தென்னிந்திய திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான ‘சிலந்தி’ படத்தை எழுதி, இயக்கி, வெற்றி பெற்ற இயக்குநர் ஆதிராஜன், தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனம் மூலம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘சிலந்தி-2.’
கை நிறைய சம்பாதிக்கும் வேகத்தில் நாகரீக மோகத்தில் நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் காற்றில் பறக்கவிட்டு.. சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறி சிறகடிக்கத் துடிக்கும் பெண்களால் ஏற்படும் விபரீத விளைவுகளும் அதனால் அந்த பெண்களுக்கு உருவாகும் ஆபத்துக்களையும் மையப்படுத்தி பரபரப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ரசனையான காதல்.. நாகரீகமான நகைச்சுவை.. அதிரடி சண்டைக் காட்சிகளுடன்.. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் இந்த த்ரில்லர் படத்தில் விஜய ராகவேந்திரா கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவர். நட்சத்திர குடும்ப வாரிசு.
அர்ஜுனுடன் ‘வல்லக்கோட்டை’, கரனுடன் ‘கனகவேல் காக்க’, சேரனுடன் ‘முரண்’, ‘அட்டக்கத்தி’ தினேஷுடன் ‘வாராயோ வெண்ணிலவே’. நானியுடன் ‘ஜமீன்’ உட்பட தமிழ். தெலுங்கு. மலையாளம். கன்னடம் மொழிகளில் 30 படங்களில் நடித்திருக்கும் ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.. ஒரு ஸ்பெஷலான குத்துப் பாடலுக்கு ‘சிறுத்தை’ புகழ் மேக்னா நாயுடு செமத்தியாக ஆட்டம் போட்டிருக்கிறார். இவர்களுடன் ஜஸ்வர்யா விஷால். ஹெக்டே சத்யஜித். ரங்கா உட்பட பலர் நடித்துள்ளனர்.
இசை – பெ.கார்த்திக், ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ், படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த்-வி.ஜே.சாபு, பாடல்கள் – சினேகன், நெல்லை பாரதி, ஆதிராஜன், நடனம் – ராதிகா, கலைக்குமார், சண்டை பயிற்சி – மாஸ் மாதா.
படம் பற்றி இயக்குநர் ஆதிராஜன் பேசியபோது, “இந்தப் படத்தின் பெங்களூர், கோவா, மைசூர் சாமுண்டி ஹில்ஸ் உட்பட பல இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.. தமிழ், கன்னட மொழிகளில் உருவான இந்தப் படத்திற்கு முதலில் தமிழில் தமிழில் ’அதர்வனம்’ என்றும் ‘கன்னடத்தில்’ ரணதந்திரா என்றும் பெயர் வைத்திருந்தோம்.
இறுதிக் கட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது பலரும் ’அதர்வனம்’ என்ற தலைப்பு அவ்வளவாக புரியவில்லை எனவும், ’சிலந்தி பார்ட் 2’ என்பதே இந்தப் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று சொன்னதால் தற்போது ‘சிலந்தி-2’ என்ற பெயர் மாற்றிவிட்டோம். தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது…” என்றார்.