யோகி பாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேய் மாமா’ படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. அதைப் பார்த்தவுடன் சமூக வலைத்தளங்களில் அந்தப் படம் பற்றி கிண்டலும், கேலியுமான மீம்ஸ்கள் பரவலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேய் மாமா’. இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ரேகா, ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்குத் தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் படம் தற்போது வரும் செப்டம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த வெளியீட்டுத் தேதி அறிவிப்பை படத்தின் போஸ்டருடன் வெளியிட்டனர். இந்தப் போஸ்டர்தான் தற்போது இணையத்தில் கடுமையான கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
ஏனென்றால், இந்தியில் விக்கி கெளசல் நடிப்பில் வெளியான படம் ‘பூட்’ படத்துக்காக உருவாக்கப்பட்ட போஸ்டரை அப்படியே மாற்றி, ‘பேய் மாமா’ போஸ்டரை உருவாக்கியுள்ளனர்.
குறிப்பாகப் புதிதாக யோகி பாபு படத்தைக்கூட வைக்காமல், இந்தி போஸ்டரில் உள்ள நாயகனின் தலைக்கு பதிலாக யோகி பாபுவின் தலையை வைத்து உருவாக்கியுள்ளனர்.
இந்த அளவுக்கா கிரியேட்டிவிட்டி இல்லாமல் அந்தப் படக் குழுவினர் இருக்கிறார்கள் என்று பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.