அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ‘புறம்போக்கு’ திரைப்படத்தின் டீஸர், இந்த வருட சுதந்திர தினத்தின் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் பற்றி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கூறுகையில், “இந்த முதல் டீஸர் கலர்புல்லாக இருக்க வேண்டுமென்றும், ஆர்யா, கார்த்திகா இருவருரையும் முன்னிலைப்படுத்தும்விதமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதையே செய்திருக்கிறோம். இனி வரவிருக்கும் அடுத்தடுத்த டீஸர்கள் இன்னும் பிரமாதமாகவும், படத்தின் கதையை வெளிப்படுத்தும்விதமாகவும் இருக்கும்.
வரவிருக்கும் புதிய டீஸரில் விஜய் சேதுபதியின் தோற்றத்தைப் பார்த்தால் அவருடைய ரசிகர்கள் நிச்சயமாக அதிசயப்படுவார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் பிரமாண்டமான அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளன. இவையே படத்தின் ஹைலைட்டாகவும் இருக்கும்.
படத்தில் நடித்த நட்சத்திரங்களின் ஆர்வமும், பங்கேற்ற தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையும் இந்தப் படத்தை ஒரு முழுமையான மாஸ் திரைப்படமாகக் கொண்டு வரும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, கார்த்திகா இவர்களோடு ஷாம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் வெளிவந்த பின் ஷாம் மற்ற ஹீரோக்களைப் போல் ஒரு தனி இடத்தைப் பிடிப்பார் என்பது உறுதி. இந்தப் படம் தற்போதைக்கு அகில உலக அளவில் பேசப்படும் ஒரு முக்கிய பிரச்சினையை மக்கள் முன் கொண்டு வருகிறது..” என்கிறார் ஜனநாதன்.