‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’, ‘அன்பிற்கினியாள்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் கோகுல். இவர் இப்போது இயக்கியிருக்கும் படம்தான் இந்த ‘சிங்கப்பூர் சலூன்’.
ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்திருக்கிறார். எல்.கே.ஜி.(2019) மற்றும் மூக்குத்தி அம்மன் (2020) படங்களுக்குப் பிறகு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் மூன்றாவது படம் இந்த ‘சிங்கப்பூர் சலூன்’.
மேலும் இப்படத்தில் ஆன் ஷீடல், சத்யராஜ், லால், ரோபோ ஷங்கர், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், சின்னி ஜெயந்த், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – கோகுல், தயாரிப்பு நிறுவனம் – வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல், தயாரிப்பாளர் – ஐசரி கே.கணேஷ், ஒளிப்பதிவு – எம்.சுகுமார், இசை – விவேக், மெர்வின், பின்னணி இசை – ஜாவேத் ரியாஸ், படத்தொகுப்பு – ஆர்.கே.செல்வா, கலை இயக்கம் – எஸ்.ஜெயச்சந்திரன், நடன இயக்கம் – பூபதி, உடை வடிவமைப்பு – திவ்யா நாகராஜன், சண்டை இயக்கம் – பிரபு, தயாரிப்பு நிர்வாகம் – என்.விக்கி, மகாகாளி சிவா, வி பாலமுருகன், பாடல்கள் – உமா தேவி, அறிவு, சிறப்பு ஒப்பனை – ரோஷன், ஒப்பனை – பிரகாஷ், புகைப்படங்கள் – ராஜ், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி.ஒன்.
சலூன் கடை நடத்துவதில் என்ன கெளரவக் குறைச்சல்..?
சலூன் கடைகளை இந்த சாதிக்காரர்கள் மட்டும்தான் நடத்த வேண்டும் என்று சட்டமும், விதிமுறைகளும் இருக்கா..?
ஒருவனின் மனதுக்குப் பிடித்தத் தொழிலை செய்வதில் என்ன தவறு..?
தொழிலில் நல்ல தொழில்.. கெட்ட தொழில்.. கேவலமான தொழில் என்ற பாகுபாடு இருக்கிறதா.. என்ன..?
திறமைசாலிகள் கோபுரத்தில் மட்டுமல்ல.. தெருவோரத்தில் இருந்தாலும் கொண்டாடப்படுவார்களா..? மாட்டார்களா..?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கொடுப்பதுதான் இந்த ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம்!
சின்ன வயதிலிருந்தே ‘சாச்சா’ என்றழைக்கப்படும் லாலின் ‘சிங்கப்பூர் சலூன்’ கடையில் அவரது முடி வெட்டும் தொழிலையும், ஸ்டைலையும் பார்த்து சொக்கிப் போயிருக்கும் பாலாஜிக்கு, தான் பெரியவனானவதும் இதே போன்று சலூன் கடை வைக்க வேண்டும் என்ற ஆசை வளர்கிறது.
“முதலில் படிப்பு.. பின்பு ஆசைப்பட்ட தொழிலை செய்யலாம்” என்ற தனது அப்பாவின் ஆலோசனைப்படி எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷனில் பி.இ. முடித்துவிட்டு, தனது லட்சியக் கனவான சலூன் கடையை நடத்தத் திட்டமிடுகிறார் பாலாஜி.
இடையில் மீனாட்சி சவுத்ரியுடன் காதலாகி, அது திருமணத்தில் போய் முடிகிறது. மாமனார் சத்யராஜ் பெரும் கோடீஸ்வரனாக இருந்தும் கஞ்சனாக இருக்கிறார். தனது சகலை ரோபோ சங்கருடன் இணைந்து மாமனாரிடம் பணம் கேட்கிறார் பாலாஜி. சத்யராஜோ தர மறுக்கிறார்.
ஆனால் ஒரு நாள், மது போதையில் சத்யராஜிடமிருந்து 3 கோடி ரூபாயை சுடும் பாலாஜி அண்ட் கோ., அதை வைத்து ஒரு பிளாட் வீடும், ‘சிங்கப்பூர் சலூன்’ என்ற பெயரில் ஒரு நவீனமான சலூன் கடையையும் அமைக்கிறார்கள்.
கடை நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சலூன் கடைக்குப் பின்புறம் கட்டிக் கொண்டிருந்த ஒரு புதிய அடுக்கு மாடி குடியிருப்பு, ஒரு பெரும் மழையினால் இடிந்து விழுகிறது. இதைத் தொடர்ந்து சலூன் கடைக்கு முன்புறமாகவும், சுற்றியும் குடிசை வாழ் மக்கள் புதிதாக குடிசை போட்டு அமர.. கடைக்கு கஸ்டமர்கள் குறைகின்றனர்.
