நேற்று நடைபெற்ற ‘திகார்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பார்த்திபன் செய்த ஒரு செயல் எப்போதும் அவரொரு வித்தியாசமானவர்தான் என்பதை உணர்த்தியது.
பார்த்திபன் பேசும்போது, “இயற்கை மரணம்னா மூச்சைவிடும்போதுதான் ஏற்படும். ஆனால் ஒரு இயக்குநரின் மரணம் எப்போ ஏற்படும்ன்னா அவன் ஒதுக்கப்படும்போதுதான் ஏற்படும். இது எல்லோருக்குமே பொருந்தும். இயக்குநர் பேரசுவின் இயக்கத்தில் நடித்த பெரிய நடிகர்களெல்லாம் திரும்பவும் அவருடைய இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை அவருக்குத் தரணும்னு நான் கேட்டுக்குறேன்.
நான் பத்திரிகைகள்ல வர்ற ஜோக்குகளை நிறைய படிப்பேன். நானே நிறைய ஜோக்குகளை எழுதியிருக்கேன். சமீபத்துல படிச்சது நம்ம மகாகவி பாரதியாருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கணும்னு ஒரு எம்.பி. இப்போ சொன்னதைத்தான்.. ஒருத்தரை வாழும்போது பாராட்டாத நாம, அவர் செத்த பின்னாடி பாராட்டுறதும், புகழ்றதும் நம்ம வழக்கமா போச்சு..
இயக்குநர் ருத்ரையா.. சமீபத்தில் மறைந்து போன ஒரு இயக்குநர். 35 வருஷத்துக்கு முன்னாடி ‘அவள் அப்படித்தான்’னு ஒரு படம் பண்ணினார். அதுக்கப்புறம் ‘கிராமத்து அத்தியாயம்’ பண்ணினார். அது சரியா போகலை.. அத்தோட சரி. அதற்குப் பிறகு அவர் படம் பண்ணலை. நாம அவரை ஒதுக்கிட்டோம்..! என்னோட கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்துல ‘ருத்ரையான்னு ஒரு இயக்குநர் நம்மகிட்ட இருக்காரு’ன்னு குறிப்பிட்டிருந்தேன்.
அது ஒரு பெரிய விஷயம்ங்க.. சொந்தக் கதைல ஒரு படம் பண்ணி.. எதோடயும் காப்பியா இல்லாமல்.. அந்தப் படத்தைப் பண்ணியிருந்தாரு.. ஒரு நாள் நான் அவருக்கு போன் செஞ்சு, ‘ஏதாவது ஒரு தாட் சொல்லுங்க ஸார்.. என் சக்திக்குட்பட்டதா இருந்தால் நானே அதை தயாரிக்கிறேன்’னு சொன்னேன். அவர் அப்போ சேலத்துல விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தார். அதைக் கேட்கும்போதே மனசுக்கு வேதனையா இருந்துச்சு.. ‘நான் சென்னை வந்ததும் பேசுறேன்’னு சொன்னார். ஆனா பேசாமலேயே போயிட்டாரு..
பேரரசு மாதிரியான இயக்குநர்களுக்கும் தொடர்ந்து படம் பண்ணிக்கிட்டேயிருக்கணும்கிறதுதான் பெரிய விஷயம்.. காசு, பணம் சம்பாதிக்கிறதெல்லாம் அடுத்த விஷயம்தான்.. இப்போ ஆர்.சி.சக்தி ஸார் இருக்காரு.. ‘சிறை’ன்னு அற்புதமான படம் பண்ணியிருந்தாரு. அவரை மாதிரியானவர்களையெல்லாம் நாமதான் பயன்படுத்திக்கணும்..
