தமிழ் மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் ‘பரியேறும் பெருமாள்’.
உலகெங்கும் வெற்றி நடை போட்டுவரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும், நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும்தான்.
சமத்துவத்தையும், பேரன்பையும் அழுத்தமாக பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு இன்று மதியம் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, ‘கராத்தே’ வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத் தொகுப்பாளர் செல்வா R.K., கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக் கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில் பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது, “இது வெற்றிச் சந்திப்பு அல்ல; நன்றி அறிவிப்பு மட்டும்தான். ஏனெனில், இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள்தான் பெரிதாகக் கொண்டாடினார்கள். ஒரு முறை எழுதியதோடு நிறுத்திவிடாமல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இதுவொரு கொண்டாட்டமான மனநிலை. ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயங்காட்டினார்கள். ஆனால் எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற.. சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற இது போன்ற படங்களை தமிழகத்து மக்கள் நிச்சயமாகக் கொண்டாடுவார்கள் என்று நம்பினேன். அதுவே நடந்தது.
‘அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும்’ என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல; எதையும் சொல்ல வேண்டிய முறையோடு சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். தொடர்ந்து நீலம் புரொடக்ஷன் இது போன்ற படங்களை தயாரிக்கும்…” என்றார்.
இயக்குநர் ராம் பேசுகையில், “இந்தப் படத்தின் வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி.
பா.ரஞ்சித்தின் படங்கள் வருவதற்கு முன்பும் தமிழ்ச் சினிமாவில் தலித் மக்கள் பற்றிய படங்கள் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால், ரஞ்சித் வந்த பிறகுதான் தலித்துகள் பற்றி சினிமா மேடையில் பேசியே ஆக வேண்டும் என்ற நிலை வந்தது.
‘எனக்கும் மாரி செல்வராஜுக்குமான உறவு தந்தை மகனுக்குமான உறவு’ என்று பலரும் சொன்னார்கள். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ஒரு தந்தை தன் பையனை அழைத்து நடந்து வருகிறார். மகன் ‘நிலா அருகே போவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும்..?’ என்று கேட்டான். ‘இப்படியே நடந்தால் நூறு வருடங்கள் ஆகும்’ என்றார் தந்தை. இருவரும் நடந்து வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் விளக்கு எரிந்தது. அந்த விளக்கு அருகே நிலாவும், நட்சத்திரமும் இருந்தன. அப்போது மகன் சொன்னான் ‘இதோ நிலாவிற்கு அருகே வந்துவிட்டோம்’ என்று..!
அதுபோல்தான் மாரி செல்வராஜ் என்னிடம் வரும்போது, நான் அவனிடம் ‘ஓடு… படி… எழுது… இது போதாது…’ என்று விரட்டிக் கொண்டே இருப்பேன். இதோ, இப்போது.. பன்னிரெண்டு வருடங்கள் கழித்து அவன் நிலாவாகவே மாறிவிட்டான். எங்கள் வீட்டு நிலாவை நீங்கள் கொண்டாடுவதில் எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி…” என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, “பரியேறும் பெருமாளை’ எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததைவிடவும் எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்து குவிந்தன. குறிப்பாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் பாராட்டியது என்னால் மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் அத்தனை பேரும் இந்தப் படத்தைப் பாராட்டினார்கள். அவர்களுக்கும் எனது நன்றிகள்..!
எல்லோரும் ‘முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை உங்களால் எப்படி எடுக்க முடிந்தது..?’ என கேட்டார்கள். எல்லாமே ரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கைதான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப் போவதில்லை. கடைசிவரை அவர் கூடவேதான் இருப்பேன்.
என்னுடைய உதவி இயக்குநர்கள், தயாரிப்பு தரப்பினர், கேமராமேன், எடிட்டர் எல்லோருக்குமே எனது நன்றிகள். சந்தோஷ் நாராயணன் சார் இந்தப் படத்தை முழுவதுமாக புரிந்து கொண்டு வேலை செய்தார். கதிர், ஆனந்தி, யோகிபாபு எல்லோரும் படத்திற்காக முழுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கும் நன்றி.
பரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரை தேடி அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்க சுற்றினோம். அதன் பின்னர் நிஜத்திலேயே கூத்துக் கலைஞரான தங்கராஜை பிடித்தோம். அவரை ஒரு வெள்ளரி தோட்டத்தில் நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரி பாடலை பாட சொன்னேன். அரை மணி நேரம் அவர் பாடியது என்னை உருக வைத்தது. உடனேயே அவரை தேர்ந்தெடுத்துவிட்டேன்.
படத்தில் உள்ளதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு கொண்டவர். நிஜத்தில் அவர் பயங்கரமான கோபக்கார மனிதர். முக்கியமான ஒரு காட்சியில் ‘அழ முடியாது’ என மறுத்தார். ஆனால், நான் அழுது காண்பித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். அதேபோல், அம்மணமாக ஓடும் காட்சியில் நடிக்கவும் முதலில் மறுத்தார். பின்பு முழுக் கதையையும் விளக்கிய பின்னர்தான் ஒப்புக் கொண்டார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் படம் பார்க்கும்வரை எனக்குள் பதற்றம் இருக்கும்…” என்றார்.













