‘சைக்கோ’ – சினிமா விமர்சனம் 

‘சைக்கோ’ – சினிமா விமர்சனம் 

டபுள் மீனிங் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன், ராஜ்குமார் ஷாஜி, ஆடுகளம் நரேன், இயக்குநர் ராம், பாரதிமணி, ஜி.ஆர்.ஆதித்யா, சிங்கம்புலி, ரேணுகா குமரன், பரீதம் சக்கரவர்த்தி, பவா செல்லத்துரை  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு – தன்வீர்மிர், படத் தொகுப்பு – ந.அருண்குமார், கலை – க்ராபோர்ட், ஆடை வடிவமைப்பு – தட்ஷா எ பிள்ளை, எழுத்து, இயக்கம் – மிஷ்கின்.

கோவையில் கடந்த மூன்றாண்டுகளாக சில பெண்கள் காணாமல் போகிறார்கள். அவர்களது தலை இல்லாத உடல்கள் மட்டுமே கிடைத்து வருகின்றன. இந்த வழக்கினை இன்ஸ்பெக்டர் ராமும், துணை கமிஷனர் ‘ஆடுகளம்’ நரேனும் விசாரித்து வருகின்றனர். துப்பே கிடைக்கவில்லை.

இந்த நேரத்தில் லோக்கல் எஃப்.எம். ஸ்டேஷனில் ரேடியோ அறிவிப்பாளராக இருக்கும் ‘தாஹினி’ என்னும் அதிதி ராவ் இந்தக் கடத்தல், கொலை சம்பவங்களைப் பற்றி ஒரு பெண் மன நல மருத்துவரிடம் பேட்டியெடுத்து ஒலிபரப்புகிறார்.

இந்த அதிதி ராவை கண் பார்வையில்லாத ‘கெளதமன்’ என்னும் உதயநிதி ஸ்டாலின் ஒருதலையாய் காதலித்து வருகிறார். இவர்களது காதல் கை கூடும் தினத்தன்று அதிதி ராவ், கடத்தப்படுகிறார். ஆனால் வழக்கம்போல கொலை செய்யப்படவில்லை. அதிதிக்குப் பதிலாக வேறொரு பாலியல் தொழில் செய்யும் பெண் கொலை செய்யப்படுகிறார்.

இதையடுத்து போலீஸையும் தாண்டி தானே இந்த வழக்கைத் துப்புத் துலக்கிக் கொலையாளியைப் பிடிக்க முயல்கிறார் உதயநிதி. இதற்காக இந்த வழக்கினை துவக்கத்தில் விசாரித்த காவல்துறை குழுவில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ‘கமலாதாஸ்’ என்னும் நித்யா மேனனை அணுகுகிறார் உதயநிதி.

நித்யா மேனனோ ஒரு விபத்தில் சிக்கி முதுகுத் தண்டில் அடிபட்டு வீல்சேரில் அமர்ந்திருக்கிறார். முதலில் மறுக்கும் நித்யா, கண் தெரியாத நிலையிலும் தனது காதலியை மீட்க நினைக்கும் உதயநிதியைப் பார்த்து பரிதாபப்பட்டு உதயநிதியுடன் இணைந்து வழக்கில் தேடுதல் வேட்டையைத் தொடர்கிறார்.

கொலையாளியும் அடங்காமல் தனது மரண வேட்டையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறான். காவல்துறையும் விடாமல் தேடி வருகிறது. நித்யாவும், உதயநிதியும் போலீஸ் பாணியிலேயே தனியாக விசாரித்து கொலையாளியை நெருங்குகிறார்கள்.. இறுதியில் என்னாகிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் திரைக்கதை.

வழக்கமான மிஷ்கின் படம் என்பது இயக்கத்தில் மட்டுமே தெரிகிறது. மற்றபடி இதுவரையிலான தன்னுடைய அனைத்து படங்களின் வன்முறைக் காட்சிகளையும் சேர்த்து வைத்து இதில் வழங்கியிருக்கிறார். ‘ஏ’ சர்டிபிகேட்டுதான் என்றாலும் இளகிய மனம் கொண்டவர்கள், பெண்கள், முதியவர்கள், எளிய மனிதர்கள் யாரும் இந்தப் படத்தைத் தப்பித் தவறிக்கூட பார்த்துவிடக் கூடாது.

