நாளை தமிழகமெங்கும் வெளியாகவுள்ள ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் ஒரு தமிழ் நாடகத்தின் காப்பி என்று சமீப காலமாக சொல்லப்பட்டு வருகிறது. எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான கோபுபாபு எழுதி, ஒய்.ஜி.மகேந்திரன் நடித்து பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அரங்கேறிய ‘மாதவன் கேசவன்’ நாடகத்தின் காப்பிதான் இந்தப் படம் என்று பேசப்பட்டு வருகிறது.
இது குறித்து நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமாரிடம் கேட்டபோது, “இது பற்றிய பிரச்சினை என் கவனத்திற்கும் வந்தது. எழுத்தாளர் கோபுபாபுவும் என்னுடன் பேசினார்.
நான் உடனேயே இயக்குநரிடம் இது பற்றி கேட்டேன். அவரோ ‘நம்ம படம் எந்த நாடகத்தின் காப்பியும் இல்ல ஸார். நானே எழுதினதுதான்.. ஆனால் 1939-ல் வெளி வந்த Ask A Police Man என்கிற ஆங்கிலப் படத்தின் தாக்கம் நம்ம படத்துல இருக்கும். இது ஷீரடி பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல நடந்த கதையின் பாதிப்புல எழுதியிருக்கேன்..’ என்றார். நான் அவரை முழுமையாக நம்புகிறேன்.
படத்தை பார்க்காமலேயே கதை என்னன்னு தெரியாமலேயே இப்படி குற்றச்சாட்டு சொன்னால் எப்படி..? ஒருவேளை படத்தின் கதை அப்படியே கோபுபாபுவின் நாடகம் போல இருந்தாலும் கோபு பாபுவே அந்த ஆங்கிலப் படத்தை பார்த்து ஏன் எழுதியிருக்கக் கூடாது என்று எண்ணம் நமக்கு வருமல்லவா..? இப்போ நான் ராயல்டியை கோபுபாபுவுக்கு கொடுப்பதா? அல்லது அந்த ஆங்கிலப் படத்தின் கதாசிரியருக்குக் கொடுப்பதா..? இப்படியெல்லாம் பிரச்சனைகள் இருக்கு. நீங்க படத்தைப் பாருங்க. அவங்களும் பார்த்திட்டு சொல்லட்டும்..” என்றார்.
ஓகே படத்தைப் பார்த்திட்டு பஞ்சாயத்து கூடும்ன்னு நினைக்கிறோம்..!