இப்போ ருத்ரையா ஸாரோட புகைப்படத்தை கொண்டு வந்திருக்கேன். இதனை இயக்குநர்கள் சங்கத்திற்கு எனது அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். இதை இயக்குநர்கள் சங்கத்தில் எல்லார் கண்ணுலேயும் படுற மாதிரி மாட்டி வைக்கணும். அதைப் பார்க்குற புதிய இயக்குநர்கள்.. அவரை மாதிரி சொந்தக் கதைல.. யார்கிட்டேயும் திருடாமல் நல்ல படம் செய்யணும்னு அவங்க நினைக்கணும்.. அதுக்காகத்தான்..” என்று சொல்லி அந்தப் புகைப்படத்தை மேடையில் இருந்த இயக்குநர்கள் பேரரசு, ஈ.ராம்தாஸ், சண்முகசுந்தரம், ஏ.வெங்கடேஷ், ரவி மரியா ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
பார்த்திபன் இதைச் செய்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.. ருத்ரையாவின் மறைவுக்கு இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்படவில்லை. காரணம், அவர் இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்று சங்கம் சொன்னது. ‘இயக்குநர்கள் தனிப்பட்ட முறையில் அஞ்சலி செலுத்திக் கொள்ளலாம்’ என்று சொன்னது.
ருத்ரையா போன்ற இயக்குநர்களை சங்கமே நேரில் சென்று அழைத்து வந்து கவுரவ உறுப்பினராக இணைத்திருக்க வேண்டும். இதனால் அந்தச் சங்கத்திற்குத்தான் பெருமை கிடைத்திருக்கும். மாறாக.. பழைய இயக்குநர்களிடம்கூட ‘யார் வந்தாலும் 1 லட்சம் ரூபாய் கட்டணம். இல்லாவிடில் உறுப்பினர் கார்டு இல்லை’ என்றெல்லாம் சொல்வது இயக்குநர் சங்க வரலாற்றில் இது போன்ற கரும்புள்ளிகளைத்தான் ஏற்படுத்தும்..!
ஏற்கெனவே சென்ற ஆண்டு காலமான ‘பதினாறு வயதினிலே’ படத்தின் வசனகர்த்தாவும், சில படங்களை இயக்கிய இயக்குநருமான கலைமணி இறந்தபோதும் இதேபோல் ‘அவர் உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்கவில்லை’ என்று கூறி இயக்குநர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்படவில்லை. இதற்காக அப்போது அந்தச் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருந்த கலைமணியின் சீடர் நடிகர் மனோபாலா மீடியாக்களில் குமுறியது நினைவிருக்கலாம்..!
இதனை மனதில் வைத்துத்தான் இயக்குநர்கள் சங்கத்தில் மாட்டி வைக்க ஒரு புகைப்படத்தைக் கொடுத்து சங்கத்தை இக்கட்டில் கொண்டு வந்துவிட்டிருக்கிறார் பார்த்திபன். இப்போது இயக்குநர் பார்த்திபன் செய்திருப்பதும் நல்லதுதான்.. சில நல்லவைகளை செய்ய இப்படியான வழிகளையும் கடைப்பிடிக்கத்தான் வேண்டும்..! ஆனால் சிக்கல் இயக்குநர்கள் சங்கத்தில்தான்.
இதுவரையில் எந்தவொரு இயக்குநரின் புகைப்படமும் இயக்குநர் சங்க அலுவலகத்தில் மாட்டப்படவில்லை. காரணம், தமிழ்ச் சினிமாவின் துவக்கக் காலத்தில் இருந்து இப்போதுவரையிலான இயக்குநர்களில் புகழ் பெற்றவர்கள்.. திறமைசாலி இயக்குநர்களே.. 300 பேருக்கும் மேலாக இருப்பார்கள். அனைவரின் புகைப்படத்தையும் மாட்டி வைக்கும் அளவுக்கு சங்கத்தில் இடமில்லை. ஒரு சிலரின் புகைப்படங்களை மட்டும் மாட்டினால்.. ஏன் அவரது புகைப்படமில்லை. இவரில்லையே என்றெல்லாம் பேச்சுக்கள் வரும் என்பதால்தான் யாருடைய புகைப்படத்தையும் மாட்டாமல் வைத்திருக்கிறார்கள்.
இதை மட்டும் எப்படி செய்வார்கள்..?