அப்படியொரு இறுக்கமான இயக்கத்தினால் அமைந்த கொடூரக் காட்சிகளை படத்தில் அலட்சியமாக வைத்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். இந்தப் படத்தை இரண்டாவது முறையாக பார்க்க விரும்பும் மனிதர்களை நிச்சயமாக ‘இரும்பு மனம் கொண்ட மனிதர்கள்’ என்றே சொல்லலாம்.

படத்தில் ‘சைக்கோ’வாக நடித்திருக்கும் ராஜ்குமார் கிளீன் சேவ் ஹை டெக் அப்பாடக்கர் தோற்றத்தில் அழகாக இருக்கிறார். பயமுறுத்தலான நடிப்பு ஏதுமில்லை. ஆனால் சில காட்சிகளில் துணிந்து நிர்வாணமாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள். தெரிந்த முகம் என்றால் இந்தக் கொடூரம் நம் மனதில் நிற்காது. புதுமுகம் என்பதால் ஏற்க முடிந்திருக்கிறது.

கண் பார்வையற்றவராக நடித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் வெறும் வசனங்கள் மூலமாகவே தனக்கான காட்சிகளில் பவனி வருகிறார். ஒரே ஒரு இடத்தில் நடிக்க ஸ்கோப் இருந்தும் அது அவரால் முடியாமல் போயிருக்கிறது.

கமலாதாஸாக நடித்திருக்கும் நித்யா மேனனின் கேரக்டர் ஸ்கெட்ச் சுவையானது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர்.. ஒரு விபத்தில் வீல்சேர் நோயாளியாக உருமாறியவுடன் அறையைவிட்டு வெளியில் வராதவர்.. பெற்ற தாயைக்கூட ‘வாடி’, ‘போடி’ என்று கேவலமாகத் திட்டுபவர்.. யாரையும் மதிக்காமல் பேசுபவர் என்று இவரது கேரக்டரை ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் உலாவும் மனுஷியாக மாற்றியிருக்கிறார் மிஷ்கின்.

நித்யா மேனனின் அந்தக் கோப நடிப்பும், அவரது அம்மா ரேணுகாவின் சமாளிப்பு நடிப்பும்தான் இதுவொரு தமிழ்ப் படம் என்கிற உணர்வையே தருகிறது.

அதிதி ராவ் மென்மையான பெண்ணாக அறிமுகமாகி சாவின் விளிம்புவரையிலும் செல்கிறார். இறுதிக் காட்சியில் தன்னைக் கொலை செய்ய முயன்றவனுக்கு பாப விமோசனமும் கொடுக்கிறார். எங்கே சென்றாலும் பின் தொடரும் உதயநிதியால் எரிச்சலாகி கல்யாண ரிசப்ஷனில் காச், மூச்சென்று கத்தும் அதிதி.. அடுத்த சில நிமிடங்களில் காதல் பாடலைக் கேட்டுவிட்டு ஆஃப் ஆவது மிஷ்கின் படங்களில் இதுவரையில் பார்த்திருக்க முடியாத திரைக்கதை.. யூ டூ மிஷ்கின்..?

ஏ.எம்.ராஜாவின் பாடல்களை முணுமுணுத்தபடியே வேலையில் சின்சியராக இருக்கும் சப்-இன்ஸ்பெக்டரான ராம்.. பரிதாபமாக தன் உயிரை இழக்கிறார். துணை கமிஷனர்

‘ஆடுகளம்’ நரேன் மூன்றாண்டுகளாகியும் கண்டுபிடிக்க முடியாத கொலை வெறியில் சில ஷாட்டுகளில் நடந்தே தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

பாட்டையா பாரதி மணி, காது கேளாதவராக.. எதைப் பற்றியும் தெரியாதவராக வேலையாளாக.. கச்சிதமாக நடித்திருக்கிறார். வரும் அனைவரும் இவரைப் பொருட்படுத்தாமல் போவது பற்றியே கவலைப்படாமல் பன்றி விற்பனையைப் பற்றிப் பேசிக் கொண்டேயிருக்கும் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் சுவையான ஒன்று. பாட்டையாவுக்கு பாராட்டுக்கள்.

