full screen background image

ஜூலியும் 4 பேரும் – சினிமா விமர்சனம்

ஜூலியும் 4 பேரும் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை Reach Media Solutions மற்றும் Camera Fox Pictures மற்றும் Kaaviya Cinemas ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்தப் படத்தில் விஜய் டி.வி. புகழ் அமுதவாணன் மற்றும் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜம்முவை சேர்ந்த அல்யா மானஸா என்பவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். மேலும், ஆர்.வி.சதீஷ், யோகானந்த், யுதீஷ் சிவன், பில்லி முரளி, மகாநதி சங்கர், மாறன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ரோவின் பாஸ்கர், இசை – ரகு ஸ்ரவன்குமார், படத் தொகுப்பு – ஷரண் சண்முகம், கலை – சிட்டி பாபு, நடனம் – அருண்குமார், பி.ஆர்.ஓ. – நிகில் முருகன், எழுத்து, இயக்கம் – சதீஷ் ஆர்.வி.

தற்போது சர்வதேச அளவில் நடந்து வரும் நாய் கடத்தலைப் பற்றிய படம் இது.  அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட  Beagle  வகையை சேர்ந்த ‘ஜூலி’ என்ற நாய்தான் இந்தப் படத்தின் ஹீரோ.

இடது காதில் மூன்று மச்சங்களை கொண்ட நாய் ‘அதிர்ஷ்டக்கார நாய்’ என்றும் அதனை தனதாக்கிக் கொண்டால் அதிரஷ்ட தேவதை வீட்டிற்கு வருகை தந்துள்ளார் என்று அர்த்தம். அதன் பின்பு என்ன தொழில் துவங்கினாலும் அது செழித்தோங்கும் என்று உறுதியாய் நம்புகிறார் ஹீரோயினான அல்யாவின் அப்பாவா தொழிலதிபர்.

இதற்காக சர்வதே அளவில் நாய்களை கடத்தும் கும்பலை அணுகுகிறார். அவருக்காக அவர் எதிர்பார்க்கும் அந்த அதிர்ஷ்டக்கார நாய், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருப்பதை அறிந்து அந்த நாயை வளர்க்கும் பெண்மணியை கொலை செய்துவிட்டு நாயை பத்திரமாக சென்னைக்கு அழைத்து வருகிறார்கள் வில்லன்கள் டீம். இதற்காக வில்லன்களுக்கு ஒரு கோடி ரூபாயை சன்மானமாக கொடுக்கிறார் ஹீரோயினின் அப்பா.

ஜூலி நாய் வீட்டுக்கு வந்த நேரம் அதே அமெரிக்காவில் இருக்கும் ஹீரோயினின் அப்பாவுக்கு மிகப் பெரிய பிராஜெக்ட் கிடைக்கிறது. எல்லாம் நாய் வந்த நேரம் என்று சந்தோஷப்படுகிறார்.

இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கையில், வெவ்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் அமுதவாணன், சதீஷ், விஜய் ஆகிய மூன்று பேரும் உண்மைச் செல்வன் என்னும் டுபாக்கூர் அரசியல்வாதியிடம் பணத்தைக் கொடுத்து ஏமாறுகிறார்கள். அந்த நேரத்தில் அவர்களை அழைத்துக் கொண்டு சுற்றும் ஆட்டோ ஓட்டுனரான ஜார்ஜ் இவர்களுடன் நட்பாகிறார். அவர்களை தனது அறைக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கிறார்.

இளைஞர்கள் மூவரும் தாங்கள் இழந்த பணத்தை எப்படியாவது சம்பாதித்துவிட வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். ஆனால் எப்படி என்று தெரியாமல் இருக்கும்போது ஹீரோயினின் வீட்டு வாசல் அருகே ஆட்டோவை நிறுத்தி தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஜூலி நாய் எதையோ சாப்பிட்டு மயங்கி விழுக.. சப்தம் கேட்டு நால்வரும் ஹீரோயினின் வீட்டுக்குள் ஓடுகிறார்கள். அங்கே சுருண்டு கிடக்கும் ஜூலியை என்னவோ செய்து மயக்கம் தெளிய வைக்கிறார்கள். இதனால் ஆச்சரியப்படும் ஹீரோயின் இவர்களுக்கு 10 லட்சம் ரூபாயை பரிசாக கொடுக்கும்படி சொல்கிறாள். ஆனால் அவளது மேனேஜரோ பத்தாயிரம் ரூபாயை கொடுத்து வெளியில் அனுப்புகிறார்.

இந்த நேரத்தில் ஜூலியை கொண்டு வந்த வில்லன்கள் டீமே ஜூலியை கடத்த பிளான் செய்கிறது. அப்படி கடத்தி ஹீரோயினின் அப்பாவிடம் அதிக தொகை கேட்டு பணம் பறிக்க பிளான் செய்கிறது. பணமில்லாமல் ஊருக்குத் திரும்ப மனசில்லாமல் இருக்கும் இந்த நால்வருக்கும் திடீரென்று ஒரு ஐடியா பளிச்சிடுகிறது.

நாய்க்கு வைத்தியம் பார்த்ததற்கே பத்தாயிரம் ரூபாய் கிடைக்கிறது என்றால் அதனைக் கடத்திச் சென்றால் இன்னும் அதிகமான பணம் கிடைக்குமே என்று நினைக்கிறார்கள் ஹீரோக்கள் டீம். இதனால் ஜூலியை கடத்த இவர்களும் திட்டம் தீட்டுகிறார்கள்.

