full screen background image

டெல்லி திகார் சிறையில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்குக் கிடைத்த அனுபவங்கள்..!

டெல்லி திகார் சிறையில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்குக் கிடைத்த அனுபவங்கள்..!

நேற்றைய ‘திகார்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை எதற்கு அழைத்தார்கள் என்பது முதலில் புரியமல் இருந்த்து. பின்பு இயக்குநர் பேரரசு ‘பவர் ஸ்டாரை’ பேசுவதற்காக அழைத்தபோதுதான் உண்மை தெரிந்தது.

ஏற்கெனவே ஒரு முறை பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய வழக்கு ஒன்றில் டெல்லி போலீஸ் பவர் ஸ்டார் சீனிவாசனை சென்னைக்கு வந்து கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்று திகார் சிறையில் அடைத்திருந்தது. இப்போது அந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார் சீனிவாசன்.

இதையொட்டித்தான் ‘திகார்’ என்ற பெயரோடு அவருக்கு இருக்கும் தொடர்பின் காரணமாய் அவரை அழைத்தாகக் கிண்டலாகச் சொன்னார் பேரரசு.  “மற்றவர்களெஎல்லாம் படத்தைப் பற்றிப் பேசுவார்கள், ஆனால் பவர் ஸ்டார்  ‘திகார்’ ஜெயிலில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிப் பேசுவார்..” என்று சொல்ல ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கூடியது.

அதே நேரம் இந்த ஆரவாரத்தைக் கவனித்த கிரண்பேடி என்ன விஷயமென்று தன் அருகில் இருந்த தயாரிப்பாளர் சிகரம் சந்திரசேகரிடம் கேட்க.. அவரும் பவர் ஸ்டாரின் அருமை, பெருமைகளை எடுத்துச் சொல்ல சிரித்துக் கொண்டார் கிரண் பேடி.

மேடையில் தனக்கு ஏற்பட்ட சங்கடத்தையும் சகித்துக் கொண்டு மைக்கைப் பிடித்தார் பவர் ஸ்டார்.

எடுத்த எடுப்பிலேயே “ஃபங்ஷனுக்கு வாங்கன்னு கூப்பிட்டு இப்படிலாம் பண்ணக் கூடாது…” என்று தன்மையாக, சிரித்தபடியே சொல்ல, அரங்கமே அதிர்ந்தது.. மேலும் தொடர்ந்தார் ‘பவர் ஸ்டார்’.

“இந்த நிகழ்ச்சிக்கு நான் வரணுமா, வேணாமான்னு முதல்ல யோசிச்சேன்.. போனா, எதையாவது பேசி கிண்டல் பண்ணுவாங்கன்னு தெரியும்.. இருந்தாலும் பரவாயில்லை போவோம். எல்லாத்தையும் பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுவோமேன்னுதான் வந்தேன்.

ரமேஷ்கண்ணா சார், வெங்கடேஷ் சார்லாம் சொன்னாங்க. டெல்லிலாம் பரபரப்பா இருக்கும்னாங்க, அப்படிலாம் ஒண்ணுமேயில்லீங்க. திடீர்னு ஒரு நாள் நைட்டு 12 மணிக்கு டெல்லிக்கு கூட்டிட்டு போனாங்க. எதுக்குன்னு கேட்டேன், விசாரணைன்னு சொன்னாங்க. ஏங்க, முதல்லயே சொல்லக் கூடாதா..? செலவுக்கு பணம்லாம் எடுத்து வச்சிருப்பனேன்னு கேட்டேன். இப்போ அவசரம்.. அதெல்லாம் அங்க பார்த்துக்கலாம். கிளம்புங்கன்னுட்டாங்க..

முதல்ல கொஞ்சம் யோசிச்சேன், எதுக்கு டெல்லிக்கு கூட்டிட்டு போறாங்க… தூக்குல ஏதாச்சும் போட்டுருவாங்களோன்னு… என்னதான் ஆகுதுன்னு பார்ப்போமேன்னு கிளம்பிட்டேன். நான் வேணும்னே எந்தத் தப்பும் பண்ணலை… கூட இருந்தவங்க பழி வாங்கிட்டாங்க. கோடிக்கணக்கான ரூபாயை இழந்து, கோடிக்கணக்கான பொருளை இழந்து.. அப்படியும் இன்னைக்கு நான் இந்த இடத்துல இருக்கன்னா, அதுக்குக் காரணம் கடவுள்தான்.

‘திகார்’ ஜெயில் உண்மையிலேயே நல்ல ஜெயிலுங்க. இந்தியாவிலேயே எந்த ஜெயில்லயுமே ஐஸ்க்ரீம், கூல்டிரிங்ஸ் இதெல்லாம் கிடைக்காது, ஆனா அங்க கிடைக்கும்.