காவல் துறைக்குள்ளேயே ஒரு கருப்பு ஆடு என்பற்காக கன்னங்கரேல் எழுத்தாளர் பவா செல்லத்துரையை கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் மிஷ்கின். இத்தனைக்கும் இவருக்கு முஸ்லீம் வேடம். உதயநிதிக்கு தகுந்த சமயத்தில் உதவி செய்து திரைக்கதைக்கும் பங்கம் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

உதயநிதியின் உற்ற தோழனாக நடித்திருக்கும் சிங்கம்புலிக்கு இத்திரைப்படம் பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. காதலுக்கு உதவி செய்வதாகச் சொல்லி சமாளிப்புத் திலகமாக மாறும்போதெல்லாம் காட்சிகளில் சுவை தெரிகிறது. தன்னைவிட்டு போகும்படி உதயநிதி சொல்லும்போது ‘எனக்குப் பழக்கமே இல்லியேப்பா’ என்று சொல்லும் காட்சியில் தனது அனுபவ முத்திரையைப் பதித்திருக்கிறார் சிங்கம் புலி.

ஆனால் இவர்தான் வில்லனை முதன்முதலில் அடையாளம் கண்டு துரத்துகிறார். பின்பு பரிதாபமாய் உயிரிழக்கிறார். வந்தோம், நடித்தோம்.. போனோம் என்று மிகக் குறுகிய நேரத்தில் ஒரு பரிதாப உணர்வை சம்பாதித்திருக்கிறார் சிங்கம் புலி.

அதிதியின் அப்பாவாக சில காட்சிகளில் ஷாஜி வருகிறார். தனது மகள் கடத்தப்பட்டார் என்பதை அறிந்து பதறியடித்து ஓடி வரும் அந்த ஒரு காட்சியில் மட்டுமே நடிப்பு..!

படத்தின் முதல் கதாநாயகனே படத்தின் ஒளிப்பதிவாளர் தன்வீர் மீர்தான். மிஷ்கினின் படங்களில் எப்போதும் இருக்கும் அதே அழகியல் இந்தப் படத்திலும் நீண்டிருக்கிறது. யாருமற்ற சாலை.. விளக்குகள் மட்டுமே ஒளிரும் இடம்.. கேமிராவுக்குள் அழகாக அமையும் வசதியுள்ள இடங்கள்.. வித்தியாசமான கேமிரா கோணங்கள்.. என்று அத்தனையிலும் ஒளிப்பதிவாளரின் திறமை தெரிகிறது.

பிரேம் டூ பிரேம் இப்படியொரு கச்சிதமான ஒளிப்பதிவைத் தருவதற்கு என்ன பாடம் படிக்க வேண்டும் என்பதை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் தனியாக வகுப்பெடுத்தால் நல்லது.

இந்தப் பரபர விசாரணைக்கும், பேய் ஓட்டத்திற்கும் துணை நின்றிருக்கிறது இசைஞானியின் பின்னணி இசை.. இரண்டாம் பாதியில் காதை மட்டுமல்ல மனதையும் சேர்த்தே கிழித்திருக்கிறார் இசைஞானி. படத்தின் காட்சிகளால் ஏற்பட்ட திடுக் உணர்வைவிடவும், இசையால் உந்தப்பட்ட பய உணர்வுகளே அதிகம்..! “தியேட்டரே ‘திக்’ என்றானது” என்று உவமையாகக்கூட சொல்லலாம். இசைஞானியின் இசையில் இரண்டு பாடல்களுமே அசத்தல். ரொம்ப நாட்கள் கழித்துக் கேட்க வைத்திருக்கின்றன திரையிசைப் பாடல்கள். நன்று.

கலை இயக்குநர் கிராபோர்டுக்கு ஒரு சபாஷ். வில்லனின் இருப்பிடத்தை சிறைச்சாலை என்பதுபோல தோற்றமளிக்கும்வகையில் அமைத்திருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனின் உட்புறம் ஸ்டேஷன் போலவே தெரியவில்லை.. யார் வீட்டிலும் தேவையற்ற பொருட்கள் இல்லை. புத்தரைத் தவிர..!

