கல்யாணப் பாடல் எழுதிய மூன்றே நாளில் சீமந்தப் பாடலையும் எழுதிய கவிஞர்..!

கல்யாணப் பாடல் எழுதிய மூன்றே நாளில் சீமந்தப் பாடலையும் எழுதிய கவிஞர்..!

முதலில் கல்யாணம், உடனடியாகவே சீமந்தம் என்றால் யாருக்குத்தான் சந்தோசமாக இருக்காது. .?இதை எழுதிய கவிஞரும், பாடலாசிரியர் முருகன் மந்திரம், தன்னுடைய சந்தோசத்தையும் தாண்டி ‘இதுவொரு கொண்டாட்டம்’ என்றே சொல்கிறார்.

‘சாரல்’, மற்றும் ‘சும்மாவே ஆடுவோம்’ ஆகிய படங்கள்தான் இந்த கல்யாணம், சீமந்தப் பாடல்கள் இடம் பெற்றவை.

murugan mandhiram

இந்தப் பாடல்களை எழுதியவிதம் பற்றி பேசிய பாடலாசிரியர் முருகன் மந்திரம்,  “சாரல்’ படத்தில் அசத்தலான ஒரு கல்யாணப் பாடல் எழுதும் வாய்ப்பும் அதைத் தொடர்ந்து ‘சும்மாவே ஆடுவோம்’ படத்தில் அழகான ஒரு சீமந்தப் பாடல் எழுதும் வாய்ப்பும் அடுத்தடுத்து யதார்த்தமாகக் கிடைத்தது,

மலையாளம் மற்றும் கன்னடத்தில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள இஷான் தேவ் தமிழில் இசையமைத்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று ‘சாரல்’. இந்தப் படத்தில் அசார், பிரியங்கா நடித்துள்ளனர். டி.ஆர்.எல். இயக்கியிருக்கிறார்.

mm-ishaandev

இந்தப் படத்தில்தான் கல்யாணப் பாடலை எழுதினேன். ‘ரோஜா பூப்போல பொண்ணுக்கேத்த மாப்பிள்ளை’ எனத் தொடங்கும் அந்தக் கல்யாணப் பாடலை நிகில் மேத்யூ, சோனியா, ராஜேஷ்ராஜ் ஆகியோர் பாடினர்.

இந்தக் கல்யாணப் பாடல் பதிவான ஒரு வாரத்திற்குள்ளாகவே நண்பர் ‘காதல்’ சுகுமார் என்னை அழைத்தார். அவர் தனது இரண்டாவது படமாக தற்போது இயக்கி வரும் ‘சும்மாவே ஆடுவோம்’ படத்திற்கான பாடல்கள் எழுதும் வாய்ப்பை தந்தார்.

பத்து வருடங்களுக்கும் மேலாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் ஜமீன் தம்பதியினர். நிறைய வேண்டுதல்களுக்கு பின் இப்போது ஜமீன் மனைவி கருத்தரிக்கிறார். அந்த சீமந்த விழாவை ஊர் மக்கள் கூடி கொண்டாடி மகிழ்கிறார்கள். இதுதான் பாடலுக்கான சூழல் என்று விளக்கினார் இயக்குநர்.

இப்போதுதான் ஒரு கல்யாணப் பாடல் எழுதினோம். உடனே ஒரு சீமந்தப் பாடலா என்கிற சந்தோஷ உற்சாகத்துடன் இந்தப் பாடலை எழுதினேன்.

mm-sugumar-srikanthdeva

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, அவருக்கே உரித்தான பாணியில் கலகலப்பாக ஒரு மெட்டு போட்டிருந்தார். திருவிழா காட்சிக்கு போட்டிருந்தது போல இருந்தது அந்த மெட்டு.  ‘மகராசிக்கு சீமந்தம்’ என்று தொடங்கும் அந்தப் பாடலை மாணிக்க விநாயகமும் மகிழினி மணிமாறனும் பாடி இருக்கிறார்கள்.

‘அம்மன் சாமி சிலையழகு        

எங்க அம்மாபோல யாரழகு

பிள்ளை சுமக்கும் தாயழகு

என்றும் அதுதான் பெண்மைக்கு பேரழகு’

என்று பாடலின் ஒரு சரணத்தில் அழகான வரிகள் அமைந்துவிட்டதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு.

இந்தப் பாடலை கேட்ட அனைவரும், ‘கண்டிப்பாக இந்தப் பாட்டு இனிமேல் எல்லா சீமந்த நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கும். ஏனெனில், தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சீமந்தப் பாடல்கள் இல்லை. எனவே இந்தப் பாடல் பெரிய வரவேற்பைப் பெறும்’ என பாராட்டினார்கள். பாடல் உருவாக காரணமாக இருந்த இயக்குநர் காதல் சுகுமார், மற்றும் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அனைவருக்கும் நன்றி சொல்வதோடு, அந்த பாராட்டுக்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..” என்கிறார் பாடலாசிரியர் முருகன் மந்திரம்.

பாடலாசிரியர் முருகன் மந்திரம் தற்போது ‘சாரல்’, ‘சும்மாவே ஆடுவோம்’, ‘திருப்பதி லட்டு’, ‘பட்டினப்பாக்கம்’, ‘காவு’, ‘ஒன்றா இரண்டா’, ‘வெள்ளை நிலா’ போன்ற பல படங்களில் பாடல்களை எழுதிக்கொண்டிருக்கிறார்.

Our Score