full screen background image

3 BHK – சினிமா விமர்சனம்

3 BHK – சினிமா விமர்சனம்

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே மிடில் கிளாஸ் மக்களின் ஒரு மிகப் பெரிய கனவு சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பதுதான்.

அப்படி ஒரு பெரும் கனவுடன் இருக்கும் ஒரு குடும்பத் தலைவன் வீடு வாங்குவதற்காக என்னென்ன சிரமப்படுகிறான்,, எவ்வளவு கஷ்டப்படுகிறான்,,, என்பதைச் சொல்லும் படம்தான் இந்த திரைப்படம்.

வாசுதேவன் என்ற சரத்குமார் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவன். இவரது மனைவி சாந்தி என்கிற தேவயானி, மகன் பிரபு என்ற சித்தார்த். மகள் மீதா ரகுநாத். சித்தார்த் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மீதா ரகுநாத் 10-ம் வகுப்பு படிக்கிறார்.

சரத்குமார் ஒரு ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் அக்கவுண்டண்ட்டாக வேலை செய்து வருகிறார். அவருக்கு கிடைக்கும் சம்பளத்தில் குடும்பத்தை எவ்வளவு சிக்கனமாக நடத்த வேண்டுமோ அவ்வளவு சிக்கனமாக நடத்தி வருகிறார் மனைவி தேவயானி.

சரத்குமாருக்கு எப்படியாவது சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி விட வேண்டும் என்ற கனவு.. ஆசை… அதற்காக கொஞ்சம், கொஞ்சமாக பணம் சேர்த்து ஏழரை லட்சம் ரூபாய் வரையில் சேமித்து வைத்திருக்கிறார். இதை வைத்து வீடு வாங்க வேண்டும் என்று அவர் முனைகிறார்.

அந்த நேரத்தில் திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளாகி இதய தமனிகளில் இரண்டு அடைப்புகள் இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். இந்த சிகிச்சைக்காக அவர் சேமித்து வைத்திருந்த மொத்தப் பணமும் காணாமல் போகிறது.

அப்படியும் விடாமல் மறுபடியும் முயற்சி செய்து வங்கி கடன் பெற்று வீட்டை வாங்க முனைப்பில் இருக்கும்பொழுது மகன் சித்தார்த் குறைந்த மதிப்பெண்ணோடு தேர்வு செய்து பாஸ் செய்துவிட்டதால், அவரை இன்ஜினியரிங் சேர்ப்பதற்காக அந்தப் பணமும் காலியாகிறது.

இதற்கடுத்து வீடு வாங்குவது பற்றிய சிந்தனையே இல்லாமல் விட்டு விடுகிறார் சரத்குமார். மகன் சித்தார்த் படித்து முடித்து வெளியில் வந்து ஐடி நிறுவனத்தில் வேலை சேர்ந்து தான் ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் இறங்குகிறார். அவருக்கு எல்லாவிதமான ஆதரவையும் தருகிறார் சரத்குமார்.

முதல்முறையாக வங்கி லோன் போட்டு வீடு வாங்க நினைக்கும் நேரத்தில் மகளது திருமணம் நடைபெற வேண்டிய கட்டாயம் வர, இப்பொழுதும் அந்த வீட்டுக் கனவு பணால் ஆகிறது.

அடுத்து என்ன நடந்தது..? வீடு வாங்கினார்களா…? இல்லையா…? சரத்குமார் என்ன ஆனார்…? அவருடைய கனவு என்ன ஆனது?.. என்பதுதான் இந்த 3 BHK திரைப்படத்தின் சுவையான திரைக்கதை.

அச்சு அசலாக ஒரு மிடில் கிளாஸ் மாதவனாகவே நடித்திருக்கிறார் சரத்குமார். இதுவரையில் மற்ற திரைப்படங்களில் நீங்கள் பார்க்காத ஒரு சரத்குமாரை இத்திரைப்படத்தில் பார்க்கலாம்.

சரத்குமாரின் ஸ்பெஷலாட்டியே அவருடைய ஆவேசமும், கோபமும்தான். ஆனால், இதில் ஒரு காட்சியில்கூட அப்படி ஒரு குணத்தை, நடிப்பை அவர் காட்டவே இல்லை. படம் நெடுகிலும் அமைதியான, அடக்கமான, அமைதியின் திருவருவமாகவே வலம் வந்திருக்கிறார் சரத்குமார்.

ஒரே ஒரு காட்சியில் மட்டுமே கோபம் கொண்டு வீட்டு உரிமையாளரை “வேலைய பார்த்துட்டு போய்யா..” என்று கொதிக்கின்ற அந்தக் காட்சி, அப்படியே முழு எதார்த்தமாக அமைந்துள்ளது.