படத் தொகுப்பாளர் ந.அருண்குமாரின் கச்சிதமான நறுக்குதலில் படத்தின் வேகம் இரண்டாம் பாதியில் உச்சத்திற்குச் சென்றிருக்கிறது. அதிலும் சிங்கம்புலியின் மரணத்திற்குப் பிறகு ஜெட் வேகம். எப்படியப்பா பிடிக்கப் போகிறார்கள் என்கிற ஆர்வத்தையும், வெறியையும் ஏற்படுத்தியிருக்கிறது படத் தொகுப்பாளரின் கத்திரி.

எல்லாவற்றுக்கும் மேலாக மிஷ்கின் என்னும் பேய் இயக்குநனின் இயக்குதல். இயக்கத்திற்கு எப்போதுமே சிறந்த உதாரணமாகத் திகழும் மிஷ்கின், இந்தப் படத்திலும் சோடை போகவில்லை. ஆனால் அனாயசமாக பல எல்லைக் கோடுகளைத் தாண்டிச் சென்றுவிட்டார்.

என்னதான் கொலை சம்பந்தப்பட்ட கதை என்றாலும் இத்தனை கொடூரத்தையும் காட்ட வேண்டுமா என்ன..? தலையை மட்டும் வெட்டி சேமித்து வைத்துவிட்டு, முண்டங்களைக் காட்சிப் பொருளாக வைப்பதும்.. தலைகளை தொகுத்து தோரணமாகத் தொங்க விட்டிருப்பதும்.. தலை வெட்டப்படும் முறையும் ‘உவ்வே’ முறையில் படமாக்கப்பட்டிருப்பதும் இந்தப் படம் ஹர்ரர் வகையையும் தாண்டி வேறொரு வகைக்குள் கொண்டுபோய்விட்டது.

‘ஏ’ சான்றிதழ் பெற்றிருந்தாலும் இப்படியெல்லாம் மனதை பாதிக்கச் செய்யும் அளவுக்கு படமெடுப்பது அவசியமா இயக்குநரே..? மிஷ்கினின் சிறப்பான இயக்கமே ரசிகர்களுக்கு எதிரியாகிவிட்டது..!

படத்தின் நாயகர்களுக்கு பெயர் வைத்திருப்பதில்கூட புத்தரை துணைக்கு அழைத்தவர்.. ‘புத்தம் சரணம் கச்சாமி’யாகவே படத்தை எடுத்திருக்கலாம்..

படத்தில் ‘சைக்கோ’வாக நடித்திருக்கும் ராஜ்குமாரின் கேரக்டர் பெயர் ‘அங்குலி மாலா’. இவன் புத்தர் காலத்தில் வாழ்ந்த ஒரு கொடூரமான கொலைகாரன். பீகாரின் காட்டுப் பகுதியில் வசித்த வந்த இந்தக் கொலைகாரன் அந்தப் பகுதியில் வரும் மக்களிடம் கொள்ளையடித்து அவர்களுடைய சுண்டு விரலை மட்டும் வெட்டி எடுத்து அதனைக் கோர்த்து மாலையாகப் போட்டுக் கொள்வான்.

பிறப்பால் பிராமணனான அங்குலி மாலாவை இப்படி செய்யச் சொன்னதே அவனது குருதானாம். ஆயிரம் சுண்டு விரல்களை தட்சணையாக அவரது குரு கேட்டாராம். இதற்காகத்தான் இந்தக் கொடூரம்.

இப்படி வாழ்ந்தக் காலக்கட்டத்தில்தான் அந்தப் பக்கமாக வந்த புத்தரையும் கொலை செய்ய முயற்சித்து பின்பு, அவரது அறிவுரையினால் மனம் திருந்தி அவருடைய சீடனாக வாழ்ந்திருக்கிறார் அங்குலி மாலா.

பின்பு ஒரு சமயம் புத்தரின் ஆசிரமத்தைவிட்டு வெளியில் வந்தபோது யாருமே அங்குலி மாலாவுக்கு உணவளிக்க முன் வரவில்லை. துறவியாய் இருந்ததால் பிச்சையெடுத்தே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவரைக் கல்லால் அடித்து விரட்டியிருக்கிறார்கள் மக்கள். கடைசியில் ஒரு நாள் மாடு முட்டி துறவி அங்குலி மாலா மரணமடைந்தாராம். இது புத்தரின் வாழ்க்கைக் கதையில் இருக்கும் ஒரு கிளைக் கதை.

