வித்தியாசமான கதை களங்கள் கொண்ட திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய தயாராக இருக்கின்றது, அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி இருக்கும் ‘பீச்சாங்கை’ திரைப்படம்.
இந்த படத்தை ‘கர்ஸா எண்ட்டெர்டைன்மெண்ட்’ சார்பில் ஆர்.எஸ். கார்த்திக் மற்றும் ‘பி.ஜி.மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் பி.ஜி.முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.
புதுமுகங்கள் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த ‘பீச்சாங்கை’ படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, பையா பொன்முடி, ஜோசப், கிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி ஒளிப்பதிவாளர் கெளதம் ராஜேந்திரன்(அறிமுகம்), இசையமைப்பாளர் பாலமுரளி பாலு(அறிமுகம்) மற்றும் படத் தொகுப்பாளர் ஜோமின் மேதில்(அறிமுகம்) என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த ‘பீச்சாங்கை’ படத்தில் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் படத்தின் டிரெயிலர் திரையிடப்பட்டது. பிளேடு பக்கிரி என்னும் ஜேப்படி திருடர்கள் பற்றிய கதைக் களன் என்பது புரிந்தது. ஹீரோ, நண்பன், இவர்களுடன் ஒரு பெண்ணும் திருட்டுக் கும்பலில் இருக்கிறார். பேருந்தில் பார்க்கும் ஹீரோயினை பார்த்தவுடன் லவ்வாகிறார் ஹீரோ. ஹீரோ ்அடிக்கும் ஒரு பிக்பாக்கெட் பர்ஸினால் ஏற்படும் விளைவுகள்தான் படத்தின் கதை என்பதாகத் தெரிகிறது.
“அறிமுக கலைஞர்கள் திரையுலகில் வெற்றி காண்பது என்பது சற்று சவாலான காரியம்தான். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தரமான படங்களுக்கும், திறமையான கலைஞர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு இருக்கின்றது. அந்த வகையில் அவர்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்து, எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக் கூடிய திரைப்படமாக எங்களின் பீச்சாங்கை படம் இருக்கும்..” என்று நம்பிக்கையுடன் கூறினார் ‘பீச்சாங்கை’ படத்தின் கதாநாயகனான கார்த்திக்.
வாழ்த்திப் பேசி ‘உறுமீன்’ படத்தின் இயக்குநர் சக்திவேல் பேசும்போது, “தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர் கவுன்சிலில் அதைச் செய்யப் போகிறோம்.. இதைச் செய்யப் போகிறோம் என்கிறார்கள். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதுவரையிலும் சாட்டிலைட் உரிமம் விற்காமல் இருக்கும் திரைப்படங்களுக்கு உதவி செய்து உரிமத்தை விற்பனை செய்ய உதவுங்கள்.
இதுவரையிலும் விற்காத படங்கள் ஆயிரக்கணக்கில் தேங்கியுள்ளன. அதை விற்றால் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் கொஞ்சமாவது பயனடைவார்கள்.
இதேபோல் சென்சார் பிரச்சனையையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. ‘மெட்ரோ’ என்ற படம் சென்சாரில் முதலில் ‘ஏ’ சர்பிகேட்டுதான் வாங்கியது. பின்பு ரீவைசிங் கமிட்டிக்கு அப்பீல் செய்த போது ‘U / A’ கிடைத்தது. இதன் பின்புதான் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிம்ம் விற்பனையானது. இது போன்ற சிக்கலில் பல படங்களில் இருக்கின்றன.
நமக்கு இருக்குற எத்தனையோ பிரச்சினைகள்ல இப்போது சென்சாரும் ஒரு பெரிய பிரச்சினையா மாறியிருக்கு. 1950-களில் இயற்றப்பட்ட சட்டத்தையே இப்போதும் பின்பற்றுகிறார்கள். 1950-களில் இந்தியாவின் ஜனத் தொகை 30 கோடி. ஆனால் இன்றைக்கு 120 கோடி. அன்றைக்கு 30 கோடி பேருக்காக போடப்பட்ட சட்டத்தையே இன்றைக்கு இருக்கும் 120 கோடி பேருக்குமாக பின்பற்றுகிறார்கள். இந்தச் சட்டத் திட்டங்களை மொதல்ல மாத்தணும்.
விவசாயிங்களை அப்புறம் காப்பாத்தலாம். அவங்களை காப்பாத்த நிறைய பேர் இருக்காங்க. மொதல்ல நம்மளை நாம காப்பாத்திக்கணும். சென்சார் போர்டு சட்டத் திட்டங்களை மாற்றுவதற்கு மத்திய அமைச்சர்களை சந்திச்சு பேசணும். அப்போதுதான் சின்ன பட்ஜெட் படங்களுக்கு மானியம் கிடைக்கும். சினிமாவும் வாழும். இந்தக் கோரிக்கைகளை தயாரிப்பாளர் சங்கத்தில் புதிதாக பொறுப்புக்கு வந்தவர்கள் செய்யணும்..” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “இயக்குநர் சக்திவேல் பேசியதில் தப்பேயில்லை. நியாயமாத்தான் பேசியிருக்கார். இன்றைக்கு ஒவ்வொரு வாரமும் 5, 7 படங்கள் வெளியாகின்றன. ஆனால் இதில் ஒரு படம்கூட போட்ட காசை எடுப்பதில்லை. ஏதாவது ஒரு சில பெரிய பட்ஜெட் படங்கள்தான் வசூலைக் குவிக்கின்றன. இந்த வருடத்தில் இதுவரையிலும் 51 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் வெறும் 3 படங்கள்தான் வெற்றி பெற்றுள்ளன.
தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றதற்கு காரணமே ஒரே நாளில் நிறைய படங்கள் வெளியாவதுதான். ஒரு நாளில் 3 படங்கள் ரிலீஸானால் ஓகேதான். ஆனால் அதே நாளில் 7 படங்கள் வெளியானால் தியேட்டர்கள் எப்படி கிடைக்கும்..? இதுதான் படங்களின் தோல்விக்குக் காரணமாகிறது. மக்களால் 7 படங்களையும் பார்க்க முடியாது. ஆனாலும் சில நல்ல படங்களுக்கு மக்கள் என்றென்றும் ஆதரவு கொடுத்து தூக்கிவிட்டிருக்கிறார்கள். துருவங்கள் 16, கடுகு, மாநகரம் போன்ற படங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவை மறுக்க முடியாது. இவைகள் மக்களால் ரசிக்கும்படியான கதைகளைக் கொண்டிருந்தன. மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் கதை சரியில்லை என்றால் மக்கள் அவைகளுக்கு ஆதரவு கொடுப்பதில்லை. ஒரே நாளில் பல படங்களை வெளியிடாமல் குறைந்த படங்களை வெளியிடுங்கள். அதுதான் திரையுலகத்திற்கு நல்லது.
இந்த 2017-ம் ஆண்டு இளம் திறமையான கலைஞர்களுக்கான ஆண்டு. அறிமுக இயக்குநர்களால் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்களின் உள்ளங்களை கவரந்தது மட்டுமின்றி, சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் அதிகளவில் பெற்று இருக்கின்றது.
நிச்சயமாக அந்த படங்களின் வரிசையில் இந்த ‘பீச்சாங்கை’ படமும் இடம் பெறும். கதாநாயகனாக அறிமுகமாகும் கார்த்திக்குக்கும், இயக்குநராக அறிமுகமாகும் அஷோக்கிற்கும் இந்த பீச்சாங்கை சிறந்ததொரு திரைப்படமாக இருக்கும்” என்று உற்சாகமாக வாழ்த்தினார் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கோவிந்த்.