அலுவலகத்தில் முதலாளியுடன் கோபம் வந்தாலும் அமைதியாக அடக்கிக் கொண்டு பேசுவது, மகனிடமும் அதையே செய்வது, வீட்டு புரோக்கரிடம்கூட தன்னுடைய இயலாமையை கலந்த உணர்வையே நடிப்பாக காட்டியிருக்கிறார் சரத்.

சரத்குமாருக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் ஒரு அமைதியான குடும்பத் தலைவியாக நடித்திருக்கிறார் தேவயானி. எப்பொழுதும் அப்பா பிள்ளைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு முடிக்கும் அம்மா கதாபாத்திரம்போல் இதிலும் சில காட்சிகள் இருந்தாலும் அதையும் தாண்டி கணவரின் நீண்ட நாள் கனவினை நிறைவேற்றுவதற்காக அவர் உதவி செய்யும் எண்ணமும் அதே சமயம் பிள்ளைகள் மனம் கோணாமல் நடக்க வேண்டும் என்று நினைக்கும் குடும்பத் தலைவியாகவும் தேவயானியின் நடிப்பு அமைந்துள்ளது.

மகனாக நடித்திருக்கும் சித்தார்த் படத்தின் பெரும்பாலான காட்சிகளை தானே சுமந்து இருக்கிறார். பிளஸ் டூ படிக்கும் மாணவர். அதற்கு பிறகு கல்லூரி மாணவர். அதற்கு பிறகு வேலை பார்க்கும் இளைஞர். பின்பு ஒரு பொறுப்பான கணவன் என்று பல்வேறு பரிணாமங்களை தன்னுடைய நடிப்பில் காண்பித்திருக்கிறார் சித்தார்த்.

அந்தந்த வயதுக்கேற்றவாறு அவருடைய ஒப்பனையும், அவருடைய உடல், உடை, நடை, பாவனையும் மாறி இருப்பது கவனிக்கத்தக்கது. பாராட்டத்தக்கது.

பள்ளியில் படிக்கும்போது தனக்கு உத்வேகமாக இருந்து தன்னை ஊக்குவித்த அந்தப் பெண்ணை கடைசியாக துணிக் கடையில் பார்த்தத் தருணத்தில் நம்மையும் கொஞ்சம் உருக வைத்துவிட்டார் சித்தார்த்.

எப்பொழுதும் தன்னை மட்டமாகவே பேசும் அலுவலக மேனேஜரை வெளுத்துக்கட்டும்விதமாக ஒரு கற்பனையை அவர் செய்கின்ற செயலும், அதற்கு பிறகு அமைதியாக “எனக்குப் பிடிச்ச வேலையை செஞ்சுக்கிறேன்… உங்களுக்காக நான் ஒரு சராசரியாக இருக்க விரும்பவில்லை…” என்று சொல்லிவிட்டு வரும் பொழுதும் சபாஷ் போட வைத்திருக்கிறார் சித்தார்த்.

தங்கையாக நடித்திருக்கும் மீதா ரகுநாத் மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார் அண்ணனுடன் சின்ன சின்ன சண்டைகளை போடும்போது தங்கச்சிகளை வைத்திருக்கும் அண்ணன்களெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் என்று தோன்றியது.

கடைசியாக அண்ணனை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும். அது என் பொறுப்பு என்ற தந்தையிடம் சொல்லி அண்ணனை அலாரம் வைத்து எழுப்பி, அவனுக்கு காபி கொடுத்து… உதவி செய்யும் தங்கச்சி கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் மீதா.

அவருடைய திருமணம் தோல்வியில் முடிந்தபொழுது மருத்துவமனையில் அவர் காட்டும் கோபமும், வீட்டில் தன்னுடைய இயலாமையை சொல்லி கதறுகின்ற பொழுதும் ஒருகணம் நம்மையே திகைக்க வைத்துவிட்டது அவருடைய நடிப்பு.

சைத்ரா என்ற நாயகி சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவரை இந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்த இயக்குநரை நம்ம மனமார பாராட்ட வேண்டும். அதேபோல் இதை அனுமதித்த சித்தார்த்துக்கும் நமது பாராட்டுக்கள்.

ஸ்கூல் மாணவியாக இருக்க வேண்டும். அதேபோல் பின்பு பெரிய பெண்ணாகவும் தெரிய வேண்டும் என்பதை மனதில் வைத்து இந்தப் பெண்ணை தேர்வு செய்திருக்கிறார்கள் போலும்… அதற்குக் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சைத்ரா.

சரத்குமாரின் தம்பியாக நடித்திருக்கும் பஞ்சு சுப்புவின் ஒட்டாத தம்பிக்கான நடிப்பும், வீட்டு ஓனர் என்ற மமதையில் தலைகால் புரியாமல் ஆடும் ரமேஷ் வைத்யாவின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது.