போதாக்குறைக்கு அந்தக் கடை இருக்குமிடமே ஏரி என்பதால் இடத்தைக் காலி செய்யும்படி அரசு தரப்பிடமிருந்து நோட்டீஸும் வர.. திகைத்துப் போய் நிற்கிறார் பாலாஜி. இறுதியில் என்னாகிறது என்பதுதான் இந்த ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் திரைக்கதை.
பாலாஜிக்கு ஏற்றக் கதாப்பாத்திரம். எப்போதும் டைமிங் ரைம்ஸ் கணக்கில் டயலாக்கை வீசி சிரிக்க வைக்கும் பாலாஜிக்கு, இந்தப் படம் முற்றிலும் மாறுபட்டது. படம் நெடுகிலும் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்திலேயே வலம் வந்திருக்கிறார் பாலாஜி. சிரித்த முகத்துடன் பாலாஜியை பார்ப்பது இந்தப் படத்தில் அரிதுதான்.
முதல் காட்சியிலேயே தற்கொலைக்குத் துணிந்த நிலையில் அறிமுகமாகும் பாலாஜி படம் முழுவதும் தனது சீரியஸ் நடிப்பையே காண்பித்திருக்கிறார். முதிர்ச்சியான குணாதிசயம் கொண்டவராக நடித்திருக்கும் பாலாஜியின் இந்த வகை நடிப்பு நிச்சயம் அவருக்கே புதியதாகத்தான் இருக்கும். பாராட்டுக்கள்.
பாலாஜியின் நகைச்சுவை நடிப்பை இந்தப் படத்தில் சத்யராஜ் கையகப்படுத்திக் கொண்டுள்ளார். முதல் பாதி முழுவதும் கலகலப்பாக செல்கிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் சத்யராஜ்தான்.
தான் ஒரு கஞ்சன் என்பதை மறைமுகமாக அவர் விவரிக்கும்விதமும், இன்னும் “கொஞ்ச நாள்ல சாகப் போறேன்” என்று சொல்லியே அனைத்தையும் சாப்பிட்டு ஏப்பம்விடும் தோரணையும் கலகலக்க வைக்கிறது.
ஓசியில் பீர் கிடைக்கிறதே என்றெண்ணி கடை மாறி வேறொரு கடைக்குப் போய், ஓவர் லோடாகி, மப்பாகி செக்கில் 3 கோடியையும் நிரப்பிக் கொடுத்து கையெழுத்து போடும் காட்சியில் தியேட்டரே அல்லலோகப்படுகிறது. இவருக்கு சற்றும் குறைவில்லாமல் காமெடியில் கை கொடுத்திருக்கிறார் ரோபோ சங்கர்.
“இளிச்சவாய மருமகனா நானு..?” என்று அடிக்கடி பொங்கித் தீர்க்கும் காட்சியிலும், சத்யராஜிடமிருந்து ஏமாற்றி செக்கை வாங்கும்போதும் அதகளம் செய்திருக்கிறார் ரோபோ சங்கர். பாராட்டுக்கள்..
படத்துக்கு ஹீரோயின் வேண்டுமே என்பதற்காக செட் பிராப்பர்டியை போல வந்து போகும் மீனாட்சி சவுத்ரிக்கு, இந்தப் படத்தில் மிகப் பெரிய ரோல் இல்லை என்றாலும் வரும் காட்சிகளில் நமது கவனத்தை ஈர்க்கிறார். இவரைப் போலவே ஒரு சின்னக் கதாப்பாத்திரம் என்றாலும் தனது முக அழகால் வசீகரிக்கிறார் இரண்டாவது ஹீரோயினான ஆன் ஷித்தல்.
சலூன் கடை ‘சாச்சா’வான லால் தனது உடல் மொழியாலேயே நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மகனைப் புரிந்து கொண்ட அப்பாவாக தலைவாசல் விஜய் பல இளைஞர்களை பொறாமைப்பட வைத்திருக்கிறார்.
கோடீஸ்வர சலூன் கடை உரிமையாளரான ஜான் விஜய் தனது ஸ்டைலான நடை, உடை, பாவனை, பேச்சு என்று அனைத்திலுமே கவர்ந்திழுக்கிறார்.
