இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான சண்டைப் பயிற்சி இயக்குநரான அனல் அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்து சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார்.
அவர் இப்போது இந்த ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக மாறியுள்ளார்.
இந்தப் படத்தை ஏ.கே.பிரேவ்மேன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராஜலக்ஷ்மி அரசகுமார் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் விக்னேஷ், வர்ஷா விஸ்வநாத், அபி நக்ஷத்ரா, சத்யா NJ, சம்பத், ஹரீஷ் உத்தமன், திலீபன், ‘அட்டி’ ரிஷி, பூவையார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
எழுத்து மற்றும் இயக்கம் : ‘அனல்’ அரசு, தயாரிப்பு : ராஜலட்சுமி அரசகுமார், இசை : சாம் CS, ஒளிப்பதிவு: R. வேல்ராஜ், படத் தொகுப்பு : பிரவீன் KL, தயாரிப்பு வடிவமைப்பு: K.மதன், சண்டைப் பயிற்சி: அனல் அரசு, ஆடை வடிவமைப்பு: சத்யா N.J, நிர்வாக தயாரிப்பு: M.S.முருகராஜ், பத்திரிக்கை தொடர்பு: ரியாஸ்.K.அஹமத்.
மரித்துப் போனாலும் சாம்பலிலிருந்து மீண்டும், மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையை போலவே இந்த படத்தின் நாயகன் சாவின் விளிம்புவரையிலும் சென்று மீண்டும், மீண்டும் உயிர் தப்பி வந்து எதிரிகளுக்கு கிலி கொடுக்கிறார். அதனால்தான் இந்தப் படத்திற்கு ‘பீனிக்ஸ்’ என்று பெயராம்.
தமிழ் சினிமாவின் டாப் மோஸ்ட் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதிதான் இந்தப் படத்தின் நாயகன். இவர் அறிமுகமாகும் முதல் திரைப்படமும் இதுவே ஆகும்.
நாயகனான சூர்யா அந்த தொகுதி எம்.எல்.ஏ.வை பட்டப் பகலில் படுகொலை செய்கிறார். இவருடைய வயது 18 வயதுக்குள்ளாக இருப்பதால் இவரை சிறார் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறார் நீதிபதி.
அங்கேயும் இவரை சில ரவுடிகள் கொலை செய்ய முயல்கிறார்கள். அவர்களை தன்னுடைய புஜ வலிமையால் வீழ்த்து விடுகிறார் சூர்யா. அதற்கு பின்பு அடங்காத எதிரிகள் சூர்யாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்பொழுதும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அதிலிருந்தும் தப்பித்தவர் தப்பித்து எங்கேயும் வெளியில் ஓடாமல் மீண்டும் அதே இல்லத்திற்கு வந்து சரண் அடைகிறார்.
இப்பொழுது எதற்காக இந்த கொலை? ஒரு சட்டமன்ற உறுப்பினரை கொலை செய்யும் அளவுக்கு அவர் மீது என்ன கோபம் என்று போலீஸ் சூர்யாவிடம் விசாரிக்க துவங்குகிறது.. அது என்ன கதை? சூர்யாவை பழிவாங்கும் திட்டம் பலித்ததா? அல்லது சூர்யா தன்னுடைய எதிரிகளை பழி வாங்கினாரா? இறுதியில் முடிவு என்னவாகிறது? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் சூர்யா மிக இளம் வயது. அதோடு ஒரு நாயகனுக்குரிய எந்தவொரு அடையாளமும் இல்லாமல் சாதாரணமான ஒரு சின்ன பையனை போலத்தான் படத்தில் தோன்றியிருக்கிறார். அவருடைய இயல்பான தோற்றமும் இதுதான் என்பதால் அப்படியே அவரை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
நடிப்புக்கு ரொம்பவும் மெனக்கெடாமல் தனக்கு என்ன வருகிறதோ அதை மட்டுமே செய்திருக்கிறார் சூர்யா. ஆனால் சண்டைக் காட்சிகளில் அனல் பரப்பியிருக்கிறார் என்பது மட்டும் உண்மை. இந்தப் படத்தின் இயக்குநரான அனல் அரசு புகழ் பெற்ற சண்டை பட இயக்குனர் என்பதால் அழகாக வடிவமைத்த சண்டை காட்சிகளில் மிகவும் கச்சிதமாக சண்டையிட்டு ஒரு நாயகனாக பொருந்திப் போகிறார் சூர்யா.
அடுத்தடுத்த படங்களில் வேறு, வேறு கதாபாத்திரங்களில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் ஒரு இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இவரது அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினிதான் படம் நெடுகிலும் அழுகிறார்… அழுது கொண்டே இருக்கிறார். கதறுகிறார்… இவருடைய அழுகையும், கதறலும்தான் படத்தின் பின் பாதியைத் தாங்கி பிடித்திருக்கிறது என்று சொல்லலாம்.
சூர்யாவின் அண்ணனாக நடித்தவர் குத்துச் சண்டை போட்டியில் தீவிரமாக இறங்கி ஆக்ரோஷமான வீரனைப் போல சண்டையிட்டு நடித்திருக்கிறார். அவருடைய அந்த ஆக்ரோச நடிப்பை பாராட்டித்தான் ஆக வேண்டும்.
