24 A.M. ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மிக பிரம்மாண்டமான செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சீமராஜா’.
படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி, லால் மற்றும் பல பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இயக்குநர் பொன்ராம் படத்தினை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தில் இந்திய அளவில் பேசப்படும், கொண்டாடப்படும், முன்னணி சூப்பர் ஸ்டார் ஹீரோக்களின் ஒரே தேர்வாக இருக்கும் சண்டை பயிற்சியாளர் அனல் அரசு பங்கு கொண்டுள்ளது படத்திற்கு மிகவும் பெருமையளிக்கும் விஷயமாகும்.
கடவுளின் தேசமான கேரளாவில் இருந்து மும்பையின் பாலிவுட்வரை தனது அதிரடியான சண்டை காட்சிகளால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கும் அனல் அரசு, இந்த ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயன் உடன் பணிபுரிந்தது “ஒரு தனித்துவமான அனுபவம்…” என்றார்.
‘சீமராஜா’ பட அனுபவம் பற்றி அனல் அரசு பேசும்போது, “இந்த ‘சீமராஜா’ திரைப்படம் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டது. ஆனால் சண்டை காட்சிகள்தான் எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. சிவகார்த்திகேயனின் உயர்ந்து வரும் நட்சத்திர மதிப்புக்கு ஏற்றவாறும், அதே சமயத்தில் வன்முறை இல்லாமல், ரசிக்கும்விதத்திலும் உருவாக்க முயற்சித்திருக்கிறேன்.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் பணிபுரிவதில் உள்ள விசேஷமான ஒரு விஷயம், அவர் சண்டை காட்சிகளை வடிவமைக்கும்போது குழந்தைகளை மனதில் நினைக்கும் இயல்புடைய ஒரு நடிகர்.
அவருடன் நான் ஏற்கனவே பணிபுரிந்த ‘ரெமோ’ மற்றும் ‘சீமராஜா’ இரண்டுமே என்னுடைய மற்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது வேறுபட்ட அனுபவமாக இருந்தது.
சண்டை காட்சியில் சண்டை கலைஞர்கள் அவரால் தவறுதலாக காயப்படுத்தப்படவில்லை என்பதை முதலிலேயே உறுதிப்படுத்திக் கொள்கிறார். சில நேரங்களில், எங்கள் குழுவினர் எந்தவித தயக்கமும் இன்றி ‘எங்களை அடிங்க’ என கேட்கும்போதும், அவர் எதுவும் தவறாக நடக்காது என்பதை உறுதிப்படுத்திய பின்புதான் அதில் ஈடுபடுகிறார்.
பல ஹீரோக்கள் வன்முறை மற்றும் இரத்தக் களரியான சண்டை காட்சிகளை விரும்புகின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை பார்க்கும் சண்டைக் காட்சிகளை விரும்புபவர். இது அவர் எளிமையான, சாதாரண சண்டையை விரும்புகிறார் என்று அர்த்தமல்ல. அவர் டூப் இல்லாமல் அபாயகரமான சண்டை காட்சிகளிலும் முழு முயற்சியோடு நடிக்கிறார். இது நான் பெயருக்காக சொல்லும் வார்த்தைகள் இல்லை. திரையரங்குகளில் பார்க்கும்போது நீங்களே உணர்வீர்கள்…” என்றார் பெருமையுடன்..!