கேமியோ ரோல் என்றாலும் ஸ்டைலிஷ்ஷாக வந்து தலையைக் காட்டி இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான ஒரு விஷயத்தை மிக எளிமையான உதாரணம் மூலமாகச் சொல்லிவிட்டுப் போகிறார் அரவிந்த்சாமி. ஹாட்ஸ் அப் ஸார்..!
மேலும் சிறு வயது முதலே நண்பனாக இருந்து வரும் கிஷான் தாஸ் மற்றும் அவரது குடும்பப் பின்னணி, அவரது மனைவியின் தாராள குணம் என்று திரைக்கதைக்காக அமைக்கப்பட்டிருந்த இந்தக் குடும்பமும் சிறப்பாக நடித்துள்ளது.
சின்ன வயது பாலாஜி, கிஷான் தாஸாக நடித்த சிறுவர்களின் நடிப்பு அபாரம். சுன்னத் செய்வதை ஏதோ செய்வதாக நினைத்து சாச்சா மீது கோபப்படும் சிறுவன் பாலாஜி கொஞ்சம், கொஞ்சமாக சாச்சாவின் கத்திரிக்கோலை பிடிக்கும் ஸ்டைலில் சொக்கிப் போய் பிரமித்து அதில் ஆழ்ந்துபோய் நிற்பதை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தில் சிறப்பாக உள்ளது. கிராமத்து வாழ்க்கையை அழகுற படம் பிடித்து, பின்பு சிங்கப்பூர் சலூன் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் கடைசிவரையிலும் ரம்மியமாகக் காண்பித்து நமது கண்களுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.
சிங்கப்பூர் சலூன் கடையை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குநர் ஜெயச்சந்திரன். ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை படத்தின் தன்மையை மாற்றாமல் ரசிகர்களின் மூடுக்கேற்ப பயணித்துள்ளது. விவேக் – மெர்வினின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால், முணுமுணுக்க வைக்கவில்லை. படத்தொகுப்பாளர் செல்வகுமாரின் வெட்டி, ஒட்டுதல் பணியும் சிறப்புதான்.
ஒரு சலூன் கடைக்கு 3 கோடி ரூபாயை செலவழிக்கலாமா என்ற எளிய மனிதரின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் அரவிந்த்சாமி மூலமாக சொன்ன இயக்குநர் கோகுல், இதை சத்யராஜ் மூலமாகவே வெளிப்படையாக சொல்லியிருக்கலாம்தான்.
3 கோடி ரூபாய் செலவில் இப்படி ஆடம்பரமான சலூன் கடை தேவையா என்பதை இயக்குநர் எங்கேயாவது கேட்டிருந்தாலோ.. அல்லது சொல்லியிருந்தாலோ.. இந்தப் படத்தை நிச்சயமாக ஒரு முன்னுதாரணப் படமாக சொல்லலாம்.
எந்த சாதிக்காரர்களும் சலூன் கடையை வைக்கலாம். எந்த வேலை கிடைத்தாலும் செய்யலாம். சலூன் கடையில் வேலை செய்வது மரியாதைக் குறைவான வேலையில்லை என்பதை 1980-களில் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தின் மூலமாக இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இதையே வார்த்தைகளை மாற்றிப் போட்டு சொல்ல வந்த இயக்குநர், ஏரிகளில் வீடு கட்டுவது அயோக்கியத்தனம்.. குடிசை வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை அரசுகள் கண்டு கொள்ளாதது தவறு.. பறவைகளை புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது.. என்றெல்லாம் பல விஷயங்களையும் பேசியதால் எந்தக் கோணத்தில் இந்தப் படத்தை அணுகுவது என்ற புரியாத நிலைமைக்கு நம்மை முட்டுச் சந்தில் கொண்டு போய் நிறுத்திவிட்டார்.
இதையெல்லாம் சொன்ன இயக்குநர் கோகுல், அப்படியே “குடி பழக்கமும் தவறு” என்பதையும் சொல்லியிருந்தால், மிக நேர்மையான இயக்குநர் என்று சொல்லியிருக்கலாம்.! ஆனால் இயக்குநர் கோகுல் அதை மட்டும் சொல்லாமல் தப்பியிருக்கிறார்.
உலகம் ஒருவரைப் பார்க்கும்விதத்தை ஒரு சிகையலங்கார நிபுணரால் நிச்சயமாக மாற்ற முடியும் என்ற ஒரு கருத்தை மட்டும் அழுத்தமாக இந்தப் படம் சொல்லியிருப்பதால் அது ஒன்றுக்காக மட்டும் இந்தப் படத்தையும், இயக்குநரையும் நாம் பாராட்டுவோம்..!
RATING : 3.5 / 5