இன்னொரு பக்கம் ஒரு மிகப் பெரிய தொழிலதிபரான ஜாக்குவார் தங்கத்தின் மகளான ஜூலி தனது காதலுடன் ஊரைவிட்டு ஓடிப் போகிறார். தனது மகளை தேடிக் கண்டுபிடிக்கும்படி ஜாக்குவார் தங்கம் போலீஸை உசுப்பிவிட.. போலீஸ் மும்முரமாக காதலர்களைத் தேடி வருகிறது.

இந்த நேரத்தில் ஜூலி நிஜமாகவே அந்த வீட்டில் இருந்து காணாமல் போக.. வில்லன் கும்பலும், ஹீரோ கும்பல் இரண்டுமே அந்த நாயைத் தேடி அலைகின்றன. ‘ஜூலி’ என்கிற பெயரை இவர்கள் அடிக்கடி உச்சரித்த்தால் ஜாக்குவார் தங்கத்தின் மகளை இவர்கள்தான் கடத்தி வைத்திருக்கிறார்கள் என்று போலீஸ் தவறாக எண்ணி இவர்களை பிடித்து விசாரிக்க..

இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் மிச்சம் மீதிக் கதை..!

கொஞ்சம் அசாத்தியமான பொறுமையிருந்தால் மட்டுமே இந்தப் படத்தை முழுமையாக பார்க்க முடியும். அந்த அளவுக்கு அப்ரண்டிஸ் இயக்குநர் இயக்கியிருப்பதை போலத்தான் முழு படமும் இருக்கிறது.

இயக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்டிருக்கிறார் இயக்குநர் சதீஷ் ஆர்.வி. நல்லதொரு இயக்கமே இல்லாதபோது, எங்கேயிருந்து காட்சிகள் சுவையாக இருக்கும்..? படத்தில் நடித்த கதாபாத்திரங்களான அமுதவாணன், சதீஷ் ஆர்.வி., யோகானந்த் மூவரிடமிருந்து நடிப்பு வரவழைக்கப்படவே இல்லை. ஜார்ஜ் விஜய்யின் சில, பல ஆக்சன்கள்கூட போரடிக்க வைக்கிறது. ஹீரோயினுக்கு அதிகம் வேலையில்லை என்பதால் அவரையும் ஒரு பொருட்டாகவே கருத முடியவில்லை.

படத்தின் முதல் காட்சியே மிகப் பெரிய பூச்சுற்றல். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு பெண்மணியை கொலை செய்துவிட்டு அந்த வீட்டு நாயை இந்தியாவுக்கு கடத்தி வருகிறார்களாம்..!

அமெரிக்க காட்சிகள்.. தொழிலதிபர் வெளிநாட்டில் இருக்கும் காட்சிகளையெல்லாம் சிக்கனம் கருதி இங்கேயே உள்ளூரிலேயே எடுத்திருப்பது தெள்ளத் தெளிவாக தெரிவதுதான் சோகமான விஷயம். ‘காமெடி’ என்ற பெயரில் போலீஸ் ஸ்டேஷனில் இவர்கள் அடிக்கும் காட்சிகள் சகிக்கவில்லை.

ஜூலி என்ற அந்த அதிர்ஷ்ட நாயால் ஹீரோயினுக்கு வெற்றி கிடைப்பது. அவளது அப்பாவிற்கு ஆர்டர் கிடைப்பது.. ஹீரோ மற்றும் நண்பர்கள் கைக்கு வந்ததும் கோடிக்கணக்கில் பணம் கிடைப்பது.. அதே நாய் போலீஸ் அதிகாரியின் வாகனத்தில் இருக்கும்போது, அந்த அதிகாரிக்கு பிரமோஷன் கிடைப்பது என்று இந்த அதிர்ஷ்ட நாய் யாரிடம் இருக்கிறதோ, அவர்களது வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை நம்பும்படியாக சொல்லியிருக்கும் காட்சிகள் மட்டுமே படத்தில் சொல்லும்படியான காட்சிகள்.

ஒளிப்பதிவாளர் ஏதோ தன்னால் முயன்ற அளவுக்கு படத்துக்காக உழைத்திருக்கிறார். வில்லன் கோஷ்டியினரிடம் ஹீரோ கோஷ்டி மாட்டிக் கொண்டு முழிக்கின்ற காட்சியில் அப்படியொரு இருட்டு பேக்கிரவுண்டில் படமாக்கி நமது கண்களையும் பதம் பார்த்திருக்கிறார். ஏன் ஸார் இப்படி..?

இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம் என்றாலும் பின்னணி இசை என்னும் கொடுமையை அனுபவிக்க நேர்ந்ததையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

படத் தொகுப்பாளர் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால், திட்டுபவர்கள் கொஞ்சம் சீக்கிரமாக திட்டிவிட்டு வெளியேறியிருப்பார்கள்..!

இந்தப் படத்தின் இயக்குநர் கோபித்துக் கொள்ளாமல், இன்னொரு நல்ல இயக்குநரிடம் உதவியாளராகச் சேர்ந்து 3, 4 படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு பின்பு அடுத்தப் படத்தை இயக்குவது அவருக்கும் நல்லது.. அவருக்கு வாய்ப்பளிக்கப் போகும் தயாரிப்பாளருக்கும் நல்லது.. தமிழ்ச் சினிமாவுக்கும் நல்லது..!

Our Score