full screen background image

இசைஞானி இளையராஜாவின் மகள், பாடகி பவதாரணி காலமானார்

இசைஞானி இளையராஜாவின் மகள், பாடகி பவதாரணி காலமானார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் இன்று மாலை காலமானார்.

47 வயதான பவதாரணி கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இலங்கை சென்றிருந்த பவதாரணி கொழும்புவில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு உயிரிழந்தார்.

மனதை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரரான இவர் பாடிய பல பாடல்கள் தற்போதுவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன.

இவர் பாடிய பாடலை கேட்கும்போதே இது பவதாரிணி பாடிய பாடல்தான் என ரசிகர்கள் உடனே கண்டுபிடித்துவிடும் அளவிற்கு ஒரு தனித்துவமான குரல் வளத்தை கொண்டவர்.

பவதாரிணி கடந்த 1984-ம் ஆண்டு வெளியான ‘மை டியர் குட்டி சாத்தான்’ படத்தின் மூலம் பின்னணி பாடகியாக திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு ‘ராசய்யா’ படத்தில் இடம் பெற்ற ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல் இவருக்கு பெரும் புகழை தேடி தந்தது.

அதன் பிறகு ‘அலெக்ஸாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘கருவேலம் பூக்கள்’, ‘காதலுக்கு மரியாதை’ போன்ற படங்களில் இவர் பாடிய பாடல்கள் தற்போதுவரையிலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

2000-ம் ஆண்டு வெளியான ‘பாரதி’ படத்தில் இடம் பெற்ற ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்காக இவருக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

‘அழகி’ படத்தில் ‘ஒளியிலே தெரிவது தேவதையா’, ‘பிரண்ட்ஸ்’ படத்தில் ‘தென்றல் வரும் வழியை’,  ‘தாமிரபரணி’ படத்தில் ‘தாலியே தேவையில்ல’, ‘அனேகன்’ படத்தில் ‘ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி’, ‘மாநாடு’ படத்தில் ‘மெகர்சைலா’ பாடல்கள் இவர் பாடி புகழ் பெற்ற பாடல்களாகும்.

30-க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ள இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

நடிகை ரேவதி இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘மித்ரா மை பிரண்ட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் கடைசியாக 2019-ம் ஆண்டு வெளியான மாய நதி’ என்ற தமிழ் படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

இப்படி பல்வேறு மென்மையான பாடல்களை பாடி தனது காந்த குரலால் ரசிகர்களை கவர்ந்த பவதாரிணி கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை காலமானார்.

அவரின் உடல் நாளை மாலை சென்னைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

Our Score