற.. முதல்ல குடியைவிடு.. அப்புறம் எல்லாரும் உன்னைத் தேடி வருவாங்க.. வேலைக்கும் கூப்பிடுவாங்க..” என்று முத்தையாவுக்கு அறிவுரை சொல்லி, புத்திமதியைப் புகட்டி, அறிவுறுத்த ஒரு கதாப்பாத்திரம்கூட படத்தில் இல்லாததும் ஒரு நெருடல்தான்..!

கதை, திரைக்கதை, வசனம் என்ற டிபார்ட்மெண்ட்டில் அனைத்தையும் கச்சிதமாக நேர்க்கோட்டில் செய்திருக்கும் இயக்குநர், தன்னுடைய இயக்குதல் டிபார்ட்மெண்ட்டில் மட்டும் கொஞ்சம் லேசுபாசாகவே செய்திருக்கிறார்.

இயக்குதலில் இருக்கும் சில மர்ம நகாசு வேலைகளை மட்டும் அவர் செய்திருந்தால், படத்தின் முக்கிய அம்சமான சோக காவியத்தில் நாமும் அமிழ்ந்திருப்போம். ஆனால், இயக்கம் அழுத்தமாக இல்லாததால், பக்கத்து வீட்டில் நடந்த சோகம் போலவே நாமும் இந்தப் படத்தை ஏற்க வேண்டியதாகிவிட்டது.

பரவாயில்லை. இயக்குநர் பாஸ்கர் சக்தியின் முதல் படம் இது என்பதால் குறைகளைச் சொல்லி படத்தினை குறைக்காமல், நிறைகளை வைத்தே படத்தினை பாராட்டுவோம்.

நிச்சயமாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்..!

RATING : 3.5 / 5

Our Score