இந்த அங்குலி மாலாவின் பெயரைத்தான் வில்லனுக்கு வைத்திருக்கிறார் மிஷ்கின். இவனுக்கும் சுண்டு விரல் இல்லை. அந்தப் பொருத்தத்தையும் படத்தில் வைத்திருக்கிறார் மிஷ்கின்.

இந்த அங்குலி மாலாவைத் தேடிக் கண்டுபிடித்து அவனைத் தடுத்து நிறுத்த நினைக்கும் கேரக்டரான உதயநிதி ஸ்டாலினுக்கு ‘கெளதமன்’ என்று பெயர். பொருத்தம்தான்.

நித்யா மேனனின் கேரக்டர் பெயராக மலையாளத்தில் பெரும் புகழுடன் வாழ்ந்து மறைந்த பெண் எழுத்தாளர் ‘சுரையா’ என்னும் கமலா தாஸின் பெயரைச் சூட்டியிருக்கிறார்.

எப்போதும் மறைந்த பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான ஏ.எம்.ராஜாவின் பாடல்களை முணுமுணுத்தபடியே இருக்கும் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இயக்குநர் ராமின் கேரக்டர் பெயர் ‘முத்துராமன்’.

சிங்கம் புலிக்கு ‘ராஜநாயகன்’, பவா செல்லத்துரைக்கு ‘அக்பர் பாய்’, அதிதியின் தந்தையாக நடித்திருக்கும் ஷாஜிக்கு ‘பியோடர் ராஜதுரை’ என்று வித்தியாசமாகவே பெயர் வைத்து தனது பெயரை நிலை நாட்டியிருக்கிறார் மிஷ்கின்.

எல்லாம் சரி.. படத்தின் கதைப்படி பார்த்தால் சைக்கோவாக வாழும் வில்லன் அங்குலி மாலா வகுப்பறையில் சுய இன்பம் அனுபவிக்கிறான். இதை அவனுடைய ஆசிரியையான ராச்சல் பார்த்துவிட்டு ஒரு வருடம் முழுவதும் அவனை அடித்திருக்கிறார்.

இது அவனது மனதைப் பாதிக்கிறது. குற்றச் செயல்களில் இறங்க.. சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறான். அது இன்னும் அவனை பாதித்திருக்கிறது. அந்தப் பாதிப்பு அவனை மெல்ல, மெல்ல மனநோயாளியாக்கி கடைசியில் கொலைகாரனாக்கியிருக்கிறது.

இதுவரையிலும் ஓகேதான். ஆனால் இதற்குப் பின்புதான் மிஷ்கின் தடம் புரண்டிருக்கிறார். வில்லனின் மனச் சிதைவு நோயின்படி அவனுக்குள் ஆட்பட்டிருக்கும் பிரச்சினை ஆசிரியைகளின் கண்டிப்பு.. இதற்காக ஆசிரியைகளைத்தானே கொலை செய்திருக்க வேண்டும். ஆனால், தேவையில்லாமல் எதற்கு வேறு, வேறு பெண்களை கொலை செய்ய வேண்டும்..?

தன்னை ஒரு வருடமாக அடித்த ஆசிரியையை கொலை செய்யாமல், 4 வருடங்களாக சிறையில் வைத்து அழகு பார்ப்பது எதற்காக…? இதே ஆசிரியை அதிதியைப் பார்த்தவுடன் “பீடி இருக்கா…?” என்று கேட்கிறார். மாணவனுக்கு ஒழுக்கத்தைப் போதிக்கும் ஒரு ஆசிரியை.. ஒழுக்கமே முக்கியம் என்று நினைக்கும் ஆசிரியை தான் மட்டும் புகை பிடிப்பவராக இருந்திருக்கிறார். ஆக. இங்கே ஒழுக்கம் என்பது அவரவர் பார்வையில் அவரவர்க்கு வேறு, வேறாகத்தான் இருக்கிறது. இதையல்லவா வில்லன் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்..?

