full screen background image

ஜாலியோ ஜிம்கானா – சினிமா விமர்சனம்

ஜாலியோ ஜிம்கானா – சினிமா விமர்சனம்

டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் எம் ராஜேந்திர ராஜன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ஜாலியோ ஜிம்கானா’.

டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்  கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள  படங்களைத் தயாரித்து வருகிறது.

இதற்கு முன்புநாகேஷ் திரையரங்கம்என்ற தமிழ்ப் படத்தையும் மராத்தி படம் ஒன்றையும் தயாரித்துள்ளது. இப்போது முழுக்க முழுக்க  ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாக  ‘ஜாலியோ ஜிம்கானாஎன்ற படத்தை மிகப் பெரிய பொருட் செலவில் தயாரித்துள்ளது.

சார்லி சாப்ளின்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் பிரபுதேவா காம்போ மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

இந்தப் படத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டின், யோகிபாபு, அபிராமி,  யாஷிகா ஆனந்த், புஜிதா பொன்னடா,  ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ஜான் விஜய், ‘ஆடுகளம்நரேன், மதுசூதன் ராவ், ரோபோ சங்கர், சுரேஷ் சக்ரவர்த்தி,  சாய் தீனா, எம்.எஸ். பாஸ்கர், ‘டாக்டர்சிவா, ‘கல்லூரிவினோத், கோதண்டம், ‘ஆதித்யா கதிர்’, ஆதவன், ‘தெலுங்குரகுபாபு,  மரியா, அபி பார்கவன் உள்பட  பலரும் நடித்துள்ளனர்.

இயக்குநர்ஷக்தி சிதம்பரம், தயாரிப்பாளர்எம்.ராஜேந்திர ராஜன், தயாரிப்பு நிறுவனம்டிரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட், கலை இயக்கம்ஜனார்த்தனன், படத் தொகுப்பு – ‘அசுரன்’, ’விடுதலைபுகழ் ராமர், ஒளிப்பதிவுகணேஷ் சந்திரா, நடன இயக்கம்பூபதி ராஜா, சண்டை இயக்கம் மகேஷ் மாத்திவ், பிரதீப், பாடல்கள்மு.ஜெகன் கவிராஜ், பத்திரிக்கை தொடர்புசுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், கொடைக்கானல் மற்றும் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள பல இடங்களில் நடந்துள்ளது.

பல காமெடிப் படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் சக்தி சிதம்பரத்தின் 16-வது படம் இது.

பூங்குன்றன் என்ற பிரபுதேவா ஒரு வழக்கறிஞர். சமூக நலனுக்காக வேண்டி பல பொது நல வழக்குகளை நீதிமன்றத்தில் போட்டு வழக்காடி வருபவர். தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சரான மதுசூதனன் ராவ் போலியாக மருத்துவ முகாம் நடத்தி ஏழை மக்களின் ஆதார் கார்டுகளை சுருட்டி, அவைகளை வைத்து அவர்களின் பெயரிலேயே போலியாக மருத்துவக் காப்பீடு எடுத்து ஏழை மக்களை ஏமாற்றியிருக்கிறார்.

அமைச்சரின் இந்த தில்லுமுல்லுவை பிரபுதேவா நீதிமன்றத்திற்குக் கொண்டு வருகிறார். இதனால் கோபமடையும் அமைச்சர் மதுசூதனன்ராவ், பிரபுதேவாவை கொலை செய்ய ஆட்களை செட் செய்கிறார்.

அமைச்சரின் ஆட்கள் பிரபுதேவாவை கொலை செய்யும் நேரத்தில் செல்லம்மா என்ற அபிராமி தன்னுடைய தந்தை ஒய்.ஜி.மகேந்திராவின் அட்வைஸ்படி அவரை சந்திக்க தனது மகள்களான பிரியாணி பவானி என்ற மடானோ செபாஸ்டியன், யாழினி என்ற அபிராமி பார்கவன், சிவானி என்ற மரியாவுடன் பிரபுதேவாவின் அறைக்குள் வருகிறார்கள்.

வந்த இடத்தில் பிரபுதேவா இறந்து கிடப்பதைப் பார்த்து அங்கேயிருந்து தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொள்கிறார்கள். பிரபுதேவாவை வெளியில் தூக்கிச் சென்று எங்காவது வீசிவிட்டு தப்பியோடிவிடலாம் என்று திட்டம் தீட்டி ஹோட்டலைவிட்டு பிரபுதேவாவை வெளியில் கொண்டு வருகிறார்கள்.

வெளியில் இந்த அம்மணிகளின் திட்டம் பலித்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் கதைச் சுருக்கம்.

படத்தின் துவக்கத்திலேயே லாஜிக்கெல்லாம் பார்க்காமல் காமெடியாக மட்டுமே பார்க்கவும் என்று டைட்டில் போட்டுவிட்டதால், ரசிகர்களும் தங்களது மூளையைக் கழட்டி வைத்துவிட்டுத்தான் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ஒரு பான் இந்திய படமாக இதை உருவாக்க வேண்டும் என்று நினைத்து பல மொழி கலைஞர்களையும் இதில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

முதல் சில நிமிடங்கள் மட்டுமே வசனம் பேசி உயிருடன் நடித்திருக்கும் பிரபுதேவா மீதம் 75 சதவிகிதக் காட்சிகளில் செத்தப் பொணமாகவே நடித்திருக்கிறார். பாவம்.. எவ்ளோ கஷ்டப்பட்டாரோ.. தெரியவில்லை. பொணமாக-க் கிடப்பதற்கும் பெரிதும் மெனக்கெட வேண்டும். அதை பிரபுதேவா கச்சிதமாகச் செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் தான் இன்னமும் மாஸ்டர்தான் என்பதை நிரூபித்திருக்கிறார். மற்றபடி காமெடியெல்லாம் சுத்தமாக நஹி..!

