full screen background image

இனிமேல் இணையத்தளங்களுக்குத்தான் முன்னுரிமை – தயாரிப்பாளர் J.S.K.சதீஷ்குமார் பேட்டி..!

இனிமேல் இணையத்தளங்களுக்குத்தான் முன்னுரிமை – தயாரிப்பாளர் J.S.K.சதீஷ்குமார் பேட்டி..!

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமாரின் ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய படமான ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரவிருக்கிறது.

இதனால் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை தனது படக் குழுவினருடன் சந்தித்து படம் பற்றி பேசினார் தயாரிப்பாளர் சதீஷ்குமார்.

அவர் பேசும்போது, “தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தொலைக்காட்சி விளம்பரம் மற்றும் வீடியோ கிளிப்பிங்க்ஸ் கொடுப்பது சம்பந்தமான விவாதங்கள் நடைபெற்றது.

ஒரு படத்தை  தயாரித்து முடித்துவிட்டாலும், பட ரிலீஸின்போது விளம்பரத்துக்கு என்று தனியாக ஒன்றரைக் கோடி ரூபாய்  பணம் தேவைப்படுகிது. இப்போது  இது ஒரு தவிர்க்க முடியாத செலவாகவும் இருக்கிறது. இந்த விளம்பரச்  செலவுக்கு  ஒரு கட்டுப்பாடு வந்தால் மட்டுமே சிறு படங்கள் தப்பிக்க முடியும்.

இன்னொரு பக்கம்  டிவி சேனல்கள் திரைப்படங்களை வாங்குவது இல்லை என்பதாலும் தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். சின்ன பட்ஜெட் படங்களுக்கு சரியா விளம்பரம் வர மாட்டேங்குது. பெரிய படங்களுக்கு மட்டுமேதான் விளம்பரம் வருது. அதுனாலதான் அதை மட்டும் வாங்குறோம் என்கிறார்கள் சேனலில்.

அது போன்ற சின்ன பட்ஜெட் படங்களை,  சேனல்களில் ஸ்லாட் டைமில் திரையிடுவது பற்றியும் அவர்களிடத்தில் கேட்டோம். வரும் லாபத்தில் ஆளுக்குப் பாதியாக எடுத்துக் கொள்ளலாம் என்றுகூட கேட்டோம். தொலைக்காட்சி நிர்வாகத்தினர் இதையும் ஏற்கவில்லை .

எனவே வேறு வழியில்லாமல் இனிமேல்  தனியார் தொலைக்காட்சிகளை தவிர்த்து விட்டு அரசுத் தொலைக்காட்சியான பொதிகைக்கு மட்டுமே புதுப் பட காட்சிகளை கொடுப்போம். அவர்களுக்கு மட்டும் விளம்பரமும் கொடுப்போம் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள்.

கூடுதலாக படத்தின் உரிமையை எந்த தொலைக்காட்சி வாங்குகிறதோ அந்த டிவிக்கு மட்டுமே பாடல்கள் மற்றும் காட்சிகளை கொடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை அனைத்து தயாரிப்பாளர்களும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளார்கள்,

இந்தத் தீர்மானத்தை வருகிற ஜூலை 31-ம் தேதியிலிருந்து அமலுக்கு கொண்டு வரப் போவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த தீர்மானத்தை நான் என்னுடைய படமான இந்த ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்திலிருந்தே செயல்படுத்தப் போகிறேன்.

டிவிக்களுக்கு அடுத்து சினிமாக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் முதலிடத்தில் இருப்பது இணையத்தள பத்திரிகைகள்தான். இணையத்தளங்களை நம்பித்தான் இன்று உலகமே இருக்கிறது.  

“நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்” படத்தினை ஜூலை 31-ம் தேதி வெளியிடுவதாகத்தான் திட்டம் வைத்திருந்தோம். அதற்கான போஸ்டர்கள் அனைத்தும் அச்சடித்து வெளியிட்டிருந்தோம்.. ஆனால் ஜூலை 24-ம் தேதி பெரிய படம் எதுவும் வராததால் திடீரென தேதியை மாற்றினோம், இது உடனே அனைத்து இணையத்தளங்களிலும் செய்தியாகிவிட்டது.

உடனேயே திருநெல்வேலியிருந்து ஒருவர் எனக்கு போன் செய்து, ‘என்ன ஸார் படத்தோட தேதியை மாத்திட்டீங்களா..?’ என்று கேட்டார். அந்தளவுக்கு இணையம் செய்திகளை வேகமாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறது, எனவே, இனிமேல் நான் தயாரிக்கும் திரைப்படங்களின் விளம்பர முக்கியத்துவத்தை தொலைக்காட்சிகளைவிட இணையத் தளத்திற்குத்தான் அதிகமாக தரப் போகிறேன்.

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ‘பிரேமம்’ என்ற திரைப்படம் முழுக்க முழுக்க இணைய விளம்பரங்களால் மட்டுமே மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர், அவர்கள் கையாண்ட இந்த புதுயுக்தி அந்த படத்தை பெரியளவில் வெற்றியடைய செய்துள்ளது.. இதனையே நானும் ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளேன்..” என்றார்.

Our Score