‘ஒத்த செருப்பு சைஸ்-7’ படத்தைத் தொடர்ந்து, நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது அடுத்த படத்திலும் வித்தியாசமான முயற்சி ஒன்றைச் செய்யவுள்ளார்.
‘ஒத்த செருப்பு’ படம் முழுவதும் ‘மாசிலாமணி’ என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள். பல்வேறு விருதுகளையும் இந்தப் படம் வென்றது.
ஆஸ்கர் விருதுக்காக இந்தியாவிலிருந்து இந்தப் படத்தைத் தேர்வு செய்து அனுப்பாத காரணத்தால், தமிழ்த் திரையுலகத்தினர் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். தற்போது, ஆஸ்கர் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ படத்தை நேரடியாக அனுப்பி வைக்க பார்த்திபன் முயன்று வருகிறார்.
இதனிடையே தனது அடுத்தப் படத்தையும் வித்தியாசமான ஒரு படமாக உருவாக்கப் போவதாக தற்போது அறிவித்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.

இந்தப் புதிய படத்தை ஒரே ஷாட்டில் எடுக்கவுள்ளாராம். ‘இரவின் நிழல்’ என்று தனது புதியப் படத்திற்குப் பெயரிட்டுள்ளார் பார்த்திபன்.
‘ஒத்த செருப்பு’ படத்தில் ஒரேயொரு ஆளாக ஷோ காட்டிய பார்த்திபன், இந்தப் புதிய படத்தில் ஒரே ஷாட்டில் 100 கதாபாத்திரங்களை நடிக்க வைக்கப் போகிறாராம்.
இதற்காக இந்த கொரோனா லாக் டவுன் பீரியரை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தப் புதிய படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் ஒத்திகைப் பயிற்சியை அளித்து வருகிறார். தொடர்ச்சியாக 35 நாட்கள் இந்தப் பயிற்சி நடக்கிறதாம்.
வெறுமனே 10 நிமிடம் வரக் கூடிய ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகருக்கு 20 நாட்கள் தொடர் பயிற்சியளித்திருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.
2 மணி நேரம் ஓடக் கூடிய படமாக இருக்கும் இந்தப் படம் மொத்தத்தையும் தனது தோளில் தூக்கிச் சுமக்க இருப்பவர் ஒளிப்பதிவாளர் சந்தானகிருஷ்ணன்.
படத்தின் கதையைப் பற்றி மூச்சுவிட மறுக்கும் இயக்குநர் பார்த்திபன், “இதுவொரு திரில்லர் டைப் கதை…” என்று மட்டுமே சொல்கிறார்..!