கதையைத் துவக்கி வைக்கும் மடானோ செபாஸ்டியனுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடிப்பில்லை. தன்னுடைய அம்மா அபிராமி, தங்கைகளுடன் இணைந்து பொணத்தைத் தள்ளிக் கொண்டு போகும் காட்சிகளிலும், அதில் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகளிலும் இந்த மொத்தக் குடும்பமுமே சேர்ந்து ஒரு பரபரப்பைக் கூட்டியிருக்கிறார்கள். அபிராமி அவ்வப்போது அப்பாவியாய் தாங்களே மாட்டிக் கொள்ளும்விதமாய் பேசும் இடங்களில் லேசாய் புன்னகைக்க வைத்திருக்கிறார்.

முதலமைச்சராக நாஞ்சில் சம்பத், அடியாளாக தீனா, அமைச்சராக மதுசூதனன் ராவ், அமைச்சரின் கையாளாக ரோபோ சங்கர், அப்பாவாக ஒய்.ஜி.மகேந்திரன், இன்ஸ்பெக்டராக ஜான் விஜய், கமிஷனராக எம்.எஸ்.பாஸ்கர், கந்து வட்டிக்காரனாக சுரேஷ் சக்கரவர்த்தி, தாய் மாமனாக சிவா, பிரபுதேவாவின் நண்பி கன்னிகாவாக புஜிதா பொன்னாடா…,

இன்னும் ஒரு சில காட்சிகளில் வந்து தலையைக் காட்டியிருக்கும் ரெடின் கிங்ஸ்லி, கதிர், ஆடுகளம் நரேன், சாம்ஸ், ஜெ.எஸ்.ஆர்., ரகு பாபு, வினோத், ஆதவன் கடைசியாய் எனக்கும் நடிப்பு வருமாக்கும் என்று நினைத்து பாலக்காட்டு மேனேஜராக நடித்திருக்கும் சக்தி சிதம்பரம்.. மொத்தக் கதையையும் வயிற்றுப் போக்கோடு அவ்வப்போது கக்கூஸுக்குப் போய்ட்டுப், போய்ட்டு வந்து கதை கேட்கும் பாதிரியார் யோகிபாபு என்று அத்தனை பேரும் சளைக்காமல் வசனம் பேசி நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பை எடை போட்டு பார்க்க முடியாத அளவுக்குக் காட்சிகள் வேகம், வேகமாக நகர்வதுதான் இதற்குக் காரணம்..!

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திராவுக்கு நிச்சயமாய் ஒரு ஜே போடலாம். தென்காசி, கொடைக்கானல் என்று டூர் போன அத்தனை இடங்களையும் லட்டாய் படமாக்கி வைத்திருக்கிறார். பாடல் காட்சிகளில் நடன இயக்குநரோடு கூட்டணி சேர்ந்து படமாக்கியவிதம் அழகோ அழகு..!

பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம். அதிலும் போலீஸ்காரனைக் கட்டிக்கிட்டா பாடல் இரட்டை அர்த்தத்தைக் கொடுத்தாலும் அடுத்தாண்டு அனைத்து விழாக்களிலும் இந்தப் பாடலும், நடனமும்தான் இளசுகளை ஆட்டம் போட வைக்கப் போகிறது..!

இதோடு சேர்த்து மொத்தப் பாடல்களையும் எழுதி இன்றைய யூத்துகளின் குட் புக்கில் இடம் பிடித்திருக்கும் கவிஞர் மு.ஜெகன் கவிராஜூக்கு தமிழ்த் திரையுலகில் ஒரு நிரந்தர இடம் காத்துக் கொண்டிருக்கிறது.

நகைச்சுவைதான் பிரதானம் என்று சொல்லி காமெடியாகவே துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால் நமது துரதிருஷ்டம் பாருங்கள். ஒரு காட்சியில்கூட சிரிப்பே வரவில்லை.

கதையும், திரைக்கதையும் நகைச்சுவைக்கு பிரதானமாக ஸ்கோப் உள்ளதாக இருந்தாலும் நகைச்சுவையை வெளிப்படுத்தும்படியான இயக்கம் இல்லாததால் அத்தனையும் விழலுக்கு இழைத்த நீராகிவிட்டது. ஒரேயொரு ஆறுதல்.. தலைவலி வராமல் கடைசிவரைக்கும் திடுக், திடுக் திருப்பங்களுடன் படத்தைப் பார்க்க வைத்திருப்பதுதான்..!

லாஜிக் பார்க்காமல் படத்தைப் பாருங்கள் என்று இயக்குநர் துவக்கத்திலேயே சொல்லிவிட்டதால் நாமும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் கடைசிவரையிலும் பாப்கார்னை சாப்பிட்டபடியே எந்த சேதாரமும் இல்லாமல் பார்த்துவிட்டு வரலாம்..!

ஜாலியோ ஜிம்கானா – ஒரு ஜாலி டிரிப்தான்..!

RATING : 3 / 5

Our Score