என்னை ஒரு நாள் நைட்டு எட்டு மணிக்கு அங்க கொண்டு போய் விட்டாங்க. முதல்ல ஒண்ணுமே புரியலை.. ஒரு பாயும், தலகாணியும் கொடுத்தாங்க.. அந்த ரூம்ல ஏற்கெனவே ரெண்டு பேர் படுத்திருந்தாங்க. என்னடா இதுன்னு யோசிச்சேன். சரி காலைல பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்..

மறுநாள் வேற செல்லுல அடைச்சாங்க.. அங்க இருந்தவங்க முந்தின நாள் அந்த செல்லுலயா இருந்தீங்க.. அவங்க ரேப் கேஸ்ல உள்ள வந்தவங்கன்னு சொன்னாங்க. திக்குன்னு ஆயிருச்சு.. நல்லவேளை நம்மள ரேப் பண்ணாம விட்டாங்களேன்னு சந்தோஷமாயிட்டேன்.

நான் உண்மையிலேயே கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்.. ஏன்னா அங்கேயிருந்த கொஞ்ச நாள்ல ‘திகார்’ல இருந்த 1200 தமிழ்நாடு போலீசும் எனக்கு ரசிகரா மாறிட்டாங்க. என்னைப் பார்த்த்துமே ‘என்ன தலைவா இங்க..? ஏதாவது ஷூட்டிங்கா..?’ன்னு ஆச்சரியமா கேட்டாங்க.. இதுல பொய் சொல்ல முடியாது.. எப்படியும் 20 நாளாச்சும் இருந்தால்தான் பெயில் கிடைக்கும்னு எனக்கே தெரியும். அதுனால.. ‘இல்ல… இப்படி.. ஒரு வழக்கு விஷயமா வந்திருக்கேன்’னு சொன்னேன். ‘பரவாயில்லை பவரு.. இங்க நடக்கிறதப் பத்தி வெளில போய் படம் எடுங்கன்னாங்க’.

ஒரு நாள் இன்னொரு செல்லுக்குப் போனேன், அங்க பார்த்தா பெரிய, பெரிய முதலைங்க.. அவங்க சாதாரணமான ஆளுங்க கிடையாது. ‘என்ன கேஸ்ல உள்ள வந்தீங்க?’ன்னு என்னைக் கேட்டாங்க.. ‘இல்லங்க.. இந்த மாதிரி சின்ன விஷயம்தான்’னு சொன்னேன். ‘என்னது சின்ன விஷயமா.. நான் அந்த ஸ்கீம்ல எவ்வளவு போட்டிருக்கேன் தெரியுமா…? இரண்டாயிரம் கோடி.. நான் கடப்பாரை…நீ குண்டூசி’ன்னாங்க.

எதுக்கு இத சொல்றன்னா, ஒவ்வொரு இடத்துக்குப் போகும் போதும், நமக்கு விதவிதமான அனுபவம் கிடைக்குது. இப்போ இந்தியால எந்த ஜெயிலுக்கு  போனாலும் என்னால சமாளிக்க முடியும்.

இப்போ நான் எல்லாத்தையும் விட்டுட்டேன்.. என் ரசிகர்கள்ல ஒருத்தன் சொன்னான்.. தலைவா நீ உள்ள போ… உனக்கு உயிரையே கொடுப்பன்னான், ஆனா, ஒரு பாட்டில் தண்ணிகூட கொடுக்கலை…” என்று சோகத்துடன் தன் பேச்சை முடித்தார் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசினார்.

பவர் ஸ்டார் பேசியதையும் தயாரிப்பாளர் சந்திரசேகர் கிரண்பேடிக்கு உடனுக்குடன் மொழி பெயர்த்துச் சொன்னார்.

இதற்குப் பின்பும் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனுக்கு சோதனை தீரவில்லை. பார்த்திபன் தன் பேச்சில் திருமணமானவர்களுக்கு சிறைக்கு செல்வதில் சிரமம் இருக்காது என்று பேசினார். அப்போது “நம்ம பவர் ஸ்டாருக்கு மெட்ராஸ்ல 2, 3 வீடு இருக்கு. அதுனால அவருக்கு ஜெயிலுக்கு போறதெல்லாம் ஒரு பெரிய விஷயமே கிடையாது..” என்று ஒரு போடு போட்டார்.

கிரண்பேடியும் தன் பேச்சில் பல முறை ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கை காட்டியே பேச.. கூட்டம் கலகலத்தது.. ஆனால் பவர்ஸ்டார் கூட்டத்தோடு கூட்டமாக சேர்த்து சிரித்துவி்ட்டு ஓய்ந்தார்.

எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாருய்யா மனுஷன்..!

Our Score