வீட்டு புரோக்கராக சில காட்சிகளே ஆனாலும் யோகி பாபுவின் நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது. அதிலும் சில வசனங்களை அவர் உச்சரிக்கும்விதமும் நகைச்சுவையை தெறிக்க வைத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன், ஜித்தின் ஸ்டான்லிலாஸ் ஆகியோரின் கூட்டணி படத்தின் ஒளிப்பதிவை இறுதி வரையிலும் தரம் குறையாமல் கொண்டு சென்றிருக்கிறது.

வீடு பார்க்க செல்பவர்கள் பார்க்கின்ற வீடுகளின் அமைப்புகளும் வெள்ளை பூசாத, அந்த செங்கல் பூச்சும், பிரம்மாண்டமாக நிமிர்ந்து நிற்கும் அந்த கட்டிடங்களும்… அதற்குள் கனவோடு உள்ளே நுழையும் இந்த குடும்பத்தினர் எப்படியாவது இந்த வீட்டை அவர்கள் தலையில் கட்டி விட வேண்டும் என்று நினைக்கும் கன்ஸ்டர்ஷன் கம்பெனி ஆளும்.. இதற்கு மேல் அலைய முடியாது என்று சொல்லும் புரோக்கருமாக வீட்டை மையப்படுத்திய காட்சிகள் எல்லாம் நடித்தவர்களில் உணர்வுகளை அழகாக படமாக்கி இருக்கிறார்கள்.

அதேபோல் 20 வருட கால பயணத்தை காட்டுவதால் படத்தில் நடித்தவர்களின் பல்வேறு வகையான வயதுக்குரிய அந்தத் தோற்றத்தையும் அவர்களுடைய இயல்பையும், மாடுலேசனையும் குறையாமல் பதிவு செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத்தின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம். ஆனால் மாண்டேஜ் காட்சிகளாகவே பாடல்களை தொகுத்து வழங்கியிருப்பதால் காட்சிகளின் கணம் நம் மனதில் நின்று இருப்பதோடு பாடல்களும் நம்மை கடந்து சென்றிருக்கின்றன. பின்னணி இசை நாடகத்தனமாக இல்லாமல் வெகு இயல்பாக அமைந்துள்ளது.

வீடு வாங்குவது என்பது ஆடம்பரம் அல்ல. அது ஒரு அவசியமான தேவை. ஒரு மனிதன் தன்னுடைய சுயமரியாதை எந்த இடத்திலும் இழந்து விடக்கூடாது என்றால் அவன் நிச்சயம் சொந்த வீட்டுக்காரனாகத்தான் இருக்க வேண்டும். இதுதான் இப்போதைய நிலைமையில் இந்தியா முழுவதும் மிடில் கிளாஸ் மக்களுக்கு தெரிந்திருக்கும் விஷயம். அதைத்தான் இங்கே பாடமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

அதேசமயம் ஒரு வீடு மட்டுமே ஒரு மனிதனுக்கு, ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு நிறைவை தராது, அந்த வீடு வாங்குவதற்காக வாங்கிய கடனை கட்டுவதற்காக அடுத்த 25 வருடங்கள் அவன் நாயாய் உழைக்க வேண்டும். அந்த உழைப்பில் சிறிது சேதாரம் ஆனாலும் மொத்தமும் கையை விட்டு போய்விடும்.

இந்த 25 வருட கால உழைப்பை செக்கு மாடு மாதிரி உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இன்றைய இளைஞர்கள் சொந்த வீடு கனவு என்றாலும் அதற்காக இத்தனை உழைப்பு உழைக்க வேண்டுமா என்று இறுதியாக தங்களை தாங்களே கேட்டுக் கொண்டு வருந்துகிறார்கள். இந்த வருத்தத்தையும் இயக்குநர் ஏதாவது ஒரு காட்சியில் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு வீடு என்பது வெறுமனே கல்லும், மண்ணும், செங்கல், சுண்ணாம்பு.. இதையெல்லாம் சேர்த்து கட்டப்படுவது அல்ல. அதற்காக செலவிடும் பணத்தை சம்பாதித்து இருக்கும் அந்த குடும்பத்தினர் மன வலியையும் சேர்த்துதான் அந்த கட்டிடம் தாங்கிக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது.

இந்தப் படம் அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். இன்றைய காலக்கட்டத்தில் இத்திரைப்படத்தின் கதையை மிக அழகாக எழுதி, விறுவிறுப்பாகத் திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்கி கொடுத்திருக்கும் தம்பி ஸ்ரீகணேசுக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்..!

RATING : 4 / 5

Our Score