full screen background image

“அரசு மானியம், அரசு திரைப்பட விருதுகள் ஏன் வழங்கப்படவில்லை..?” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி..!

“அரசு மானியம், அரசு திரைப்பட விருதுகள் ஏன் வழங்கப்படவில்லை..?” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி..!

நேற்று காலை கமலா திரையரங்கில் நடைபெற்ற ‘நேர்முகம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை ‘திருப்பதி லட்டு’ படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுக்கப் போகும் தயாரிப்பளார் சுரேஷ் காமாட்சி காரசாரமாக்கிவிட்டார்.

தமிழக அரசு வழங்கும் திரைப்பட விருதுகள் கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. சிறு முதலீட்டுப் படங்களுக்காக தமிழக அரசு வழங்க வேண்டிய மானியத் தொகையும் 9 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனை தமிழக அரசிடம் சொல்லி வாங்கிக் கொடுக்க வேண்டிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அதனைச் செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று போட்டு வாங்கிவிட்டார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்த ‘நேர்முகம்’ படத்தின் டிரைலரை பார்க்கும்போதே படம் பார்க்கும் ஆர்வம் வருகிறது. புதுமுகம் ரஃபி நன்றாக நடிக்கிறவர் என்று தெரிகிறது. இயக்குநர் முரளி கிருஷ்ணாவும் நல்ல அனுபவம் வாய்ந்தவர். அவர் தயாரிப்பாளரை காப்பாற்றிவிடுவார் என நம்பலாம். இப் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

இங்கு நிறைய மீடியா சகோதரர்கள் இருப்பதால் முக்கியமான ஒரு செய்தியை சொல்லியே ஆக வேண்டும்.

விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சேதுபதி’ படம் ரீலிசான அன்றைக்கே அந்தப் படம் இணைய டோரண்டில் வெளியாகிவிட்டது. பல கோடிகள் போட்டு தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படம் எடுத்தால் அது அன்றைக்கே  ஆன்லைன்ல வருவதைப் பத்தி தயாரிப்பாளர்கள் மட்டுமே இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் செய்தியாகப் போட்டு வருத்தப்பட்டிருந்தேன். ஆனால்​தயாரிப்பாளர்களே இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ​

ஏனென்றால் யாரோ வீட்டிலதானே தீ எரியுது.. நமக்கென்ன என்றிருக்கிறார்கள்.. ​இந்த்த் திருட்டுத்தனத்தை செய்வது யார் என்று கண்டு பிடிப்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. ஆனால் இதைக்கூட இங்கே யாரும் ​ பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்களே.. இதை நினைத்துத்தான் வருத்தப்பட வேண்டியிருக்கிறது.

இன்னொரு பக்கம், சிறு முதலீட்டுப் படங்களுக்கான அரசு மானியம் கிடைக்காமல் 400 தயாரிப்பாளர்கள் இப்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசு மானியம் கொடுத்து 8 வருஷடங்களாகிவிட்டது. ரெண்டு ஆட்சிகள் மாறிவிட்டன. தயாரிப்பாளர் சங்கத்தில் மூன்று முறை நிர்வாகிகள் மாறிவிட்டார்கள். ஆனாலும் இந்த மானியம் விஷயத்துல இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் தமிழக முதல்வரிடம் நேரடியாக இது பற்றி இதுவரையிலும் கேட்கவில்லை.

சென்ற ஆண்டு நடைபெற்ற இந்திய சினிமாவின் 100-வது ஆண்டு விழாவின்போது அந்த விழாவுக்காக தமிழக அரசின் சார்பில் 10 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்தார் தமிழக முதல்வர். ஏனென்றால் அவர் இந்தத் தமிழ்ச் சினிமாவின் நிரந்தரக் கலைஞர்.  சினிமா துறை மீது அவருக்கு தனிப்பட்ட முறையில் அன்பும், பண்பும், பாசமும் உண்டு.   

அப்படிப்பட்ட முதல்வர் ​இதை தெரிந்தே நிறுத்தி வைக்க மாட்டார். அவருடைய பார்வைக்கு இந்த விஷயத்தை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கொண்டு சென்றார்களா இல்லையா.. இதற்காக ஏதாவது முயற்சி எடுத்தார்களா என்றே தெரியவில்லை.

இதே போல் கடந்த 8 வருடங்களாக தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கும் விழாவும் நடக்கவில்லை. சினிமா துறையில் இருந்து இதையும் யாரும் கேள்வி கேட்கவில்லை.  

தேர்தல் நேரத்தில் நாடகம் போடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் பிறப்பித்திருக்கும் உத்தரவால் நாடகக் கலைஞர்கள் பாதிக்கப்படுவார்களே என்று நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் கமிஷனரை ஓடிப் போய் பார்த்து பேசுகிறார்கள். மனு கொடுக்கிறார்கள். ஆனால், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், தங்களது சங்க ​உறுப்பினர்களுக்காக அப்படி செயல்பட்டதுபோல் தெரியவில்லை.

ஒரு படத்திற்கு மானியம் கேட்டு விண்ணப்பிக்கும்போது அதற்கு கட்டணமாக ஒவ்வொரு படத்திற்கும் 1000 ரூபாய் தயாரிப்பாளர் சங்கம் ​மூலமாக தமிழக அரசுக்கு  கடந்த எட்டு வருடங்களாக கிடைத்திருக்கிறது. அதனால் தயாரிப்பாளர்கள் மானியம் கேட்டு விண்ணப்பித்துள்ளது அந்தத் துறை சம்பந்தமான அரசு அதிகாரிகளுக்கும் மிக நன்றாகவே தெரியும்.

இதற்கான நடைமுறைப்படி அரசு அதிகாரிகளும், நடுவர்களும் அனைத்து படங்களையும் பார்த்து முடித்துவிட்டார்கள் என்றே சொல்கிறார்கள். ஆனால், ஏன் இன்னமும் மானியம் தராமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதற்கு விளக்கம் கிடைக்கவில்லை.

எனக்குத் தெரிந்து நாம் அரசிடம் சரியான முறையில் அணுகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இனியாவது ​ நடிகர் சங்கம் முதல்வரை அணுகுவதைப் போல், தயாரிப்பாளர் சங்கமும் அணுக வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்..” என்று நீட்டமாகப் பேசி முடித்தார்.

Our Score