தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
நடிகர் சங்கக் கட்டிடம் தொடர்பாக சில நடிகர்களுக்கும், தற்போதைய சங்க நிர்வாகிகளுக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்தது. இந்த நிலைமையில் தற்போதைய தலைமையை எதிர்த்து நடிகர் விஷால் தலைமையில் இளைய நடிகர்கள் டீம் என்று செயல்பட்டு வந்தது.. இவர்களால் இன்றைய பொதுக்குழுவில் ஏதேனும் பிரச்சினைகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அனைத்தும் புஸ்ஸாகி.. நடிகர் விஷாலே அமைதியாகி அடக்கமாகப் பேசிவிட்டுப் போய்விட்டாராம்..
“நான் நடிகர் சங்க தலைவராக வருவதற்கு ஆசைப்படவில்லை. நான் இங்கே யாருக்கும் போட்டியும் இல்லை. நடிகர் சங்கத்துக்கு சிறப்பான முறையில் கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அடுத்த பொதுக்குழு கூட்டத்தை புதிய கட்டிடத்தில்தான் நடத்த வேண்டும்.
மலையாள பட உலகில் நடிகர் சங்க கட்டிடத்துக்காக நடிகர்கள் இலவசமாக ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொடுத்து 15 கோடி ரூபாயை நிதியாகத் திரட்டி கொடுத்தார்கள். அதுபோல் இங்கேயும் நான், ஆர்யா, கார்த்தி போன்றவர்கள் நடிகர் சங்கத்துக்காக இலவசமாக ஒரு படத்தில் நடிக்க தயாராக இருக்கிறோம்.. இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சங்கம்தான் முன் நின்று செய்ய வேண்டும்.. ’’ என்று கேட்டுக் கொண்டாராம் விஷால்.
புதிய கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அத்தடையை நீக்க முடியாத அளவுக்கு சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார்கள் நடிகர் சங்க பிரமுகர்கள்.. ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தும் சரத்குமாராலேயே அதை சரி செய்ய முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..!