இன்னொரு பக்கம் பக்கத்து வீட்டில் வசிக்கும் காயத்ரியின் மகள் இவானவை அவர் காதலிக்கும்விதமும், காதல் காட்சிகளும் மனதை கவரவில்லை என்றாலும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் அண்ணனின் முடிவும், இவனாவின் முடிவும் எதிர்பாராதது. ஆனால் இவானாவின் கதறலான நடிப்பு நிச்சயம் அவருக்குப் பாராட்டை பெற்று தருகிறது.
இவர்கள் இருவரின் காதலும் இவனாவின் வீட்டுக்கு தெரிந்தவுடன் அவருடைய அப்பா தேவதர்ஷினியை வீட்டுக்குள் அழைத்து சமாதானமாக பேசுகின்ற அந்தக் காட்சி நிச்சயம் நாம் இதுபோன்ற குப்பத்து திரைப்படங்களில் பார்த்திருக்காத ஒரு திரைக்கதை. இந்த விஷயத்திற்காகவே இந்த இயக்குநரை நாம் மனதார பாராட்டலாம். மற்றும் இவனாவின் அம்மாவாக நடித்த காயத்ரி, அப்பாவாக நடித்தவர்… இவர்களையும் பாராட்ட வேண்டும்.
எம்எல்ஏவாக நடித்த சம்பத், அவரது மாமனாராக நடித்தவர்.. இருவகும் தங்களது வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்கள். சம்பத்தின் மனைவியாக நடித்திருக்கும் வரலட்சுமியின் வில்லத்தனமும் குறிப்பிடத்தக்கது. இவருடைய மகனாக நடித்தவர் எப்பொழுதும் முகத்தை ஒரு மன நோயாளி போலவே வைத்துக் கொண்டு கடைசியாக களத்தில் குதிப்பது எதிர்பாராதது.
ஆர் வேல்ராஜ் தன் ஒளிப்பதிவில் இ துபோன்ற சண்டை படங்களுக்கு எப்படி எல்லாம் மிரட்டுவார்களோ அதை எல்லாம் ஒன்றுவிடாமல் செய்திருக்கிறார். ஜெயில் வார்டனாகவும், ஒரு இறுக்கமான முகத்துடன் கடைசிவரையில் வந்து நல்லதொரு நடிப்பை காண்பித்திருக்கிறார்.
சாம் சி.எஸ்.-ன் இசையில் குப்பத்தில் பாடுகின்ற ஒரு பாடல் கேட்கும் ரகம். ஆனால் பின்னணி இசையில் அடித்து தூள் பறத்தியிருக்கிறார். அதிலும் குத்துச் சண்டை போட்டியின்போது ஒலிக்கும் இசை அந்த சண்டையின் தீவிரத்தை நம் மனதுக்குள் கடத்தி இருக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குநரும், சண்டை பயிற்சியாளருமான அனல் அரசு தன்னுடைய மொத்த்த் திறமையும் இந்த படத்தில் இறக்கி இருக்கிறார் போலும்..! படத்தில் பெரிய வில்லன்களை எல்லாம் கொண்டு வராமல் சின்ன வயது இளைஞர்களாக பார்த்து அவர்களை அடிதடியில் இறக்கியிருக்கிறார்கள். எத்தனை பேருக்கு எலும்பு முறிந்து போனதோ.. தெரியவில்லை… ஆனால் சண்டைக் காட்சிகளில் அனல் பறந்தது என்றே சொல்லலாம்.
கே.எல்.பிரவீனின் படத் தொகுப்பு சிறப்புதான். சண்டை காட்சிகளை தொகுத்து அளித்தவிதம் நிச்சயம் பாராட்டுக்குரியது. சண்டை பயிற்சி இயக்குநரும், படத் தொகுப்பாளரும் இணைந்துதான் இந்தக் காட்சிகளை தொகுத்து அளித்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு காட்சிகளை அழகாக வடிவமைத்து இருக்கிறார் படத் தொகுப்பாளர்.
ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் ஒரு கமர்சியல் திரைப்படம் எது மாதிரியாக இருக்குமோ அதில் சிறிதளவும் குறையில்லாமல் இத்திரைப்படம் வந்துள்ளது.
அரசியல் வியாதிகளின் அட்டூழியத்தை வெளிப்படையாக சொல்லும் திரைப்படம். இது போன்ற கதைகளில் 1001-வது படமாகவும் வந்திருக்கிறது.
ஒரு புதுமுக நடிகரை வைத்து இந்த அளவுக்கு சண்டை பயிற்சி கொடுத்து படத்தை இயக்கிக் கொண்டு வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் இந்த படத்தை இந்த அளவுக்கு ரத்த சகதியாக கொண்டு வந்திருக்கும் அனல் அரசுக்கு ஒரு பக்கம் பாராட்டு என்றாலும் இந்த அளவுக்கு இளைஞர் கூட்டத்தை திசை திருப்பும் முயற்சிகள் தேவையா என்கின்ற ஒரு கேள்வியையும் அவர் முன் நாம் வைக்கிறோம்.
சூர்யா சேதுபதி என்ற இளைஞனை வைத்து ஆக்கபூர்வமான ஒரு நல்லதொரு திரைப்படத்தை அடுத்தடுத்த படங்களில் நாம் பார்க்கலாம் என்ற நம்பிக்கையோடு அவரை நம் மனதாரப் பாராட்டுகிறோம்.
RATING : 3 / 5