நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு அறிமுகம் தேவையில்லை. டெல்லி திஹார் ஜெயில்வரைக்கும் சென்று தனது புகழைப் பரப்பிவிட்டு வந்திருப்பவர். தான் செய்த திருட்டுக்களையும், கொள்ளைகளையும்கூட நல்லவைகள் என்கிற ரீதியில் நகைச்சுவையாகச் சொல்லி இன்றைக்கும் ஒரு கவுரவமான அந்தஸ்தோடு சினிமாவுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரது மேடை பேச்சுக்கள் பெரும்பாலும் தற்பெருமை பேசுவதாகவே அமையும். சில நேரங்களில் வரம்பு மீறியும் இருக்கும். ‘தொப்பி’ படத்தின் ஆடியோ விழாவில் இவர் பேசிய பேச்சு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் டி.சிவாவையே டென்ஷனாக்கி அந்த விழா மேடையை, பட்டிமன்ற மேடையாக்கியது அனைவரும் அறிந்ததே.
இன்றைக்கு இன்னொரு மேடை. ‘மாங்கா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா. இதில் பேசிய சீனிவாசன், “இந்த விழாவுக்கு என்னை அழைத்த்தற்கு மிக்க நன்றி. நான் எது பேசினாலும் ஏதாவது பிரச்சனையாயிருது. நமது பத்திரிகையுலக நண்பர்கள் நான் பேசுற பேச்சுல எதையாவது தலைப்பு வைச்சு, அதை பிரபலப்படுத்தி நம்மள சிக்கல்ல மாட்டி விட்டுர்றாங்க..
நான் சினிமால நடிக்க வந்த புதுசுல எனக்கு ஜோடியா நடிக்க பல நடிகைகள்கிட்ட முயற்சி செஞ்சேன். நிறைய பேர் முடியாதுன்னுட்டாங்க. அப்போ பேமஸா இருந்த ஒரு நடிகைகிட்ட ரொம்ப டிரை பண்ணி போய் கேட்டப்போ, ‘இவர்கூடவெல்லாம் நான் நடிக்கிறதா.. முடியாது’ன்னு சொல்லிட்டாங்க.
அப்புறமா ரேகாவை கேட்கலாம்னு சொன்னாங்க. ‘புன்னகை மன்னன்’ல கமல்கூட ஜோடியா நடிச்சவங்களாச்சே.. நம்மகூட நடிச்சா நமக்கும் ஒரு கெத்தா இருக்கும். பெருமையா இருக்குமேன்னு நினைச்சு போய்க் கேட்டோம். ‘சரி’ன்னு சொல்லிட்டாங்க. எங்களுக்கு ஒரு டூயட்டெல்லாம் இருந்துச்சு.. ‘புன்னகை மன்னன்’ படத்துல வர்ற அந்த பாட்டு மாதிரியே ஒரு டூயட் பாட்டு வைச்சு அதை சூட் பண்ணினோம்.. எப்படியோ நாம அவங்ககூட நடிக்கிறோம். அவங்க கமலுக்குக் கொடுத்த மாதிரியே நமக்கும் ஒரு முத்தம் கொடுப்பாங்கன்னு நானும் ரொம்ப ஆசையா எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். ஆனா கடைசிவரைக்கும் அவங்க முத்தம் கொடுக்கவே இல்லை.. அந்தப் படமும் ரிலீஸாகலை..” என்றார்.
கூட்டம் சிரித்ததோ இல்லையோ.. பவர்ஸ்டாரின் பின்னால் முதல் வரிசையில் அமர்ந்திருந்த ரேகா ரொம்பவே சங்கடப்பட்டுப் போனார். இதனாலேயே என்னவோ தான் பேசி முடித்தவுடன் விருட்டென்று எழுந்து அரங்கத்தைவிட்டு வெளியேறிவிட்டார் ரேகா.
எதை மேடையில் பேசலாம்.. எதை பேசக் கூடாது என்பதைக்கூட தெரிந்து கொள்ளாத நிலையில் இருக்கிறார் இந்த பவர் ஸ்டார்..?