அதிதியைக் கொலை செய்யும் முயற்சியைக் கைவிட்ட வில்லன் பட்டென்று ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அழைத்து வந்து கொலை செய்கிறான். அவனுக்கு யாரையோ கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம். ஆனால் அது ஏன் என்பதை மட்டும் மிஷ்கின் சரியாகக் கொடுக்காமல் விட்டிருக்கிறார்.

மிஷ்கின் இந்தப் படத்தில் அநியாயத்திற்கு லாஜிக் எல்லை மீறல்களை வகை, தொகையில்லாமல் செய்திருக்கிறார். சென்னையைக் கதைக் களமாக வைத்திருந்தால் படம் வேலைக்கு ஆகாது என்று கோவைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஏன் கோவையில் மட்டும் சிசிடிவிக்களே இருக்காதா என்ன..?

அந்த பெட்ரோல் பங்க் வாசலில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அழைத்துச் செல்வதிலேயே போலீஸ் பின் தொடர்ந்திருந்தால் கண்டு பிடித்திருக்கலாமே.. உதயநிதி வீட்டு வாசலில்கூடவா சிசிடிவி கேமிராக்கள் இல்லை. கோவையின் உட்புறத் தெருக்களில் கூடவா கேமிராக்கள் இல்லை..?

3 ஆண்டுகளாக போலீஸ் விசாரித்தும் துப்புத் துலங்க முடியவில்லை என்பது ஆச்சரியமான விஷயம். ஒரேயொரு கொலை என்றால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் 13 படுகொலைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் எப்படிங்கோ இயக்குநரே..?

ஒவ்வொரு கொலையின்போதும் பெண்கள் கடத்தப்பட்டபோது அருகில் குப்பைத் தொட்டி இருக்கிறது என்னும் சின்ன விஷயத்தைக்கூட உதயநிதியும், நித்யா மேனன் மட்டுமே கண்டறிகிறார்கள் என்றால் இந்தப் படத்தில் போலீஸை வேண்டுமென்றே டம்மியாக்கி திரைக்கதை எழுதியிருக்கிறார் மிஷ்கின் என்றே தைரியமாகக் குற்றம் சாட்டலாம்.

 பொதுவாக கண் பார்வையற்றவர்களுக்கு காது கேட்கும் திறனும், மோப்பம் பிடிக்கும் சக்தியும் அபாரமாக இருக்கும். இது மருத்துவ ரீதியான உண்மை. இதனை வைத்தே துப்பறிகிறார் உதயநிதி என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

ஆனால், துணைக்கு நித்யா மேனனை அழைத்து வந்து.. அவரையும் வீல் சேரில் பரிதாபமாய் அமர வைத்து.. உதயநிதியை கடைசியில் கார் ஓட்ட வைத்து.. அந்தப் பரபரப்பையும் நம் தலையில் ஏற்றி.. ஒரு வலுக்கட்டாயமான திரைக்கதையை நம் மனதில் பாரமாக ஏற்றியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். அவருடைய முந்தைய படங்களில் இருந்த அத்தனை நேர்த்தியையும் இந்த ஒரே படத்தில் தொலைத்துவிட்டார் மிஷ்கின்.

“இந்தப் படத்தின் திரைக்கதைக் காட்சிகளை யாராவது ஒருவர் முன்கூட்டியே யூகித்துவிட்டால் நான் இனிமேல் சினிமா எடுப்பதையே நிறுத்திவிடுகிறேன்…” என்று மிஷ்கின் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

அவர் சொன்னது நிஜம்தான். இயல்பான மனநிலையில் எழுதப்பட்ட திரைக்கதையாக இருந்திருந்தால் மனிதர்களால் நிச்சயமாக யூகித்திருக்க முடியும். இது சைக்கோ மன நிலையில், ஒரு சைக்கோ கொலையாளிக்காக.. சைக்கோத்தனமான திரைக்கதையில் எழுதப்பட்டது என்பதால் யாராலும் யூகிக்க முடியவில்லை.  

ஒத்துக் கொள்கிறோம் மிஷ்கின். நாங்கள் தோற்றுவிட்டோம். நீங்கள் இந்த முறை ஒரு சைக்கோவாக எங்களை ஜெயித்துவிட்டீர்கள்..!

புத்தம் சரணம் கச்சாமி..!

தர்மம் சரணம் கச்சாமி..!!

சங்கம் சரணம் கச்சாமி..!!!

Our Score